சென்னை சங்கமம் நிகழ்வில் சம்பவம் : மேடையேறி சென்று பாராட்டிய ஸ்டாலின்

Published On:

| By christopher

சென்னை சங்கமம் விழாவின் நிறைவு நிகழ்ச்சியை இன்று (ஜனவரி 17) கண்டுகளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் சாகசம் செய்த மாற்றுத்திறனாளி கலைஞர்களை வாழ்த்தி கெளரவித்தார்.

சென்னையில் பொங்கல் நாள்களில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா என்ற பிரம்மாண்ட கலைவிழா கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்த நிலையில், நான்காவது ஆண்டாக இந்த ஆண்டின் சங்கமம் கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் ஆலயத் திடலில் கடந்த 13ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சி பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, சென்னை இசைக்கல்லூரி வளாகம், கிண்டி கத்திபாரா வளாகம், சைதாப்பேட்டை மாநகராட்சி விளையாட்டுத் திடல், தியாகராயநகர் நடேசன் பூங்கா, ராயபுரம் ராபின்சன் பூங்கா, பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா, அண்ணாநகர் கோபுர பூங்கா, கோயம்பேடு ஜெய் நகர் பூங்கா, கே.கே.நகர் சிவன் பூங்கா ஆகிய 18 இடங்களில் கடந்த மூன்று நாட்களாக நடந்து வந்தது.

நான்காவது நாளான இன்றும் 1500 கிராமியக் கலைஞர்களுடன் சென்னையின் அனைத்து பகுதிகளிலும் கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்தன.

இந்த நிலையில் நிறைவு நாளில் அண்ணாநகர் கோபுரப் பூங்காவில் இன்று நடைபெற்ற சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் நேரில் கண்டு மகிழ்ந்தார்.

அப்போது மல்லர் கம்பம் ஏறி சாகசம் செய்த மாற்றுத்திறனாளிகளை முதல்வர் ஸ்டாலின் மேடையேறிச் சென்று பாராட்டினார்.

அவருடன் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் பொன்முடி, சேகர் பாபு, ஆ.ராசா எம்.பி., உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதன்மூலம் கடந்த நான்கு நாட்களாக நடந்து வந்த சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel