துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றுள்ள நிலையில், இனி தமிழ்நாட்டில் தேனாறும், பாலாறும் பாயும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிண்டல் செய்துள்ளார்.
விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி ஏற்றுள்ளார். சிறையில் இருந்து ஜாமீனில் வந்த செந்தில் பாலாஜி மீண்டும் மின்சாரத் துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.
இதுதொடர்பாக இன்று (செப்டம்பர் 30) சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,
“செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வழங்கியிருக்கிறார்கள். உச்சநீதிமன்றம் அவருக்கு பல்வேறு நிபந்தனைகள் அடிப்படையில் ஜாமீன் வழங்கியிருக்கிறது.
செந்தில்பாலாஜி ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வருகிறபோது முதல்வர் ஸ்டாலின், செந்தில் பாலாஜியை ‘வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது.. உறுதி அதனினும் பெரிது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆக, செந்தில் பாலாஜிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார். செந்தில் பாலாஜியும் முதலமைச்சருடைய பரிந்துரையின்படி அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
உச்சநீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனையை காவல்துறை கண்காணித்து அதை மீறினால் செந்தில்பாலாஜி மீது நடவடிக்கை எடுக்குமா என்ற சந்தேகம் மக்களிடத்தில் உள்ளது.
ஏனென்றால், முதல்வரே செந்தில்பாலாஜியை பாராட்டி இருக்கின்றார். அவர் அமைச்சராகிவிட்டார். இப்படி இருக்கிறபோது அவர் நீதிமன்ற நிபந்தனைகளை மீறுகிற பொழுது காவல்துறை நடவடிக்கை எடுக்குமா என்பது ஐயப்பாடாக இருக்கிறது.
அதோடு இன்றைய தினம் செந்தில் பாலாஜியின் வழக்குகளை தனி சிறப்பு நீதிமன்றம் அமைத்து ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பல நாட்களாக உதயநிதி துணை முதலமைச்சர் ஆவார் என்று ஊடகங்களிலும், பத்திரிகையிலும் திமுகவினர் கூறி வந்தனர். தற்போது உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. உதயநிதி தமிழகத்தின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் இனி தமிழகத்தில் தேனாறும் பாலாறும் ஓடும்” என விமர்சித்துள்ளார்.
இதையடுத்து அவரிடம், நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்திருக்கும் நிலையில் ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கிறாரே என்ற கேள்விக்கு, “முதல்வர் பரிந்துரை செய்தால், அதற்கு ஒப்புதல் அளித்து பதவி பிரமாணம் செய்து வைப்பது ஆளுநரின் கடமை. அதைத்தான் ஆளுநர் ரவி செய்திருக்கிறார்.
திமுகவுக்காக பலபேர் உழைத்தவர்கள் இருக்கிறார்கள். சிறைசென்று சித்தரவதை அனுபவித்தவர்கள் இருக்கிறார்கள். மிசாவில் சென்று வந்தவர்கள் இருக்கிறார்கள். மூத்த அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் எல்லாம் இருக்கிறார்கள். அவர்களுக்கு துணை முதல்வர் பதவி வழங்கியிருக்க வேண்டும்.
ஆனால் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு இந்த பதவி கொடுத்திருக்கிறார்கள். சொல்லப்போனால், ஸ்டாலின் தலைமையிலான அமைச்சர்களே உதயநிதி மகன் இன்பநிதி வந்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று சொல்கிற அளவுக்கு நிலைமை இருக்கிறது” என்று குறிப்பிட்டார் எடப்பாடி பழனிசாமி.
பாஜகவில் அண்ணாமலை கொண்டு வந்துள்ளார்கள் என்றெல்லாம் சொல்கிறார்களே என்ற கேள்விக்கு, “அண்ணாமலை அரசியல் வாரிசு கிடையாதே. ஆனால் ஸ்டாலின் யார்? உதயநிதி யார்? இதெல்லாம் வாரிசு அரசியல். தேர்தலில் மக்கள் பதில் கொடுப்பார்கள்” என்றார்.
2026ல் ஒன்றிணைந்தால் தான் அதிமுக வெற்றிபெறும் என்று சொல்கிறார்களே என்ற கேள்விக்கு, “நாங்கள்தான் அண்ணாதிமுக. இனி இப்படியெல்லாம் கேள்வி கேட்காதீர்கள். ஓபிஎஸ் பேசுவதற்கெல்லாம் நான் பதில் சொல்லமுடியாது” என்று பதிலளித்தார் எடப்பாடி.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ரஜினி ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்… ‘வேட்டையன்’ டிரைலர் ரிலீஸ் எப்போது?
வீரபாண்டியாரின் வளர்ப்பு… ஸ்டாலின் தோழன்… இப்போது அமைச்சர்- யார் இந்த வக்கீல் ராஜேந்திரன்?