தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு (இன்று – ஆகஸ்ட் 15) தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றினார்.
அப்போது சுதந்திரத்துக்காக இன்னுயிரை தியாகம் செய்தவர்களை நினைவு கூர்ந்த அவர், இந்த விடுதலை நமக்கு எளிதாக கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
தேசிய கொடியை ஏற்றும் உரிமையை மாநில முதல்வர்களுக்கு வாங்கிக் கொடுத்த கலைஞரை பற்றி பேசிய ஸ்டாலின், தற்போதைய அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்தும் கூறினார்.
2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 75,000க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்தார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிவிப்புகளை வெளியிட்ட அவர், “
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நடுத்தர குடும்பங்கள் மருந்துகளை அதிகம் விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு தொடர்ந்து மருந்துகளை வாங்க வேண்டியுள்ளதால் அதிக செலவுகள் ஏற்படுகின்றன.
இதற்கு தீர்வாக குறைந்த விலையில் மருந்துகள் வழங்கும் ‘முதல்வர் மருந்தகம் திட்டம்’ செயல்படுத்தப்படும்.வரும் பொங்கல் திருநாள் முதல் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 1,000 மருந்தகங்கள் தொடங்கப்படும். இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட மருந்தாளுநர்களுக்கும் கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடனுதவியோடு 3 லட்சம ரூபாய் மானியம் வழங்கப்படும்.
முன்னாள் ராணுவ வீரர்களின் நலன் காக்க அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகளில் கடன் பெற வழிவகை செய்யப்படும். இதில் 30 விழுக்காடு மூலதன மானியமும், 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும். திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் வழங்கப்படும்.
அடுத்த 2 ஆண்டுகளில் 400 முன்னாள் ராணுவத்தினர் பயன்பெறும் வகையில் 400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு 120 கோடி ரூபாய் முதலீட்டு மானியம் மற்றும் 3 விழுக்காடு வட்டி மானியம் வழங்கப்படும்.
மாநில அரசால் வழங்கப்படும் தியாகிகள் ஓய்வூதியம் ரூ.21 ஆயிரமாக உயர்த்தப்படும். குடும்ப ஓய்வூதியம் ரூ.11,500 ஆக அதிகரிக்கப்படும்.
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கை சீற்றங்களால் கடும் பாதிப்பு ஏற்படுகிறது.
வயநாடு சம்பவத்தின் எதிரொலியாக, நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்து பல்துறை வல்லுநர்களால் விரிவான ஆய்வு செய்யப்படும்” என்று அறிவிப்புகளை வெளியிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
மூன்று கான்களையும் இயக்க ஆசை: கங்கனா
கலைஞர் பெற்று தந்த உரிமை: 50ஆவது ஆண்டில் கொடியேற்றும் ஸ்டாலின்