தமிழகத்தில் மூன்று நாள் பயணமாக பட்டியல் வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் சென்னை வருகின்றனர்.
ஆணையத்தின் துணைத்தலைவர் அருண் ஹல்தார் நாளை ( 1.8.2022) காலை டெல்லியிலிருந்து சென்னை வருகிறார். அவர் காலை 10 மணியளவில், சர்க்யூட் ஹவுசில், தமிழக அரசின் தலைமை செயலர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநருடன், மாநிலத்தில் சில மாவட்டங்களில் நடைபெற்ற குறிப்பிட்ட சில நிகழ்வுகள் குறித்து விசாரணை மேற்கொள்கிறார்.
தென்காசி, ராமநாதபுரம், வேலூர், தர்மபுரி, நீலகிரி, சென்னை ஆகிய மாவட்டங்களில் பட்டியல் வகுப்பினருக்கு எதிராக நடைபெற்ற சம்பவங்கள் பற்றி விசாரணை நடத்துகிறார்.
இதனையடுத்து சென்னையில் தங்கும் அவர், அடுத்தநாள் ( 2.8.2022) இந்தியன் வங்கி பட்டியல் வகுப்பு யூனியன் பிரதிநிதிகளுடன் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதனைத்தொடர்ந்து, இந்தியன் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
வரும் 3-ந்தேதி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூத்த அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ளும் ஆணையத்தின் துணைத்தலைவர், அந்த வங்கியின் பட்டியல் வகுப்பு யூனியன் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துவார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அன்று மாலை அவர் டெல்லி புறப்பட்டு செல்வார்.
இதனிடையே, பட்டியல் வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் விஜய் சாம்ப்லா, உறுப்பினர்கள் குழுவுடன் நாளை (ஆகஸ்டு 1-ம் தேதி) இரவு சென்னை வருகிறார். 2 மற்றும் 3-ம் தேதி இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூத்த அதிகாரிகளை ஆணையத்தின் துணைத் தலைவருடன் சந்தித்து ஆய்வு மேற்கொள்கிறார். இரு வங்கிகளின் ஷெட்யூல்ட் வகுப்பு யூனியன் பிரதிநிதிகளையும் அவர் சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்.
இந்தத் தகவல் பட்டியல் வகுப்பினருக்கான தேசிய பட்டியல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
–வேந்தன்