கிக் பொருளாதாரத்தில் காலனியப் பண்புகள்! பகுதி – 2
காலைப் பதிப்பில் வெளியான (ஓலா, ஊபர்: வெறும் சேவைகள் அல்ல!) கட்டுரையின் தொடர்ச்சி…
கிக் நிறுவனங்கள் தங்கள் வியாபார விதிகளுக்கு ஆதரவாக வைக்கின்ற முக்கிய வாதம் நுகர்வோர் நலன் பற்றியதாகும்.
தேவையற்ற இடைத்தரகர்களை நீக்கி, கிக் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்துவதின் மூலம் நுகர்வோருக்குப் பண்டங்களை அல்லது சேவைகளைக் குறைந்த விலையில் அளிக்க கிக் பொருளாதாரம் உதவுகிறது என்பதே அந்த வாதம். மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் இக்கூற்று உண்மைதான். ஆனால் ஆழ்ந்து கவனித்தால் முக்கியமான இரண்டு உரிமைப் பிரச்சினைகள் இதில் உள்ளன.
முதலில் தனிநபருக்குக் குறைந்த விலையில் கிடைக்கும் பொருட்களின் பின்னால் உள்ள கிக் பொருளாதாரப் பண்பு எதிர்காலச் சமூகத்தில் தொழிலாளர்களுக்கான எல்லா அடிப்படை உரிமைகளையும் பறித்திடக்கூடும். அப்போது நாம் அனைவரும் பாதிக்கப்படுவோம். அதாவது அனைத்துத் துறைகளும் கிக் மாடலுக்குக் கீழே வரக்கூடிய ஆபத்து உள்ளது. ஏற்கனவே உலகமயமாக்கலின் ஒரு பண்பாக, இம்முறை பல துறைகளில் அமலில் உள்ளது. இது அனைத்துத் துறைகளுக்கும் பரவ நேர்ந்தால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உள்ள சாமானியர்களின் நிலை மிக மோசமாகிவிடும்.
இரண்டாவதாக, கிக் பொருளாதாரத்திற்குப் பின்னால் இயங்கும் அல்காரிதத்தினால் ஏற்படும் பிரச்சினை. ஏஐ (Artifical Intelligence / ஆர்ட்டிஃபிஷியல் இண்டெலிஜன்ஸ்) என்றழைக்கப்படும் இயந்திர நுண்ணறிவு என்ற தொழில்நுட்பமானது கிக் பொருளாதாரத்தின் இதயம். நுகர்வோருக்கு என்ன தேவை, எதுவெல்லாம் பிடிக்கும், எதையெல்லாம் பரிந்துரை செய்யலாம், மறைக்கலாம் என்பதற்கெல்லாம் இயந்திர நுண்ணறிவே காரணம். உங்கள் ஃபேஸ்புக் புத்தகத்தில் உங்களுக்குப் பிடித்த நடிகர் செய்தி வருவது இப்படித்தான். ஆனால், இந்த நுண்ணறிவு பாரபட்சமற்றதல்ல.
இயந்திர நுண்ணறிவு காட்டும் பாரபட்சம்
இரண்டாண்டுகளுக்கு முன்னர் லிங்க்ட்-இன் (தொழில்முறை பழக்கங்களுக்கும், வேலை வாய்ப்புகள் பற்றி அறிவதற்கும் உண்டாக்கப்பட்ட ஒரு தளம்) அல்காரிதம், பெண் பெயர்களைத் (ஸ்டெஃபனி) தேடினால், அதற்கு இணையான (ஸ்டீஃபன்) ஆண்களையே விடையாகத் தந்தது. இதற்குக் காரணம் லிங்க்ட்-இன்னின் இயந்திர நுண்ணறிவானது பெண்களுக்குச் சாதகமாக இல்லை என்பது தெரிவிக்கப்பட்டது.
இது புதிதல்ல. கோடாக் நிறுவனம் அதன் படச்சுருளும், விடியோ சாஃப்ட்வேர்களும் வெள்ளை நிறத் தோல்களுக்கு ஏற்றவாறாக இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளது (பிறகு அதை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது).
கிக் பொருளாதாரத்தின் சூத்திரதாரிகள் சிலிக்கான் பள்ளத்தாக்கின் வெள்ளை முதலாளிகள். அவர்கள் உருவாக்கும் இயந்திர நுண்ணறிவும் வெள்ளைத்தனமானது என்பது இப்போது எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. உதாரணமாக கிக் இன்ஷ்யூரன்ஸ் தொழிலை எடுத்துக்கொள்வோம். பெருவாரியான இணைய இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிகள் விற்கும் காப்பீட்டிற்கான மென்பொருள்கள் சிலிக்கான் பள்ளத்தாக்கில் தயாரிக்கப்படுகின்றன. அவர்களுக்கு அறிமுகமான நலக் காரணிகளைக் கொண்டு இம்மாதிரியான மென்பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன: உடல் வயது, அவர்களின் சமூகத்தில் உள்ள பொதுவான உபாதைகள், வியாதிகளின் தன்மைகள் ஆகியவற்றைக் கணக்கிட்டுக் காப்பீட்டுத் தொகையைச் சொல்கிறது.
சிலிக்கான் பள்ளத்தாக்கில் செய்யப்படும் கிக் இன்ஷ்யூரன்ஸ் மென்பொருளுக்கு (அதாவது அதை எழுதும் வெள்ளை மென்பொருள் முதலாளிக்கு) ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள ஒரு நாட்டின் சாதாரண நோய்க்கூறு பெரிதாகத் தெரியலாம். இதன் விளைவாகவே ஒரு சமூகம் அதிக அளவு காப்பீட்டுத் தொகை செலுத்தும்படி சுரண்டப்படலாம். அவ்வளவு ஏன்? அமெரிக்க இன்ஷ்யூரன்ஸ் மென்பொருள்கள் அமெரிக்கக் கறுப்பர்களின் உடல் நலக் காரணிகளைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை என்பது இப்போது அங்கே பேசுபொருளாகியிருக்கிறது. எனவே இன்றைய சிலிக்கான் ‘ஸ்டைல்’ கிக் தொழில் வடிவத்தினால் நுகர்வோருக்கும் நீண்ட காலப் பலனில்லை.
பிறகு யார் தான் கிக் பொருளாதாரத்தினால் பயன் பெறுகிறார்கள்?
உண்மையான பயனாளிகள்
ஜூன் மாதம் 2016ஆம் ஆண்டில் சவூதி அரேபியாவின் பொது முதலீட்டு நிதி ஊபர் நிறுவனத்திற்கு மூன்றரை பில்லியன் டாலர் ஒரே தவணையாக அனுப்பியது. ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கு இவ்வளவு பெரிய தொகை ஒரு வெளிநாட்டு அரசு மூலம் வந்தது இதுவே முதல் முறை என சிலிக்கான் பள்ளத்தாக்கு எங்கும் இது பரபரப்புச் செய்தியானது. ஊபர் நிறுவனத்தின் இயக்குனராக சவூதி இறையாண்மை நல நிதியின் (sovereign wealth fund) இயக்குனரான யாசிர் ஓத்மன் அல்-ருமாய்யன் நியமிக்கப்பட்டுள்ளார். அல்-ருமாய்யன், ஊடகவியலாளர் கஷோக்கியின் கொலை வழக்கில் சிக்கியுள்ள சவூதியின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானின் ஆதரவாளர். சல்மானின் கண்ணசைவின்றி ஊபருக்கு இந்தப் பணம் சென்றிருக்க முடியாது என்பது வெள்ளை மாளிகை உள்ளிட்ட அனைவருக்கும் தெரியும். சவூதி ஊபருக்கு நிதியளித்த அதே சமயம், சீனாவில் ஊபருக்கு நிகரான டிடி (Didi) என்ற கிக் நிறுவனத்தில் ஆப்பிள் ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்தது. சீனாவில் இரண்டாம் இடத்தில் உள்ள ஊபருக்கு உள்ளூர் சந்தையில் போட்டி போட அதிகம் பணம் தேவைப்படவே, சவூதியிடம் சென்றது. இது சிலிக்கான் பள்ளத்தாக்கில் நடை பெறும் அன்றாட பேரங்கள்.
இதைச் சொல்வதற்கான காரணம், கிக் பொருளாதாரத்தை வைத்து உண்மையிலேயே பயன் பெறுபவர்கள் நுகர்வோர்கள் அல்ல. நிச்சயமாகத் தொழிலாளர்கள் அல்ல. முதலாளிகளே.
இதிலும் மிக நுட்பமான காலனியப் பண்பு உள்ளது: சாதாரணமாக தொழில் உற்பத்தியில் முதலாளி தொழிற்சாலை வைத்திருப்பார்; தொழில் முதலீடு செய்திருப்பார்; தொழிலாளர் உடல் உழைப்பு, திறன்களைத் தன் பங்காக அளிப்பார். ஆனால் கிக் பொருளாதாரத்தில் முதலாளியிடம் தொழிற்சாலை கிடையாது. அவர் தொழிலுக்குத் தேவையான பொருட்களைக்கூடச் சொந்தமாக வைத்திருக்க மாட்டார் (ஊபரிடம் சொந்தமாகக் கார்கள் கிடையாது. அமேசான் பொருட்களைத் தயாரிப்பது கிடையாது). கிக் முதலாளியிடம் இருக்கும் தகவல்களைப் பெறத் தொழிலாளர்களும், நுகர்வோரும் கூலி கொடுப்பர். ஆனால், இந்த இருவருடைய (குறிப்பாக தொழிலாளரின்) நலனை முதலாளியே தீர்மானிப்பார்.
இது பற்றி ஆய்வு செய்த நியுயார்க்கின் டாட்டா மற்றும் சொசைட்டி என்ற ஒரு ஆய்வு நிறுவனம் கிக் பொருளாதாரத்தின் இந்த மாடலை மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.
(கட்டுரையின் இறுதிப் பகுதி மாலைப் பதிப்பில்…)
கட்டுரையாளர் குறிப்பு: முரளி சண்முகவேலன்
முரளி சண்முகவேலன்
ஊடக மானுடவியலாளர், லண்டனில் உள்ள ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் அண்ட் ஆப்பிரிக்கன் ஸ்டடீஸில், சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.