‘சனாதனத்தை ஒழிக்கத்தான் “இந்தியா” கூட்டணி’: கொந்தளித்த மோடி

அரசியல் இந்தியா

சனாதனத்தை ஒழித்துக்கட்டத்தான் இந்தியா கூட்டணி உருவாகியிருப்பதாகப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு, கொசு, மலேரியா, கொரோனா போன்று சனாதனத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கூறினார்.

அதே மாநாட்டில் அமைச்சர் பொன்முடி பேசுகையில், “இந்தியா என்ற கூட்டணி சனாதன கொள்கைக்கு எதிராக உருவாக்கப்பட்ட கூட்டணி. எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் சனாதனத்தை எதிர்க்க வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த வேறுபட்ட கருத்தும் இல்லை” என்று கூறியிருந்தார்.

அமைச்சர்களின் இந்த பேச்சுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டத்திலேயே பிரதமர் மோடி, உதயநிதி சனாதனம் பற்றிப் பேசியது குறித்துப் பேசியிருக்கிறார். இதுகுறித்து மோடி கோபம்… கணக்குத் தீர்க்கும் கவர்னர்? காத்திருக்கும் உதயநிதி என்ற தலைப்பில் வெளியான டிஜிட்டல் திண்ணையில் குறிப்பிட்டிருந்தோம்.

இந்நிலையில் பொதுவெளியில் இன்று (செப்டம்பர் 14) பேசியிருக்கிறார் பிரதமர் மோடி.

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் நடைபெற்ற ரூ50,700 கோடி திட்டங்களுக்கு  அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, “இந்தியா கூட்டணி ‘சனாதன தர்மத்திற்கு’ அச்சுறுத்தலாக இருக்கிறது. நாட்டின் கலாச்சாரம் மற்றும் குடிமக்களுக்கு அச்சுறுத்தலாகவும் இருக்கிறது” என்று கடுமையாகத் தாக்கி பேசினார்.

தொடர்ந்து அவர், “ஒரு சில குழுக்கள் நாட்டையும் சமூகத்தையும் பிளவுபடுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளன. அந்த குழுக்கள் ஒன்றாக இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன.

இந்தியாவின் கலாச்சாரத்தைத் தாக்க அவர்கள் மறைமுகமான அஜெண்டாவை வைத்துள்ளனர். ‘சனாதன’ கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வர இந்தியக் கூட்டணி தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

இன்று வெளிப்படையாகவே சனாதனத்தைக் குறிவைக்க ஆரம்பித்து விட்டார்கள், நாளை நம் மீதான தாக்குதல்களை அதிகப்படுத்துவார்கள். நாடு முழுவதும் உள்ள அனைத்து ‘சனாதனிகளும்’ மற்றும் நம் நாட்டை நேசிக்கும் மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சனாதன தர்மம் தான் இந்தியாவை ஒற்றுமையுடன் வைத்திருக்கிறது.

சனாதனம் மீதான தாக்குதலுக்கு எதிராக ஒவ்வொரு சனாதனியும் போராட வேண்டும். இப்படிப்பட்டவர்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்” என்று கொந்தளித்துள்ளார்.

பிரியா

ஆர்.பி.வி.எஸ் மணியனுக்கு 14 நாட்கள் சிறை!

ரகுமான் இசை நிகழ்ச்சிக்கு கேளிக்கை வரி:  சென்னை மாநகராட்சி நோட்டீஸ்! 

+1
0
+1
6
+1
0
+1
1
+1
5
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *