அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்கள் மட்டுமின்றி அவரது சகோதரர், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் அதிரடியாக இன்று (மே 26) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக பணியாற்றி வரும் செந்தில் பாலாஜி முந்தைய அதிமுக அரசில் அமைச்சராக இருந்த போது வேலைவாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பான சமீபத்திய விசாரணையில் இந்த புகார் குறித்து மீண்டும் தீவிரமாக விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதேவேளையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் செந்தில் பாலாஜி தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று(மே 26) காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
அவருக்கு தொடர்புடைய இடங்கள் மட்டுமின்றி கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீடு மற்றும்,
சென்னையில் உள்ள அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல் கோவை கோல்ட் வின்ஸ் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான செந்தில் கார்த்திகேயன் என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.
பழிவாங்கும் நடவடிக்கையா?
கடந்த 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சியமைத்ததில் இருந்து தமிழ்நாட்டு அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுவது இதுவே முதல்முறை.
மேலும் முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கும் போது அவருடைய அமைச்சரவையில் உள்ள அமைச்சர் ஒருவரது வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே மக்களவைத் தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை திரட்டுவது மற்றும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறக்கும் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் திமுக அரசுக்கு எதிராக,
பழிவாங்கும் நோக்கில் மத்திய அரசு வருமான வரித்துறை சோதனையை எடுத்துள்ளதா என்று கேள்வியும் எழுந்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
முதல்வர் முன்னிலையில் ஜப்பான் நிறுவனத்துடன் ரூ.83 கோடி ஒப்பந்தம் கையெழுத்து!
புதிய நாடாளுமன்ற விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!