முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு அமெரிக்க விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் கடந்த 27ஆம் தேதி இரவு சென்னை விமான நிலையத்திலிருந்து அமெரிக்கா புறப்பட்டார். 17 நாட்கள் அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார்.
நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் அவர் இங்கிருந்து புறப்பட்ட நிலையில் சான் பிரான்சிஸ்கோ சென்றடைந்துள்ளார்.
இந்திய நேரப்படி இன்று(ஆகஸ்ட் 29) அதிகாலை, 3.44 மணிக்கு ‘கழுகு தரையிறங்கியது’ என்ற கேப்ஷனுடன் விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற புகைப்படத்தை தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கவாழ் தமிழர்கள் ஆரத்தி எடுத்து விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, ‘ஸ்டாலின் தான் வராரு’ செம்மொழியான தமிழ் மொழியால்’ உள்ளிட்ட பாடல்களுக்கு நடனமாடினர். இதனை முதல்வர் ஸ்டாலின் ரசித்து பார்த்தார். அவர்கள் ‘தமிழ் வெல்லும்’ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் வைத்திருந்தனர்.
முன்னாள் மத்திய அமைச்சரும், நடிகருமான நெப்போலியனும் சால்வை அணிவித்து ஸ்டாலினை வரவேற்றார்.
அமெரிக்கா சென்றடைந்த புகைப்படங்களை முதல்வர் ஸ்டாலினும் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “வாய்ப்புகளின் பூமியான அமெரிக்காவில் இருக்கிறேன். தமிழ்நாட்டின் செழுமைக்காக ஆதரவு தேடி பயணம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்று சான்பிரான்ஸ்கோவில் நடைபெறும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் முதல்வர் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
வேலைவாய்ப்பு : TANUVAS-வில் பணி!
அனுமதியின்றி தனிநபர் படங்களை வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் சிறை