இந்தி திணிப்புத் திட்டத்தையும், ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணிச் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உயர் கல்வி நிறுவனங்களில் இந்தி மூலம் மட்டுமே பாடங்களைப் பயிற்றுவிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்தது.
இதற்கு இந்தி பேசாத மாநிலங்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.
இந்தியைப் புகுத்தி இன்னொரு மொழி போரைத் திணிக்காதீர்கள் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் திமுக சார்பில் இந்தி திணிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (அக்டோபர் 12) இரவு தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், எம்.எல்.ஏ., மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ. ஆகியோர் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அதில், “பன்முகத் தன்மையைச் சிதைத்து விட்டு, இந்தி என்ற ஒரு மொழி ஆதிக்கத்தை கொண்டுவருகின்ற செயலின் மற்றொரு வடிவமாக ஏற்கனவே புதிய தேசியக் கல்விக் கொள்கை அமைந்துள்ளது.
ஆகவே பா.ஜ.க. அரசின் இந்தித் திணிப்பை தி.மு.க. இளைஞர் அணியும் – மாணவர் அணியும் கடுமையாக எதிர்க்கிறது.
அலுவல் மொழிச் சட்டத்தின் வாயிலாகவும், இந்திய அளவில் அனைத்துப் பாடத் துறைகளுக்கும் ஒரே பொது நுழைவுத் தேர்வுத் திட்டத்தின் மூலமாகவும் இந்தி மொழியைத் திணிக்க நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசிற்கு,
கழகத் தலைவர் கடும் கண்டனத்தையும், எச்சரிக்கையும் தெரிவித்துள்ளதை உணர்ந்து உடனடியாக அதனை பா.ஜ.க. அரசு இத்திட்டத்தைக் கைவிட வேண்டுமென்று வலியுறுத்தி,
தி.மு.க. இளைஞர் அணியும் – மாணவர் அணியும் இணைந்து, வரும் 15.10.2022 அன்று சனிக்கிழமை காலை 09.00 மணியளவில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
பிரியா
பட்டாசு அனுமதி: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் கடிதம்!
திமுக ஆட்சியில் அதிகாரிகள் வேலை செய்ய முடியவில்லை