Increase in milk procurement

விரைவில் பால் கொள்முதல் அதிகரிப்பு: அமைச்சர் மனோ தங்கராஜ்

அரசியல்

விரைவில் கொள்முதலை அதிகரித்து 70 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறனுக்கு திட்டமிட்டு உள்ளோம் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று (ஜூன் 13) மதுரை ஆவின் தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் ஆவின் அதிகாரிகளோடு ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இந்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,

“பொதுத் துறை நிறுவனமான ஆவினை மேலும் பலப்படுத்தக் கூடிய தேவை இருக்கிறது. பல ஆவின் தொழிற்சாலைகளைத் தொடர்ச்சியாகப் பார்வையிட்டு வருகிறேன். இன்று முதன் முறையாக மதுரை ஆவின் தொழிற்சாலையை ஆய்வு செய்து உள்ளேன்.

பால் உற்பத்தியாளர்களை அழைத்து அவர்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்து அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டமும் நடத்தி உள்ளேன். பால் உற்பத்தியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி உள்ளேன்.

வருங்காலங்களில் ஆவின் நிறுவன சேவைகளை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் இறங்க உள்ளோம். பால் உற்பத்தி இந்தியா முழுவதும் கடந்த காலங்களை விட குறைந்து வருகிறது.

பால் உற்பத்தியிலும் பால் கொள்முதலிலும் பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றை ஒட்டு மொத்தமாக மறுக்கவில்லை.

பாலைக் கொள்முதல் செய்து பாக்கெட்டுகளில் விற்பனை செய்வதை மட்டும் ஆவின் மேற்கொள்ளவில்லை.

பால் உற்பத்தியாளர்களுக்கு கறவை மாடுகள் வாங்க கடன் உதவி, பராமரிக்க நிதி உதவி, கறவை மாடுகள் நோய்வாய்ப்பட்டால் மருத்துவ நிதியுதவி, விவசாயிகள் மற்றும் கறவை மாடுகளுக்கு காப்பீடு திட்டம் என பலவற்றை எங்களது துறை வழங்கி வருகிறது.

ஆவின் சேவைகளை மேம்படுத்தி, பால் கொள்முதலை எதிர்காலங்களில் அதிகரிக்க தீவிர முயற்சி செய்து வருகிறோம்.

தற்போது உள்ள 45 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறனை, விரைவில் அதிகரித்து 70 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறனுக்கு திட்டமிட்டு உள்ளோம்.

அதற்காக இரண்டு லட்சம் கறவை மாடுகளை பால் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு இந்த நிதியாண்டில் வழங்க உள்ளோம்.

ஆவின் தொழிற்சாலைகளைப் பார்வையிடுவதன் மூலம் குறைகளைக் கண்டறிந்து ஆவினின் செயல்திறனை மேம்படுத்த உள்ளோம்.

பால் கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும் என்ற பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களின் கோரிக்கையை தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கண்டிப்பாக எடுத்துச் செல்வோம்.

ஆவினின் உப தயாரிப்புகளான பால்கோவா, ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களின் சுவை மற்றும் குறைந்த விலை காரணமாக கடந்த இரு மாதங்களில் விற்பனை அதிகரித்ததோடு, தேவையும் அதிகமாக உள்ளது. அவை தட்டுப்பாடின்றி கிடைக்க உற்பத்தியை அதிகப்படுத்த திட்டமிட்டு உள்ளோம்.

ஆவின் துணை தயாரிப்புகளை நிறுத்தப் போவதாக வரும் புரளியை நம்ப வேண்டாம். அவற்றின் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சிகளில் ஆவின் இறங்கி உள்ளது” என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

வானதி அலுவலகத்துக்குள் புகுந்த நபர் மரணம்: நடந்தது என்ன?

அண்ணாமலைக்கு கண்டனத் தீர்மானம்: தானே வாசித்த  எடப்பாடி

Increase in milk procurement in tamilnadu mano thangaraj madurai
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *