திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.
திமுக – காங்கிரஸ் கட்சிகள் இடையேயான, தொகுதி பங்கீடு தொடர்பாக முதல் கட்ட பேச்சுவார்த்தை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கடந்த ஜனவரி 28ஆம் தேதி நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறாத நிலையில், காங்கிரஸுக்கும் திமுகவுக்கும் இடையே கசப்பு ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
இந்நிலையில் இன்று திமுகவுடனான தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை நடத்தினர்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மேலிட பொறுப்பாளர்கள் முகுல் வாஸ்னிக், அஜோய் குமார், மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து காங்கிரஸ் குழு அண்ணா அறிவாலயம் சென்றது. அங்கு திமுக தொகுதி பங்கீடு குழுவுடன் ஆலோசனை செய்தனர். பின்னர் அண்ணா அறிவாலயத்துக்கு திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினும் வந்தார்.
இதையடுத்து திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தானது.
“நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கு.செல்வபெருந்தகை இன்று (9-3-2024) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில்,
காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் 9 (ஒன்பது) நாடாளுமன்றத் தொகுதிகளிலும் புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியும் என மொத்தம் 10 தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வதென முடிவு செய்யப்பட்டது” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே விசிக (சிதம்பரம், விழுப்புரம்), சிபிஐ(எம்), சிபிஐ ஆகிய கட்சிகளுக்கு தலா இரண்டு இடங்களும், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ராமநாதபுரம்), கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி (நாமக்கல்) ஆகிய கட்சிகளுக்கு தலா 1 இடமும் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் காங்கிரஸுக்கு புதுச்சேரி உட்பட 10 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், திமுக 21 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது.
கடந்த மக்களவை தேர்தலில் புதுச்சேரியும் சேர்த்து 10 இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. தேனி தொகுதி தவிர்த்து, 9 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Movie Review : ’நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ – திரை விமர்சனம்!
சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியரை மிரட்டும் கல்வித்துறை அதிகாரிகள்?