அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் இன்று (மே 26) சோதனைக்கு சென்றபோது கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட நிலையில், பாதுகாப்புக் கோரி எஸ்.பி அலுவலகத்தில் ஐ.டி அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
அவருக்கு தொடர்புடைய இடங்கள் மட்டுமின்றி கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த சென்றனர்.
ஆனால் அதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா உள்ளிட்டோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அதிகாரிகள் வந்த காரின் கண்ணாடி மற்றும் விளக்குகளை இரும்பு கம்பியால் குத்தி உடைத்ததால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இதுபோன்று கரூரில் மற்ற இடங்களிலும் சோதனைக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 22 இடங்களில் துணை மேயர் தாரணி சரவணன் வீடு, காளிபாளையம் பெரியசாமி வீடு உள்ளிட்டோரின் 9 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையை நிறுத்தியுள்ளனர்.
மேலும் திமுகவினரின் எதிர்ப்பால் 4 வருமான வரித்துறை அதிகாரிகள் பாதுகாப்பு கேட்டு கரூர் நகர காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக கரூர் எஸ்.பி அலுவலகத்திலும் புகார் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து கரூரில் சோதனை நடத்துவது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் எங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என்றும்,
ஐடி அதிகாரிகளுக்கு தேவையான பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் எஸ்.பி சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
ஐ.டி. ரெய்டு: அதிகாரிகளின் கார் கண்ணாடியை உடைத்த திமுகவினர்!
மலேசியா மாஸ்டர்ஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து