மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 3 மாதங்களாக வன்முறை நீடித்து வருகிறது. இதில் மே 3ஆம் தேதி மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச மறுக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இன்று (ஜூலை 29) ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் குழு மணிப்பூர் சென்றுள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து கனிமொழி, திருமாவளவன், ரவிக்குமார் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மணிப்பூர் சென்றுள்ளனர்.
மணிப்பூர் சுராசந்த்பூர் பகுதிக்குச் சென்ற இந்தியா கூட்டணி குழு அங்குள்ள நிவாரண முகாமுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்துள்ளது.
இதன்பிறகு கனிமொழி எம்.பி செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஒரு பெண் தனது கணவன், மகனை இழந்துள்ளார். அதே நாளில் அவரது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்த மக்களுக்கு நீதியைத் தவிர வேறு என்ன வேண்டும். இங்கிருக்கிற நிலைமையைப் பார்க்கும் போது பரிதாபமாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் எம்.பி கவுரவ் கோகாய் கூறுகையில், “மணிப்பூர் மக்களின் வாழ்க்கையில் இயல்புநிலை திரும்புவதற்குப் பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அவர்களின் துயரங்களையும் தேவைகளையும் நன்கு புரிந்துகொள்ளும் நோக்கத்துடன் எங்கள் கூட்டணி நிவாரண முகாம்களுக்குச் சென்று வருகிறது.
மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பிவிட்டதாக மத்திய அரசு கூறுகிறது. அப்படி என்றால் இந்த மக்கள் எல்லாம் ஏன் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களால் ஏன் தங்கள் வீடுகளுக்குக் கூட செல்ல முடியவில்லை. இந்த மாவட்டத்தில் மட்டும் 300 முகாம்களில் 15,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியும் இந்த மாநில முதல்வரும் எங்கே போனார்கள். பிரதமர் மோடி அனைத்துக் கட்சிக் குழுவுடன் மணிப்பூருக்குச் செல்ல முடிவு செய்தால் நாங்கள் அவருடன் செல்ல விரும்புகிறோம்” என்று மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தார்.
பிரியா
”ஸ்டாலினை கலங்கடித்த பாதயாத்திரை”- அண்ணாமலை காட்டம்!
பட்டாசு குடோன் விபத்து: பிரதமர், முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!