தவெக-வை பலப்படுத்த புதிய நிர்வாகிகளை நியமிக்க அக்கட்சித் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் அரசியலில் இறங்கி தீவிரம் காட்டி வருகிறார். 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காக வைத்து காய் நகர்த்தி வரும் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை கடந்த அக்டோபர் 27ஆம் தேதி நடத்தினார்.
அப்போது முதல் விஜய் மீது அரசியல் கட்சிகளின் கவனம் திரும்பியிருக்கிறது. தவெகவின் கொள்கைகள் தமிழக அரசியல் அரங்கில் பேசு பொருளாகியிருக்கிறது. எனினும் நேரடியாக எந்த விமர்சனங்களுக்கும் பதில் கொடுக்காமல் அடுத்தக்கட்ட நகர்வுகளை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறார் விஜய்.
அந்தவகையில் நேற்று (அக்டோபர் 04) தவெகவின் தலைவர் விஜய் தலைமையில் பனையூரில் உள்ள தலைமை கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும் இந்த கூட்டத்தில், தவெக-வை பலப்படுத்துவது, நிர்வாகிகளை நியமிப்பது என முக்கிய விஷயங்கள் குறித்து விஜய் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து நாம் தவெக வட்டாரத்தில் விசாரித்த போது, “தவெக கட்சி கூட்டத்தில் தலைவர் விஜய் பேசுவது, முக்கிய முடிவுகள் எடுப்பது ஆகியவை ஊடகங்களில் கசிந்துவிடுகிறது. அதனால் இந்த கூட்டத்துக்கு உள்ளே செல்வதற்கு முன்னதாகவே மாநில, மாவட்ட நிர்வாகிகள் அத்தனை பேருடைய மொபைல் போன்களை வாங்கி வைத்துக்கொண்டுதான் உள்ளே அனுமதித்தார்கள்.
முதலில் நடந்து முடிந்த மாநாடு குறித்து நிர்வாகிகளிடம் விஜய் கேட்டார். அப்போது சில நிர்வாகிகள், கூட்டம் அதிகமாக இருந்ததால் தொண்டர்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டது, அதிகளவில் பயோ டாய்லெட் வசதிகள் அமைத்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பிரச்சனைகளை விஜய்யிடம் எடுத்து சொன்னார்கள். இதை கவனமாகக் கேட்டுக்கொண்ட விஜய், அடுத்த முறை இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நிர்வாகி ஒருவர் விஜய்யிடம், ‘மாநாட்டின் போது நீங்கள் பகவத் கீதை, பைபிள், குரான் போன்ற புனித நூல்களை பரிசாக பெற்றீர்கள். அதேபோல, இனி நடைபெறும் நிகழ்ச்சிகளில் உலக பொதுமறையான திருக்குறளை பரிசாக பெற்றுக்கொள்ள வேண்டும்’ என்று சொன்னார். இதை விஜய்யும் ஆமோதித்தார்.
கூட்டத்தில் விஜய் பேசும்போது, ‘நாம் சில முக்கியமான விஷயங்களை பேசுகிறோம். அடுத்து என்ன செய்ய போகிறோம் என முடிவெடுக்கிறோம். அது எப்படியோ வெளியே போகிறது. சில மாவட்ட செயலாளர்கள் மூலம் தான் அந்த தகவல்கள் எல்லாம் வெளியே போகிறது என்று எனக்கு தெரியவருகிறது.
யார் யார் தகவல் கொடுக்கிறார்கள் என நிச்சயம் கண்டுபிடித்து அவர்களை கட்சியைவிட்டு நீக்கிவிடுவேன்’ என்று எச்சரித்தார்.
மேலும் அவர், ‘தேர்தல் ஆணைய சட்டப்படி செயற்குழு, பொதுக்குழு நடத்த வேண்டியுள்ளது. எனவே அதற்கு முன்னதாக கட்சியை பலப்படுத்தும் வகையில் புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். புதிய ஆட்களுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்க திட்டமிட்டிருக்கிறேன். அதற்காக நான் எடுக்கும் முடிவுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்” என்கிறார்கள்.
இதுதொடர்பாக விஜய்க்கு நெருக்கமானவர்களிடம் நாம் கேட்ட போது, “தற்போது நடிகர் விஜய்யின் ரசிகர்கள் தான் கட்சியின் பொறுப்பில் இருக்கிறார்கள். ஆனால் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றால் அரசியல் அனுபவம் வாய்ந்தவர்களை நியமிக்க வேண்டும்.
தற்போது தமிழ்நாடு, புதுச்சேரி என தவெகவுக்கு ஒரே பொதுச்செயலாளராக புஸ்ஸி ஆனந்த் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், தமிழ்நாடுக்கு தனி பொதுச்செயலாளர், புதுச்சேரிக்கு தனி பொதுச்செயலாளரை நியமிக்கவுள்ளார் விஜய். புதுச்சேரி பொதுச் செயலாளராக புஸ்ஸி ஆனந்துக்கு பொறுப்பு வழங்கவிருக்கிறார்.
கூட்டணி ஆட்சி என்று அறிவித்திருக்கும் விஜய், 2026 தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸோடு கூட்டணி வைத்து புஸ்ஸி ஆனந்துக்கு துணை முதல்வர் பதவியை கேட்டு பெறுவதற்கு திட்டமிட்டுள்ளார்.
தற்போது வரை தவெகவுக்கு ஒன் மேன் ஆர்மியாக இருக்கும் புஸ்ஸி ஆனந்தை சிறிய மாநிலத்துக்குள் சுருக்க நினைப்பது அவரை அதிருப்தியடைய வைத்துள்ளது.
புஸ்ஸி ஆனந்த் மற்றும் விஜய்யுடன் நெருங்கிய நட்பை கொண்டிருக்கும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், புதுச்சேரி முதல்வருமான ரங்கசாமியும் விஜய்யின் அடுத்தடுத்த நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறார்” என்று கூறுகிறார்கள்.
தமிழ்நாட்டுக்கு யாரை பொதுச்செயலாளராக நியமிப்பது என்ற ஆலோசனையில் விஜய் உள்ளார் என்றும் தகவல்கள் வருகின்றன.
செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப்
வணங்காமுடி
தமிழக அரசு பணிக்கு இந்தி அவசியமா? – சீமான் எச்சரிக்கை… கீதா ஜீவன் விளக்கம்!!
யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் விடுதலை!