மத கலவரத்தை தூண்டும் வகையில் தொடர்ந்து பேசி வருவதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மீது அம்மாநிலத்தில் உள்ள 18 எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
அசாமின் நாகவுன் மாவட்டம், திங் என்ற இடத்தில் கடந்த 22-ம்தேதி 14 வயது மாணவியை 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். எனினும் போலீஸ் பிடியில் இருந்து தப்பிய அவர், குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தலைமறைவான மற்ற இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து விவாதிக்க சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் நேற்று ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தன.
அப்போது ஆளும் பாஜக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பாரபட்சமாக நடந்துகொள்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
அதற்கு சர்மா, “நான் ஒரு தரப்புக்கு ஆதரவாக இருப்பதாக கூறுகிறீர்கள். அப்படியே இருந்துவிட்டு போகட்டும். தெற்கு அசாமை சேர்ந்தவர்கள் ஏன் வடக்கு அசாமுக்கு செல்கின்றனர்? இதன் மூலம் மியா முஸ்லிம்கள் அசாமை கைப்பற்ற முயற்சி செய்கின்றனரா? இதனை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்’’ என்று ஆவேசமாக தெரிவித்தார்.
‘மியா’ என்பது அஸ்ஸாமில் பெங்காலி மொழி பேசும் முஸ்லீம்களை விவரிக்கப் பயன்படுத்தப்படும் இழிவான சொல்லாகும்.
இந்த நிலையில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), ஆம் ஆத்மி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா (யுபிடி), ரைஜோர் தளம் மற்றும் அசாம் ஜாதிய பரிஷத் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மதக்கலவரத்தை ஏற்படுத்த முயல்கிறார் என குவாஹாத்தியில் உள்ள திஸ்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதில், ”மதம் மற்றும் இனத்தின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே பகைமையை வளர்க்க முதல்வர் சர்மா முயற்சிக்கிறார். பாஜகவின் மற்ற தலைவர்களும் மாநிலத்தில் கலவரம் போன்ற பதற்றமான சூழ்நிலையை உருவாக்குகின்றனர்.
பொதுவெளியில் இது போன்ற தொடர்ச்சியான கருத்துகள் பல்வேறு சமூகங்களுக்கிடையில் மோதலை உருவாக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன. அத்தகைய நபரை உடனடியாக கைது செய்யாவிட்டால், அரசியல் மைலேஜ் பெறுவதற்காக அவரால் மாநிலத்தில் எத்தகைய கலவரத்தையும் உருவாக்க முடியும். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
எனினும் இந்த புகாரில் இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்று அம்மாநில காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
படத்தில் பாவம் … நிஜத்தில் கோரம்…. ஐந்தாம் படை நடிகரின் அட்டூழியத்தால் அதிர்ந்து போன மலையாளக் கரை
ரூ.75 லட்சம் வரை வீட்டு கடன்… ‘கூட்டுறவு’ செயலி அறிமுகம்!