வைஃபை ஆன் செய்ததும் திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு நடத்திய பிரஸ்மீட் வீடியோ இன்பாக்ஸில் வந்து விழுந்தது.
அதைப் பார்த்து முடித்துவிட்டு வாட்ஸ்அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
”கடந்த நவம்பர் 3ஆம் தேதி அதிகாலையில் இருந்து நவம்பர் 7ஆம் தேதி இரவு 10 மணி வரை தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு தொடர்பான இடங்களில் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் என்று கருதப்படுகிறவர்களின் இடங்களில் மத்திய அரசின் வருமான வரித்துறை முழுமையாக 5 நாட்கள் ரெய்டு நடத்தியது.
நேற்று இரவு 10 மணிக்கு ரெய்டு முடிந்த நிலையில் திருவண்ணாமலையில் உள்ள அவருடைய கல்லூரி கெஸ்ட் ஹவுஸில் இருந்த அமைச்சர் வேலு, மாவட்ட திமுக அலுவலகத்தில் பிரஸ்மீட் நடத்த ஏற்பாடு செய்யுமாறு நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார்.
அப்போது லோக்கல் பத்திரிகையாளர்கள், ’இங்க கெஸ்ட் ஹவுசிலேயே பிரஸ்மீட்டை நடத்தி விடலாமே?’ என்று கேட்க… ‘இல்லை… இல்லை. இது என்னுடைய அரசியல் வாழ்வுக்கு விடப்பட்ட சவால். எனவே இதை மாவட்ட திமுக அலுவலகத்தில் இருந்துதான் நடத்தணும்’ என்று சொல்லி இரவு 10.30 மணியளவில் திருவண்ணாமலை மாவட்ட திமுக அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் அமைச்சர் வேலு.
கிட்டத்தட்ட அரை மணி நேரம் இந்த ஐந்து நாள் ரெய்டு குறித்தும் தன்னை மையமாக வைத்து சமூக தளங்களில் வந்த வதந்திகள் பற்றியும் விளக்கினார். அப்போது, ’என்னுடைய கேரக்டரை அசாசினேஷன் செய்யும் முயற்சி ஒரு போதும் வெற்றி பெறாது. என் கெஸ்ட் ஹவுஸிலோ, என் மனைவி வீட்டிலோ, என்னுடைய பிள்ளைகள் வீட்டிலோ ஒரு பைசா கூட வருமான வரித்துறை கைப்பற்றவில்லை. அப்படி எடுத்திருந்தால் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்’ என்று சவால் விட்டார்.
மேலும், தனது பொலிட்டிக்கல் பிஏ சுப்பிரமணி, தனது ஓட்டுநர் உள்ளிட்டோரை வருமானவரித் துறை அதிகாரிகள் உளவியல் ரீதியாக துன்பப்படுத்தினார்கள் என்பதையும் குறிப்பிட்டார். அந்த செய்தியாளர் சந்திப்பை முடித்துவிட்டு சென்னை புறப்பட்டார் அமைச்சர்.
இந்த ரெய்டு குறித்து அமைச்சர் வேலு தனது முழுமையான விளக்கத்தை அளித்து விட்ட நிலையில்… ஐந்து நாட்கள் சோதனை நடத்திய மத்திய வருமானவரித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் இது குறித்து விசாரித்தபோது மேலும் முக்கியமான தகவல்கள் கிடைத்தன.
’உள்ளபடியே மன அழுத்தத்திற்கும் உளவியல் துன்புறுத்தலுக்கும் ஆளானவர்களில் இந்த ஆபரேஷனுக்கு சென்ற ஐடி அதிகாரிகள் சிலரும் உண்டு. நவம்பர் 3 ஆம் தேதி அதிகாலை தொடங்கிய ரெய்டு, அமைச்சர் வேலு மற்றும் அவரது மனைவி, மகன்கள் தொடர்பான வீடுகளில் இரண்டாவது நாள் அதாவது நவம்பர் 4ஆம் தேதியே கிட்டத்தட்ட முடிந்து விட்டது.
அவர்கள் நிர்வகிக்கும் அறக்கட்டளை தொடர்பான ஆவணங்களில் பெரிய அளவு சிக்கல் ஏதும் இல்லை. மேலும் கணக்கு காட்டப்படாத வேறு எந்த உருப்படியான பொருட்களும் கிடைக்கவில்லை. அவர்களது தொழில் தொடர்பாக இந்தியன் வங்கியில் 250 கோடி ரூபாய் கடன் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்கள். அது தொடர்பான ஆவணங்கள் கிடைத்தன. மேலும் ஏற்கனவே 60 கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள். அது தொடர்பான ஆவணங்களும் கிடைத்தன.
இதுகுறித்து இரண்டாம் நாள் பிற்பகலிலேயே மேலதிகாரிகளுக்கு தெரிவித்திருக்கிறார்கள் ரெய்டில் ஈடுபட்ட அதிகாரிகள். ஆனால் மேலதிகாரிகளோ, ‘கிடைக்கலைன்னா விடாதீங்க. மீண்டும் மீண்டும் தேடுங்க. வேலுவிடம் கிடைக்கவில்லை என்றால் அவரது மகன்களிடம் கிடைக்கவில்லை என்றால் அவர்களுக்கு தொடர்பில் இருப்பவர்களிடம்… அடுத்தடுத்த கட்ட தொடர்பில் இருப்பவர்களிடம் தேடுங்க. நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என அடுத்தடுத்த தேர்தல்களுக்கு திமுகவின் கஜானாவாக இருப்பவர் வேலுதான் என்று தகவல் கிடைச்சிருக்கு. அவர் மூலமாதான் தேர்தல் கரன்சிப் போக்குவரத்து நடக்கப் போறதாவும் தகவல் கிடைச்சிருக்கு. அதனால விடாம தேடுங்க. பணம் கைப்பற்றப்படும் வரை தேடுங்க’ என்று அழுத்தம் கொடுத்தனர்.
இதனால் தான் இரண்டாவது நாளிலேயே முடிந்திருக்க வேண்டிய ரெய்டு ஐந்து நாட்கள் வரை வெவ்வேறு இடங்களில் நீடித்தது. இந்த மன அழுத்தத்தில் தான் ரெய்டில் ஈடுபட்ட சில அதிகாரிகள் வேலுவின் பிஏ, டிரைவர் உள்ளிட்டோரிடம் அந்த மாதிரி கடுமையாக நடந்து கொண்டிருக்கிறார்கள். வீட்டில் பெண்கள் இருக்கும்போதே இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். மற்றபடி அமைச்சர் வேலு கண்ணியமாகவே நடத்தப்பட்டார். அவரும் அதிகாரிகளிடமும் கண்ணியமாக நடந்துகொண்டார்’ என்கிற தகவல் வருமானவரித் துறை வட்டாரத்திலிருந்து கிடைக்கிறது.
இதுமட்டுமல்ல இன்னொரு சுவாரஸ்யமும் இந்த ரெய்டில் நடந்திருக்கிறது. வேலுவின் மனைவியின் வீட்டுக்கு ஐடி பெண் அதிகாரிகள் சென்றிருக்கிறார்கள். சித்தர் வழிபாட்டில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் அவர், பெண் ஐடி அதிகாரிகளை வரவேற்று, பூஜை அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கே அதிகாரிகள் அனைவருக்கும் விபூதி கொடுத்து, ‘இதை நெத்தியில பூசிக்கிட்டு அப்புறம் ரெய்டு பண்ணுங்க’ என்று கேஷுவலாக சொல்ல அதிகாரிகளுக்கு என்ன ரியாக்ட் செய்வதென்றே தெரியவில்லை.
இப்படியாக ஐந்து நாள் ரெய்டு முடிந்த நிலையில்தான்… செய்தியாளர்களை சந்தித்து, ‘என் வீட்டில் ஒரு பைசா எடுக்க முடிந்ததா? என்று சவால் விட்டதோடு… இதில் ஐ.டி. அதிகாரிகள் மீது வருத்தமில்லை. அவர்கள் அம்புகள்தானே… எய்தவர்கள் எங்கோ இருக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
வேலு வீட்டில் நடந்த ரெய்டில் மத்திய அரசு எதிர்பார்த்த அளவுக்கு எதுவும் கிடைக்காத நிலையில், அடுத்தடுத்து ரெய்டு வேட்டைகளை தீவிரப்படுத்த தயாராகிவிட்டது.
ஏற்கனவே மணல் குவாரிகளை மையமாக வைத்து ஐ.டி. ரெய்டு நடத்தியது. அதன் அடிப்படையில் தற்போது நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதையடுத்து நீர்வளத்துறை செயலாளருக்கும் சம்மன் அனுப்ப தீர்மானித்திருக்கிறது அமலாகத்துறை.
இதன் அடுத்த கட்டமாக நீர்வளத்துறை அமைச்சரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான துரைமுருகனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பும் என்ற தகவல் டெல்லி வட்டாரங்களில் இருந்து கிடைக்கிறது. வரும் டிசம்பர் வரை விசாரணை அமைப்புகளின் வேட்டை தீவிரமாகவே இருக்கும்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தீபாவளி பண்டிகை: கோவை, மதுரையில் இருந்து சிறப்புப் பேருந்துகள்!
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவிப்பு!