‘இந்தியா’ கூட்டணிக்கு பெயர் வைத்தது யார்?

Published On:

| By Kavi

india alliance er eswaran interview

எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘இந்தியா’ என்ற பெயரை முதலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிதான் முன்மொழிந்தார் என்று கொ.நா.ம.தே. கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கூறினார்.

கடந்த ஜூன் 23ஆம் தேதி பிகார் மாநிலம் பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தை தொடர்ந்து ஜூலை 17, 18ஆம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் 26 கட்சிகள் கலந்துகொண்டன.

தமிழகத்தில் இருந்து திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, கொமதேக தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


இந்நிலையில் பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் நடைபெற்ற விவாதம், ஆலோசனை ஆகியவற்றை பற்றி கூட்டத்தில் கலந்துகொண்ட கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.

நம்மிடம் பேசிய ஈஸ்வரன், “இந்தியாவின் எதிர்க்கட்சிகள் இணைந்து வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒன்று சேர்ந்து வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு முதலில் பாட்னாவில் ஒன்று கூடி சந்தித்தோம்.

இரண்டாவது முறையாக பெங்களூருவில் இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் கட்சி செய்திருந்தது. பாட்னாவில் 17 எதிர்க்கட்சிகள் சந்தித்த நிலையில் பெங்களூருவில் மொத்தமாக 26 கட்சிகள் சந்தித்தோம்.

பெங்களூருவில் சந்தித்த 26 கட்சிகளில் 24 கட்சிகளுக்கு  நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்டு.

எதிர்க்கட்சி கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர் மக்கள் மத்தியில் மட்டுமல்ல, இருக்கிற அனைத்து கட்சிகளின் மத்தியிலும் பிரபலமாகும் என்பது எங்களுக்கு பெயர் வைக்கும்போதே தெரியும். இந்தியா என்ற பெயர் மக்கள் மத்தியில் பிரபலாகும் என்று அறிந்தேதான் வைத்தோம்.

யாரோ சொன்னார்கள் என்பதற்காக வைக்கவில்லை. அனைவரும் விவாதித்து, ஒருமித்த கருத்து ஏற்பட்ட பிறகே தான், மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்கள் மத்தியில் கூறினார்.

என்ன நினைத்தோமோ அது நடக்கிறது. மோடி vs இந்தியா, என்.டி.ஏ vs இந்தியா என்று கண்டிப்பாக ஊடகங்களில் பேசப்படும் என்று நினைத்தோம். அது இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது.

பாஜக உட்பட பலரும் இந்த கூட்டணி ஒன்று சேராது, பாட்னாவில் கூடியவர்களில் 4,5 பேராவது பெங்களூருவுக்கு வரமாட்டார்கள் என்றெல்லாம் அவர்களுடைய யூகத்தை தெரிவித்தனர்.

அதையெல்லாம் தாண்டி அதிகப்படியான கட்சிகள் இங்கு சந்தித்தோம். வெவ்வேறு மாநிலத்தில் வலிமையாக இருக்கிற கட்சிகள் எல்லாம் சந்தித்திருக்கிறோம்.

சந்தித்த கட்சிகளை பார்த்தால், இதில் 11 பேர் முதலமைச்சர்கள். அப்படி ஒரு வலுவான கூட்டணி அமைந்திருக்கிறது.

இந்த கூட்டத்தில் ஒவ்வொருவரும் ஆர்வமாக இந்த கூட்டணி முழுமையாக வேகமாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினர். இதை பார்க்கும் போது இந்த கூட்டணி இனி பிரிவதற்கு வாய்ப்பு கிடையாது.

ஒவ்வொருவருக்கும் கொள்கை வித்தியாசம் இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனிப்பட்ட தேவை இருக்கிறது. ஒரு மாநில முதலமைச்சருக்கும் இன்னொரு மாநில முதலமைச்சருக்கும் பிரச்சினை இருக்கிறது. அதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், தேசம் என்று வரும் போது நாமெல்லாம் ஒரே அணியில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து இந்தியா என்ற இந்த அணி உருவாகியிருக்கிறது” என்றார்.

இந்தியா என பெயர் வைப்பதற்கு நடந்த விவாதம் குறித்து பேசிய ஈஸ்வரன், “இது ஒரு கட்சிக்குள் நடக்கிற நிகழ்வு அல்ல. 26 கட்சிகள் ஒன்று சேர்ந்து பெயர் வைக்க வேண்டும். அங்கு வந்திருக்கக் கூடிய தலைவர்கள் பெரும்பாலும் மாநில முதலமைச்சர்கள், செல்வாக்கு மிக்கவர்கள்.

மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன், நிதிஷ் குமார், உத்தவ் தாக்ரே, சரத் பவார் என வந்திருந்த அனைவரும் செல்வாக்கு மிக்கவர்கள். அப்படி என்றால் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்து இருக்கத்தான் செய்யும்.

india alliance er eswaran interview

இந்த பெயரை பொறுத்தவரை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தான் முதன் முதலில் முன்மொழிந்தார். அடுத்ததாக முதல்வர் ஸ்டாலின் வழிமொழிந்தார். எங்களை போன்றவர்கள் அந்த பெயரை ஏற்றுக்கொண்டோம்.

பிகார் முதல்வர் நிதிஷ் குமார் வேறு பெயரை சொன்னார். கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் வேறு பெயரை சொன்னார்கள். இப்படி அவரவர் ஒவ்வொரு பெயரை சொன்னார்கள். அந்த பெயர்கள் ஏன் சொன்னோம் என்பதை விளக்கமளித்தார்கள்.

இந்த விளக்கத்தை தொடர்ந்து அனைவரும் இந்தியா என்ற பெயர்தான் சரியாக இருக்கிறது என்று ஒத்துக்கொண்டனர். ஒருமித்த கருத்தோடு இந்தியா பெயர் வைக்கப்பட்டது.

இந்தியா என்ற பெயரை வைக்க கம்யூனிஸ்ட் கட்சியினரையும், நிதிஷ் குமார் போன்றவர்களையும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஒப்புக்கொள்ள வைத்தார்.

india alliance er eswaran interview

சோனியா காந்தி வெறும் அரை நிமிடம் தான் பேசினார். இந்தியா என்று பெயர் வைக்க விவாதம் வந்த போது, தன்னுடைய இருக்கையில் இருந்து எழுந்து சென்று மற்றவர்களிடம் எடுத்துச் சொல்லி ஒப்புக்கொள்ள வைத்தார்.

தன்னுடைய உடல்நலனையும் பொருட்படுத்தாமல் இருக்கையில் இருந்து எழுந்து சென்று பேசினார். அதை எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள். இது காங்கிரஸ் பேரியக்கத்தின் விட்டுக்கொடுக்கிற தன்மையை காட்டியது. இதில் ஈகோ என்று எதுவும் கிடையாது.

அரசியல் ரீதியாக இந்த கூட்டணி வலுவாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. எல்லாவற்றுக்கும் நாங்கள் ஃப்ளக்சிபிள் என்று ராகுல் காந்தி வெளிப்படையாகவே பேசினார். இது எவ்வளவு பெரிய வார்த்தை.

india alliance er eswaran interview

இந்த கூட்டத்தில் தனிப்பட்ட விவாதம் எதுவும் நடைபெறவில்லை. கூட்டணிக்கு பெயர் வைப்பதற்கு மட்டும் தான் விவாதம் நடந்தது. இதற்குதான் அன்று கூட்டமே நடந்தது.
இனி எதிர்க்கட்சிகள் கூட்டம் என்று சொல்ல வேண்டும் என்றில்லை. இந்தியா கூட்டணி என்று சொல்லலாம்” என்று கூறினார் ஈஸ்வரன்.

பேட்டியை முழுமையாக வீடியோவாக காண :  https://www.youtube.com/watch?v=iD_Y-oA4k8Y&t=73s

நெறியாளர் : பெலிக்ஸ் இன்ப ஒளி

தொகுப்பு : பிரியா

‘இந்தியா’ : மோடிக்கு ராகுல் பதில்!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel