பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பங்கேற்ற பேரணியில் இன்று (நவம்பர் 3) துப்பாக்கிச் சூடு நடந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் அந்நாட்டு முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான்கான், ’நாட்டின் உண்மையான சுதந்திரம்’ என்ற பேரணியை தனது ஆதரவாளர்களுடன் லாகூரிலிருந்து இன்று (நவம்பர் 3) தொடங்கினார்.
அப்பேரணி வாசிராபாத் அருகே சென்றபோது, நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில், இம்ரான்கான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து இம்ரான்கான் பாதுகாப்பாக குண்டு துளைக்காத வாகனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் அந்நாட்டில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
யார் இந்த இம்ரான் கான்?
லாகூரில் 1952ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி பிறந்த இவர், இங்கிலாந்தில் உள்ள ராயல் கிராமர் ஸ்கூல் வொர்செஸ்டரில் கல்வி பயின்றார். பள்ளிக்காலத்திலேயே அவர் கிரிக்கெட்டிலும் சிறந்து விளங்கினார். அவர், 1971ஆம் ஆண்டே இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.
அதே ஆண்டில், ஒருநாள் போட்டியிலும் அறிமுகமானார். 1972ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டில் உள்ள கேபிள் கல்லூரியில் சேர்ந்து, தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் பயின்றார்.

பின்னர் பாகிஸ்தான் திரும்பிய அவர், தேசிய அணியில் நிரந்தர இடம்பிடித்தார். பாகிஸ்தான் அணியில் இம்ரான்கான் இடம்பெற்ற பிறகு, மிகச் சிறப்பான ஆட்டத்தால் கவனம் பெறத் தொடங்கினார்.
ஒருகட்டத்தில், அவர் இல்லாமல் அணி இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவரது புகழ் உயர்ந்தது. பாகிஸ்தான் அணியை தலைமையேற்று நடத்தும் அளவுக்கு உயர்ந்த அவர், 1987 உலகக் கோப்பையின்போது, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
உலகக்கோப்பையை வென்று தந்தவர்!
என்றாலும், அப்போதைய பாகிஸ்தான் ஜனாதிபதி ஜியா-உல்-ஹக்கின் வேண்டுகோளின் பேரில், அவர் பாகிஸ்தான் அணியில் விளையாடினார்.
அதன் பயன், 1992ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையைப் பாகிஸ்தானுக்கு பெற்றுத் தந்தார்.
அந்த நிகழ்வு அவருடைய வரலாற்றையே மாற்றியமைத்தது. பாகிஸ்தான் அணிக்காக 88 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர், 3,807 ரன்களையும், 362 விக்கெட்களையும் கைப்பற்றினார். 175 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 3,709 ரன்களையும், 182 விக்கெட்களையும் கைப்பற்றினார்.
1992ம் ஆண்டுக்குப் பிறகு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார். அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற சமயத்தில் அப்போது பாகிஸ்தான் அரசியல் களத்திலிருந்து பலரும் அவரை அரசியலில் சேரச் சொல்லி அழைப்பு விடுத்தனர். ஆனால், இம்ரான்கான அதை மறுத்துவிட்டார். அவருக்கு அழைப்பு விடுத்தவர்களில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பும் ஒருவர்.

அந்தச் சமயத்தில்தான் ஜெனரல் ஹமீத் குல் மற்றும் முகமது அலி துரானியின் சமூகக் கருத்தியலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ‘பாஸ்பான்’ என்ற அமைப்பில் இம்ரான்கான் சேர்ந்தார். இந்த அமைப்பும், அதன் இரு தலைவர்களும் இம்ரானின் அரசியல் களத்துக்கான பயணத்தை ஆரம்பித்து வைத்தன.
புதிய கட்சி தொடக்கம்
அந்த அமைப்பில் இருந்துகொண்டே சமூக நலப் பணிகளையும் செய்து வந்த இம்ரான் கான், 1996, ஏப்ரல் 25ஆம் தேதி ’பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்’ (PTI) என்ற கட்சியைத் தொடங்கினார்.
1996இல் இந்த கட்சி தொடங்கப்பட்டாலும், அக்கட்சியின் வேகம் 2011ஆம் ஆண்டுக்குப் பிறகே பெரிய அளவில் மாற்றம் பெறத் தொடங்கியது. ஆனால், 2002 தேர்தலின்போது, அவரது கட்சி ஒரு இடத்தில் வெற்றிபெற்றது. ஆம், அக்கட்சியின் தலைவரான இம்ரான் கானே மியான்வாலி தொகுதியில் வெற்றி பெற்றார்.
2013 தேர்தலின்போது அக்கட்சியில் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் பலர் அதிலிருந்து விலகினர். இதற்கிடையே இம்ரான்கான் தன்னுடைய திருமணங்களால் பல்வேறு சர்ச்சைகளுக்கும் ஆளானார். அதேநேரத்தில், தன்னுடைய கட்சியை வலுவாகக் கட்டமைத்த இம்ரான் கான், 2018 தேர்தலில் நாடாளுமன்றத்தில் 116 இடங்களை வென்றெடுத்தார்.

22வது பிரதமர்!
இருந்தாலும் ஆட்சியமைக்க போதுமான இடங்களை அந்தக் கட்சியால் பெற முடியவில்லை. மற்ற கட்சிகளுடன் இணைந்து இம்ரான் கான் ஆட்சியமைக்க முடிவுசெய்தார். இதைத்தொடர்ந்து 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி இம்ரான் கான் பாகிஸ்தானின் 22-வது பிரதமராக பதவியேற்றார்.
இவருடைய பதவியேற்பு விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து கலந்துகொண்டது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பொருளாதார முறைகேடு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை இம்ரான் கான் எதிர்கொண்டார்.
இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை இந்த ஆண்டு (2022) மார்ச் 28 ஆம் தேதி எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன. அதில் இம்ரான் கான் தோல்வியடைந்தார்.
இம்ரான்கான் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அரசு கவிழ்ந்தது.
இதன் மூலம் பாகிஸ்தான் வரலாற்றில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முதல் பிரதமர் என்ற பெயருக்கு இம்ரான்கான் ஆளானார்.

பாகிஸ்தானின் எந்தப் பிரதமரும் ஐந்தாண்டு பதவிக் காலத்தை முழுமையாக முடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இம்ரான்கானுக்குப் பிறகு பாகிஸ்தானின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் சகோதரரும், பாகிஸ்தானின் முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சித் தலைவருமான ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றார்.
துப்பாக்கிச்சூடு
இந்த நிலையில்தான், பாகிஸ்தானில் இம்ரான் கான் பங்கேற்ற பேரணியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றிருப்பது உலக நாடுகளில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
இந்த துப்பாக்கிச்சூட்டில், இம்ரான்கான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காயமடைந்தனர். இம்ரான் கான் வலது காலில் மூன்று தோட்டாக்கள் பாய்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இம்ரான் கான், ”இறைவன் அருளால் இன்னொரு வாழ்க்கை கிடைத்துள்ளது. மீண்டும் வலிமையுடன் போராடுவேன்” எனக் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உடனடியாக அறிக்கை அளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஜெ.பிரகாஷ்
”ரஞ்சிதமே கொஞ்சணுமே” வெளியான விஜய் பட முதல் பாடல் புரோமோ!
இனி முதல்வர் மூலவர்- உதயநிதியே உற்சவர்: திமுக அப்டேட்!