ராஜன் குறை
நான்கு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. தெலங்கானாவில் ஆளுகின்ற பாரதிய ராஷ்டிரிய சமிதியை தோற்கடித்து காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது.
மற்ற மூன்று வட மாநிலங்களான மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்திஸ்கர் ஆகியவற்றில் பாஜக வென்றுள்ளது. இது பாஜக-விற்கு பெரும் வெற்றியாகவும், காங்கிரஸிற்கு பெரும் சரிவாகவும் பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் மக்களவை தேர்தலில் இந்த மாநிலங்களின் பங்கு என்ன? பாஜக வெற்றிக்கு அவை உத்திரவாதமளிக்குமா என்பதெல்லாம் விவாதிக்கப்படுகின்றன.
மத்தியப் பிரதேசத்தின் மக்கள் தொகை ஏழேகால் கோடி. மக்களவை இருக்கைகள் 29.
ராஜஸ்தான் மக்கள் தொகை ஆறே முக்கால் கோடி. மக்களவை இருக்கைகள் 25.
சத்திஸ்கர் மக்கள் தொகை இரண்டரை கோடி. மக்களவை இருக்கைகள் 11.
தெலங்கானாவின் மக்கள் தொகை மூன்றரை கோடி. மக்களவை இருக்கைகள் 17.
சேர்த்துச் சொன்னால் மொத்தம் 65 மக்களவை இருக்கைகள் கொண்ட வட மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 17 மக்களவை இருக்கைகள் கொண்ட தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
ஏற்கனவே குஜராத், உத்திரப்பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய மூன்று பாஜக ஆளும் மாநிலங்களில் 120 மக்களவை தொகுதிகள் உள்ளன. ஹரியானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கூட்டணி ஆட்சியில் பாஜக இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில், இந்த மூன்று பெரிய மாநிலங்களிலும் வென்றதால் பாஜக மக்களவையில் பெரும்பான்மை தொகுதிகளை வெல்வதற்கு சாத்தியங்கள் அதிகரிப்பதாக கூறலாம். சற்றேறக்குறைய 250 மக்களவை தொகுதிகள் கொண்ட மாநிலங்களில் பாஜக தனியாகவோ, கூட்டணியிலோ ஆட்சி செய்கிறது எனலாம்.
ஆனால் தென் மாநிலங்கள் எதிலும் பாஜக ஆட்சியில் இல்லை என்பதுடன், தெலங்கானாவில் பி.ஆர்.எஸ்-சிற்கு எதிரான அதிருப்தி அலையை தங்களுக்கு சாதகமாக பாஜக-வால் பயன்படுத்த முடியவில்லை. காங்கிரஸ் அங்கே வென்றுள்ளது.
மேற்கு வங்கம், பீகார், பஞ்சாப், டெல்லி, உத்திராகண்ட், ஜார்கண்ட், ஒரிசா ஆகிய முக்கிய மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்யவில்லை.
மகாராஷ்டிராவில் மிகப்பெரிய அரசியல் குழப்பத்தை அரங்கேற்றியே ஆட்சியில் பாஜக ஒட்டிக்கொண்டுள்ளது. எதிர்க்கட்சிகள் இரண்டை பிளந்து அதில் குளிர் காய்கிறது. நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளன. நீதிமன்றம் என்ன சொன்னாலும், மக்கள் மன்றம் என்ன கூறப்போகிறது என்பதே முக்கியம்.
பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் எல்லாம் மக்களவை தேர்தலில் அது பெருவாரியான தொகுதிகளை கைப்பற்றும் என்பது உத்திரவாதமில்லை. உ.பி, ம.பி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் மாநில தேர்தலில் ஒரு கட்சிக்கும், மக்களவை தேர்தலில் மற்ற கட்சிக்கும் வாக்களிப்பதை பார்த்துள்ளோம்.
மேலும் ராஜஸ்தான், சத்திஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது. கணிசமான தொகுதிகளையும் வென்றுள்ளது. வலுவான கட்சியாகவே தேர்தல் களத்தில் நின்றுள்ளது.
எனவே 2024 மக்களவை தேர்தல் களம் நிச்சயம் கடும் போட்டிக்கான களமாகவே உள்ளது எனலாம். இந்தியா கூட்டணி தங்கள் தரப்பை மக்களிடம் எடுத்துச் செல்வதில் முனைப்புடன் இயங்கினால் வெற்றி நிச்சயம். பாஜக எந்த விதத்திலும் அசைக்க முடியாத பலத்துடன் மக்கள் மன்றத்தில் விளங்கவில்லை.
பாஜக அதிகாரங்களை ஒன்றிய அரசில் குவித்துக்கொள்ளும் பாசிச முனைப்புடன் இருக்கலாம். ஆனால் மக்களின் ஆதரவை குவிப்பதில் அது நிச்சயம் வெற்றி பெறவில்லை. எல்லா மாநிலங்களிலுமே அதற்கு கணிசமான எதிர்ப்பு உள்ளது. அதிக வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் தான் வெல்கிறதே தவிர மக்களின் ஏகோபித்த ஆதரவால் இல்லை.
இந்துத்துவமோ, மோடி அலையோ அதற்கு தானாக வெற்றியை பெற்று தரும் என்று கருத வாய்ப்பே இல்லை. மாநிலத்திற்கு மாநிலம் கடுமையாக போராடியே அது மக்களவை தேர்தலில் வெல்ல முடியும்.
மாநிலங்களின் தனித்துவம்
தேர்தல் வெற்றி தோல்விக்கான காரணங்களை விவாதிப்பது, அலசுவது, ஆராய்வது என்பது சமூகத்திலும், ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் மிகப் பரவலாக நடக்கிறது. அது இயல்பானது தான்.
ஆனால் இந்த விவாதங்களில், அலசல்களில் பரவலாக காணக்கூடிய பலவீனம் அவரவர் முன்னிலைப்படுத்தும் அம்சத்தை ஒற்றை காரணமாகவோ, முக்கிய காரணமாகவோ, பொதுக் காரணமாகவோ முன்வைப்பது தான்.
எல்லா மாநிலங்களுக்கும் பொதுவான காரணங்கள் என்று எதுவும் கிடையாது என்றே சொல்லலாம். மத்தியப்பிரதேசத்தில் மோடி அலை வீசியதென்றால், தெலங்கானாவில் ஏன் வீசவில்லை? தலை நகர் டெல்லியிலேயே வீசவில்லையே?
இந்துத்துவத்திற்கு ஆதரவு பெருகிவிட்டது என்றால் அது ஏன் உத்திரப் பிரதேசத்தைக் கடந்து பீகாருக்குள் நுழைய முடியவில்லை? வங்காளிகள் எல்லாம் இந்துக்கள் இல்லையா? ஒடியாவில் இந்துக்கள் இல்லையா? அங்கேதானே பூரி ஜெகன்னாதர் கோயில் இருக்கிறது?
ஒவ்வொரு மாநில அரசியலும் அந்த மாநில அளவிலேயே தீர்மானிக்கப்படுகிறது. அதையும் கடந்து மாநிலத்திற்குள் உள்ள பல்வேறு பிரதேசங்கள் அடிப்படையிலும், ஏன் தொகுதி அடிப்படையிலும் கூட தீர்மானிக்கப்படுகிறது.
எனவே மத்தியப் பிரதேசத்தில் காங்கிரசின் தோல்விக்கான காரணங்கள் வேறு; அது சிவராஜ் சிங் செளஹானின் பாஜக அரசு பெண்களுக்கான மாதாந்திர உரிமைத் தொகையை (தமிழ்நாட்டு பெயர்) வழங்கியதாகக் கூட இருக்கலாம்.
ராஜஸ்தானில் 2% வாக்கு வித்தியாசத்தில் அசோக் சிங் கெலாட் தோற்றதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். அவற்றில் எந்த காரணம் பிரதான காரணம் என்பதை கண்டறிவதற்கு பெரிய அளவில் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
காரணங்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுவது மட்டுமல்லாமல், தருணத்திற்கு தருணம் மாறுபடுவதுமாகும். வாக்குப் பதிவுக்கு முந்தைய நாள் நிகழ்ந்த ஒரு சம்பவம் கூட கணிசமான வாக்காளர்களின் தேர்வை பாதிக்கலாம்.
சென்ற 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது புல்வாமா என்ற இடத்தில் நிகழ்ந்த தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பாஜக அரசின் கவனமின்மையே காரணம் என்று பிரசாரம் செய்வதற்குப் பதிலாக, பாஜக அதனை தேசபக்தி முழக்கமாக மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்பட்டதை பார்த்தோம். அது தேர்தலில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்றே தோன்றுகிறது. பல ஆய்வாளர்களும் அப்படியே கூறுகிறார்கள்.
இது போன்ற தாற்காலிக நிகழ்வுகள் ஏற்படுத்தும் தாக்கங்கள், உள்ளூர், பிரதேச நிலவரங்கள் என பல்வேறு காரணங்களின் தொகுப்பாகத்தான் தேர்தல் வெற்றி தோல்விகள் அமைகின்றன. அதில் கருத்தியல், பிரசாரம், தலைவர்களின் ஆளுமை, வேட்பாளர்களின் ஆளுமை என பல்வேறு அம்சங்களும் இடம் பெறத்தான் செய்கின்றன.
எல்லாவற்றையும் நாம் கவனமாக பரிசீலிக்கும்போது காங்கிரஸ் இன்னமும் பல வட மாநிலங்களில் வலுவாகத்தான் இருக்கிறது என்பதை கருத்தில் கொள்ளத்தான் வேண்டும்.
வட மாநிலங்களும், தென் மாநிலங்களும்
தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதன் காரணமாக வட மாநிலங்களுக்கும், தென் மாநிலங்களுக்கும் சாராம்சமான பல வேறுபாடுகள் கற்பிக்கப்படுகின்றன. இதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
“இந்து, இந்தி, இந்தியா” என்ற புகழ்பெற்ற வலதுசாரி முழக்கத்தில் இந்தி என்ற மொழி சார்ந்த அம்சத்தில்தான் வடக்கிற்கும், தெற்கிற்கும் முக்கிய வேறுபாடு நிலவுகிறது. ஏனெனில் வட இந்தியாவில் சமஸ்கிருத மயமான இந்தி மொழி கட்டமைக்கப் பட்டதற்கும், இந்து அடையாளம் கட்டமைக்கப்பட்டதற்குமான வரலாற்று இணையுறவு முக்கியமானது.
இந்துஸ்தானியிலிருந்து உருது மொழியை பிரித்தெடுத்து அதை முஸ்லீம்கள் மொழியாகக் கட்டமைத்து, சமஸ்கிருதவயப்பட்ட இந்தியை நாகரி எழுத்தில் எழுதி அதை தேவ நாகரி என்று அழைத்து அதன் மூலம் இந்து அடையாளத்தையும் மொழி சார்ந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் உருவாக்கினர்.
ஆனால் தலித் மக்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னேறிய வகுப்பினர் ஆகியோருக்கு இடையேயுள்ள பாகுபாடும், ஏற்றத்தாழ்வும் வட இந்திய சமூகங்களில் வலுவாக உள்ளதுடன், தொடர்ந்து அரசியல் அணியாக்கத்திற்கும் வலு சேர்க்கின்றன.
அதனால் வட இந்தியாவில் “இந்தி-இந்து” அரசியல் மந்திர் அரசியலாகவும், சமூக நீதி அரசியல் மண்டல் அரசியலாகவும் எண்பதுகளின் இறுதியில் பரிணமித்தது. இந்த அரசியல் முரண்பாட்டிற்கு இன்னமும் உயிர் இருக்கிறது.
அதனால் இந்தியா கூட்டணியின் சமூக நீதி அரசியலில் வடக்கும், தெற்கும் ஒன்றிணைந்து பயணப்படும் சாத்தியங்கள் கணிசமாக உள்ளன. தமிழ்நாட்டு முதல்வர் சென்ற வாரம் வி.பி.சிங் அவர்களின் திருவுருவச் சிலையை சென்னையில் திறந்து வைத்ததும், அதற்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை அழைத்ததும் குறிப்பிடத் தக்கது.
மொழி அடிப்படையில் நாம் தென்னிந்தியாவை திராவிடம் என அழைத்தாலும், பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர், தலித்-பகுஜன் அரசியல் என்ற அளவில் மொத்த இந்தியாவையுமே திராவிட பண்பாடாக கருதவும் இடம் இருக்கிறது. அதனால் வடக்கு தெற்கு வேறுபாட்டை ஒற்றைப் பரிமாணத்தில் சாராம்சப்படுத்த தேவையில்லை.
இந்துத்துவர்களின் கற்பனை
தொலைக்காட்சி விவாதத்தில் பாஜக ஆதரவாளர் ஒருவர் வட மாநிலங்களில் பாஜக வெல்வதற்குக் காரணம் முகலாயர் ஆட்சியில் இந்துக்களெல்லாம் கொடுமைப் படுத்தப்பட்டதுதான் என்றார்.
இது முற்றிலும் வரலாற்றுத் திரிபு, புனைவு என்பது வரலாற்றை படித்தவர்களுக்குத் தெரியும். அக்பரின் அவையில் தோடர்மால், பீர்பால் ஆகியோர் வகித்த பங்கு வெகுமக்களின் பேச்சு வழக்கிலேயே இடம் பெற்றதுதான்.
அப்படியே இருந்தாலும் கூட, காங்கிரஸ் கட்சி நேருவின் காலத்தில் வென்றபோதும், இந்திரா காந்தி காலத்தில் வென்ற போதும், ஏன் 1984-ஆம் ஆண்டு ராஜீவ் காந்திக்கு பேரலையான ஆதரவை அளித்தபோதும் முகலாயர் காலத்தை வட இந்தியாவில் மறந்து போய்விட்டனரா என்ன? அல்லது முலாயம் சிங்கும், அகிலேஷ் யாதவும் உத்திரப் பிரதேசத்தில் வென்றபோது மறந்து போய்விட்டார்களா?
தென்னிந்தியாவை முகலாயர்கள் ஆளவில்லை என்றாலும், எத்தனையோ முஸ்லீம் சுல்தான்களும், நவாப்களும் ஆளவில்லையா என்ன? அதற்காக தென்னகத்து மக்களெல்லாம் பாஜக-வை ஆதரித்து விடுவார்களா? திப்பு சுல்தானை பற்றி எத்தனையோ பொய்களை புனைந்தார்களே? அதனால் கர்நாடகாவில் வென்றுவிட்டார்களா?
இது போன்ற அர்த்தமற்ற காரணங்களை அறிந்தோ, அறியாமலோ பலரும் கூறுகின்றனர். முஸ்லீம்களுக்கு எதிரான அடையாளமாக இந்துக்களை கட்டமைப்பது என்பது காலனீய காலகட்டத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் துவங்கிய நடைமுறை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
அந்த இந்து அடையாளவாத தேசியத்தை மறுத்து இந்து முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தியதால்தான் காந்தி கொல்லப்பட்டார். ஆனால் மக்கள் இன்றும் காந்தியை மிகுந்த மரியாதையுடன் வணங்குகின்றனர். காந்தியின் நினைவை இந்திய மக்களிடமிருந்து அகற்ற முடியாது.
இந்தியா கூட்டணியின் சமூக நீதி அரசியல் ஒட்டுமொத்த இந்தியாவையும் திராவிட பண்பாட்டின் அடையாளமாக்க வேண்டும். பார்ப்பன-பனியா கருத்தியல் மேலாதிக்கத்தை தகர்க்க வேண்டும்.
கட்டுரையாளர் குறிப்பு:
ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
மிக்ஜாம் புயலாக மாறிய அஜின்கியா பவார்: தமிழ் தலைவாஸ் அபார வெற்றி!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!