அரசு கருவூல பரிசு பொருட்கள் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பிடிஐ கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த இம்ரான் கான், 1996-ஆம் ஆண்டு தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியைத் தொடங்கினார். 2018-ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பிரதமராகப் பதவியேற்றார்.
2022-ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்ததால் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். இதனால் கூட்டணி கட்சிகள் உதவியுடன் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரிப் பிரதமராக பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து இம்ரான் கான் மீது ஊழல் முறைகேடு வழக்குகள் தொடரப்பட்டது.
இம்ரான் கான் மனைவி பும்ரா பீவிக்கு சொந்தமான அல் காதர் அறக்கட்டளையில் ஊழல் நடைபெற்றதாக மே மாதம் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.
இந்தநிலையில் அரசு கருவூலப் பரிசுப் பொருட்களை முறைகேடாக விற்பனை செய்தது தொடர்பான ஊழல் வழக்கில் நேற்று இஸ்லாமாபாத் கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது
பாகிஸ்தான் தேர்தல் ஆணைய சட்ட விதிகளின்படி அந்நாட்டு பிரதமர் வெளிநாட்டிற்கு அரசு முறை பயணம் செல்லும்போது பரிசாக கிடைக்கும் பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும்.
இம்ரான் கான் தனக்கு கிடைத்த பரிசு பொருட்களை முறைகேடாக விற்பனை செய்ததாக தேர்தல் ஆணையம் சார்பில் இஸ்லாமாபாத் கூடுதல் மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் தான் இம்ரான் கானுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இம்ரான் கான் கைதை கண்டித்து தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியினர் பாகிஸ்தான் முழுவதும் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இதனால் பாகிஸ்தான் முழுவதும் ராணுவம் மற்றும் காவல்துறை முழு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களிலும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
பிடிஐ துணை தலைவர் முகமது ஹூரேஷி கூறும்போது,
“இம்ரான் கானுக்கு நீதிக்கு மாறாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து நாங்கள் உச்சநீதிமன்றத்திற்கு செல்வோம். இம்ரான் கான் விடுதலைக்கு கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இதற்காக நாம் சட்டம் மற்றும் அரசியல் ரீதியாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அமைதியான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
“இஷான் கிஷன் டி20 ஃபார்ம் கவலை அளிக்கிறது” – வாசிம் ஜாபர்
ஜெயிலர் ரிலீஸ்: ஊழியர்களுக்கு ட்ரீட் கொடுத்த நிறுவனம்!