அமைச்சர் எ.வ.வேலு அவரது மகனுக்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக 200க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் இன்று (நவம்பர் 4)சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக அமைச்சரவையில் அதிக நிதி ஒதுக்கீடு பெறும் துறைகளான பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, சிறு துறை முகங்கள் துறை என மூன்று முக்கிய துறைகள் அமைச்சர் எ.வ.வேலுவிடம் உள்ளன.
இந்த நிலையில், திருவண்ணாமலையை அடுத்த தென்மாத்தூரில் உள்ள அமைச்சரின் வீடு மற்றும் கல்வி நிறுவனங்களில் 200க்கும் மேற்பட்ட வருமானத்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனையை தொடங்கினர்.
விடிய விடிய நடந்து வரும் சோதனையானது இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது.
மேலும் எ.வ.வேலுவை தொடர்ந்து திண்டிவனம் சாலையில் உள்ள அவரது மகன் கம்பன் வீட்டிலும் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து சோதனை நடைபெறும் இடங்களில் ஆயுதம் தாங்கிய சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சோதனையின் முடிவில் தான், வருமானத்துக்கு அதிகமான சொத்துகுவிப்பா அல்லது வருமான வரி ஏய்ப்பா என்பது தெரியவரும்.
திமுக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி, ஜெகத்ரட்சகன் எம்.பி. ஆகியோரது வரிசையில் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களிலும் தற்போது வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருவது திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னதாக கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலையொட்டி அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.
இரண்டு நாட்கள் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள், பணம் கைப்பற்றப்பட்டதாக அப்போது தகவல் வெளியானது.
அதனைத்தொடர்ந்து தற்போது மீண்டும் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மாணவர்களை அடித்த விவகாரம்: நடிகை கைது!
’மார்வெல் படத்தில் விஜய் நடிக்கலாம்’: சமந்தா