சமூகநீதி பேசும் தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
இன்று (டிசம்பர் 6) பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு நாள். மதம், மானுடவியல், சமூக அறிவியல் என பலவற்றில் ஆழ்ந்த அறிவு கொண்டவர். வழக்கறிஞர், பத்திரிகையாளர் என பன்முக திறமை கொண்டவர்.
அவரது நினைவு தினத்தை முன்னிட்டு, ஆளுநர் மாளிகையில் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
அந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “விரிவான, வலுவான மற்றும் உறுதியான அரசியலமைப்பை வடிவமைப்பதிலும், நீதிசார்ந்த மற்றும் சமத்துவ இந்தியாவுக்கான அரசியலமைப்பு அடித்தளத்தை அமைப்பதிலும் முக்கிய பங்கு வகித்தார் அம்பேத்கர்.
தமிழ்நாட்டில் தலித் சமுதாயத்துக்கு எதிரான குற்றங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் 40% அதிகரித்துள்ளது. தலித் சமூக பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு வழக்குகளின் தண்டனை எண்ணிக்கை கவலையளிக்கும் வகையில் தேசிய சராசரி தண்டனை விகிதத்தில் பாதியாக உள்ளது.
தலித் மக்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை, அவர்கள் அருந்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்படுகிறது என தினம்தோறு பல்வேறு செய்திகளை பார்க்கிறோம்.
ஒரு காலத்தில் பாபாசாகேப் கொண்டிருந்த பார்வையின் மையமாக இருந்த சமூக நீதி, துரதிருஷ்டவசமாக வெறும் அரசியல் முழக்கமாக மாறிவிட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் உறுப்பினர்களுக்குப் பதவி மறுப்புச் செய்திகள் இந்தக் கடுமையான அநீதியை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
பிரதமர் மோடியால் விடுக்கப்பட்ட அழைப்பின்படி, நமது அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட 75 வது ஆண்டை தேசம் ஆண்டு முழுவதும் கொண்டாடுகிறது.
இந்த தருணம் பாபாசாகேப்பின் கொள்கைகளுக்கு ஏற்ப வாழ்வதற்கான நமது கூட்டு மற்றும் தனிப்பட்ட பொறுப்பின் சக்திவாய்ந்த நினைவூட்டலாக அமையட்டும்.
இந்த தருணத்தை ஒரு சமூக இயக்கமாக மாற்றுவோம். பாபாசாகேப்பின் தொலைநோக்குப் பார்வையை நிலைநிறுத்தவும் உள்வாங்கவும், வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சத்திலும் சமூக நீதிக்காக இடைவிடாமல் போராடவும் உறுதியேற்போம்” என்று கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
திமுக வெற்றி பெற முக்கிய பங்காற்றிய ஆதவ் அர்ஜூனா : நூல் வெளியீட்டு விழாவில் வெளியான வீடியோ!
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு – 2000 கோடி கேட்ட ஸ்டாலின் : மோடி கொடுத்தது எவ்வளவு?