திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனுக்கு டிசம்பர் 19ஆம் தேதி சிலை திறக்கப்படும் என்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று(டிசம்பர் 1)தொடங்கியது.
கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு துறை தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன்,
திமுகவின் 71மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.
மறைந்த திமுகவின் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
ஏற்கனவே அரசு சார்பில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் சிலை திறக்கப்பட்டு அவ்வளாகம் பேராசிரியர் க.அன்பழகன் வளாகம் என பெயர் மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மாநிலம் முழுவதும் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக் கூட்டங்கள் , மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்குவது, கருத்தரங்கங்கள் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதைத் தொடர்ந்து திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 2முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதில், “பேராசிரியரின் நூற்றாண்டு விழாவைப் போற்றும் வகையில், 19.12.2022அன்று தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை செயல்படும் D.P.I வளாகத்தில் இனமானப் பேராசிரியர் அவர்களின் திருவுருவச் சிலை நிறுவி,
அந்த வளாகம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என்று அழைக்கப்படும் என்றும்… கற்றல், கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி என,
பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் பெயரில் விருது வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ள திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினுக்கு நன்றி” தெரிவித்து முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இரண்டாவது தீர்மானமாக, “பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவினையொட்டி, தலைமைக் கழகத்தின் சார்பில் டிசம்பர் 15(வியாழக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் 100பொதுக்கூட்டங்கள் நடத்த தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்படும்.
அதேபோல் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் டிசம்பர்-17(சனிக்கிழமை) அன்று பேராசிரியர் பொது வாழ்வைப் போற்றிடும் கவியரங்கம் நடைபெறும்.
டிசம்பர்-18(ஞாயிற்றுக்கிழமை) அன்று வடசென்னையில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெறும்.
பேராசிரியர் பிறந்த நாளான 19-12-2022 (திங்கட்கிழமை) அன்று மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளைகள் சார்பிலும், துணை அமைப்புகளான அணிகள் சார்பிலும்,
இனமானப் பேராசிரியரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்திடவும் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது” என்று இரண்டாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பூத் கமிட்டிகளை அமைக்கும் பணியை திமுக தொடங்கிவிட்ட நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான பல்வேறு அறிவுரைகளையும், கட்டளைகளையும் இந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் வழங்கியதாகவும் தெரிகிறது.
கலை.ரா
ஆன்லைன் ரம்மி தடை: சட்ட அமைச்சருக்கு ஆளுநர் அளித்த பதில்!
காசி தமிழ் சங்கமம்: அரசு விழாவா… அரசியலா?