வைஃபை ஆன் செய்ததும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வேலூர் மாவட்டத்தில் நடை பயணம் செய்து கொண்டிருக்கும் வீடியோ இன்பாக்ஸில் வந்து விழுந்தது.
அதை பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் நடை பயணத்தின் ஒரு பகுதியாக இன்று வேலூர் மாவட்டத்தில் காட்பாடி, ஆரணி பகுதிகளில் சென்று கொண்டிருந்த அதே நேரம்… கோயமுத்தூரில் பாஜகவின் நாடாளுமன்ற தேர்தல் வியூகம் பற்றிய ஒரு முக்கியமான கூட்டம் நடந்து கொண்டிருந்தது,
பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி. எல். சந்தோஷ் நேற்று இரவு சென்னை வந்தவர் இன்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு கோவை சென்றார். அங்கிருந்து பாலக்காடு சென்று அங்கே சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிற்பகல் கோவை திரும்பினார்.
இன்று மாலை கோவையில் பி. எல். சந்தோஷ் தலைமையில் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான பாஜகவின் பொறுப்பாளர்கள், அமைப்பாளர்கள், இணை அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளரான அரவிந்த மேனனும் கலந்துகொண்டார்.
ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் செய்யப்பட்டிருக்கும் பூத் கமிட்டி உள்ளிட்ட கட்டமைப்புப் பணிகள் நிறைவடைந்து விட்டதா என்றும் எந்த அளவுக்கு நிறைவடைந்து இருக்கிறது என்றும் ப்ராஜெக்ட் ரிப்போர்ட்டை சமர்ப்பித்திருந்தனர். அவற்றை ஆய்வு செய்த சந்தோஷ், ஒவ்வொரு தொகுதி பொறுப்பாளரிடமும் பல கேள்விகளை கேட்டார்.
இதன் பிறகு இந்த முக்கிய கூட்டத்தில் பேசிய சந்தோஷ், ’வருகிற மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக போல பாஜகவுக்கு ஒரு பெரிய ஓப்பனிங் இருக்கிறது. இதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மத்திய அரசின் நலத்திட்டங்களை பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். பாஜகவுக்கு என தனிப்பட்ட வாக்கு வங்கியை இந்த தேர்தலில் நாம் உருவாக்க வேண்டும். வெற்றி பெறுகிறோமா தோல்வி அடைகிறோமா என்பதைத் தாண்டி இந்த மக்களவைத் தேர்தலில் இருந்து நாம் பிஜேபி ஓட் பேங்க் என்ற கருத்தை மெய்யாக்க வேண்டும். இதற்கு அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். உங்களது தொகுதியில் இருக்கிற பல்வேறு சமுதாய அமைப்புகளை ஒன்று திரட்டி நமது வேட்பாளருக்கு உதவ வேண்டும்’ என்று கூறினார்.
மேலும் சந்தோஷ், ‘இந்த மாதக் கடைசியில் நாடு தழுவிய பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியாகும். அதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் பெயர்களும் இடம் பெற்றிருக்கும். அதனால் இப்போதே கடுமையாக உழைக்க தயாராகுங்கள்’ என்று குறிப்பிட்டார்.
அண்ணாமலை இந்த கூட்டத்தில் நேரடியாக கலந்து கொள்ளாவிடினும் அவருடன் சந்தோஷ் முன்கூட்டியே பேசிவிட்டார். ஏற்கனவே நடைபயணம் பலமுறை தடைப்பட்டு தொடர்ந்து கொண்டிருப்பதால் விரைவில் முடிக்க வேண்டிய நிலைமையும் இருப்பதால்… இந்த கூட்டத்திற்காக நடைபயணத்தை ரத்து செய்துவிட்டு வர வேண்டாம் என சந்தோஷ் சொல்லிவிட்டார்.
அதிமுக- பாஜக கூட்டணி முறிந்த பிறகு கடந்த அக்டோபர் மாதம் சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த மையக்குழு கூட்டத்தில் பேசிய பி. எல். சந்தோஷ், ’நமக்கு தேசிய அளவில் எதிரி காங்கிரஸ், மாநில அளவில் எதிரி திமுக என்று குறிப்பிட்டிருந்தார். அதன் மூலம் அதிமுகவை எப்படியாவது மீண்டும் கூட்டணியில் கொண்டு வந்து சேர்த்து விடுவார்கள் என்ற கருத்து அப்போது பாஜக நிர்வாகிகளிடம் நிலவியது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பாஜகவுக்கு ஓப்பனிங் இருக்கிறது என்றும் பாஜக வாக்கு வங்கியை உருவாக்க வேண்டும் என்றும் சந்தோஷ் குறிப்பிட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார்கள் பாஜக நிர்வாகிகள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
விமர்சனம்: வடக்குபட்டி ராமசாமி
Video: பறந்து வந்த மாலை… அடுத்து தளபதி செஞ்சது தான் ஹைலைட்!