தமிழ்நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கும் வகையில் மதுவிலக்கு திருத்தச் சட்டம் இன்று (ஜூன் 29) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி தொடங்கி பல்வேறு துறைகள் மீதான மானிய கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது.
இக்கூட்டத்தொடரில், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் விலக்கு, நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி அரசுத் தீர்மானங்கள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை அமைச்சர் முத்துசாமி இன்று தாக்கல் செய்தார்.
இதில் கள்ளச்சாராயத்தை காய்ச்சினால் அதற்கு வழங்கப்படும் சிறை தண்டனையின் கால அளவும், அபராதத் தொகையின் அளவும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கள்ளச்சாராயம் காய்ச்சினால் ரூ.10 லட்சம் அபராதம்!
அதன்படி கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில், அதை தயாரிப்பவர்கள், விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையோடு, 10 லட்சம் ரூபாய் வரை தண்டனை தொகையை உயர்த்தி கடுமையான தண்டனைகளையும் விதிப்பதற்கான சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தண்டனை தீர்ப்பு பெற்றவரை நீக்க நடவடிக்கை!
இதுபோன்று குற்றங்களை செய்து தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட ஒருவரை அந்தப் பகுதியில் இருந்தே நீக்கம் செய்வதற்கு மதுவிலக்கு அதிகாரி அல்லது புலனாய்வு அதிகாரியால் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்வதற்கும் சட்ட திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.
சொத்துகள் பறிமுதல்!
மேலும் கள்ளச்சாராயத்தை தயாரிக்க மற்றும் விற்க பயன்படுத்தப்படும் அனைத்து அசையும், அசையா சொத்துகளும் பறிமுதல் செய்யும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தரமற்ற இலவச சைக்கிள்கள்… விற்கும் மாணவர்கள் : ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!