Imanuel Sekaran Memorial Day: Honoring Udayanidhi... Stalin's Praise!

இமானுவேல் சேகரன் நினைவுதினம் : உதயநிதி மரியாதை… ஸ்டாலின் புகழாரம்!

அரசியல்

தியாகி இமானுவேல் சேகரனின் 67-வது நினைவு நாளையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசு சார்பில் அமைச்சர் உதயநிதி மலர் வளையம் வைத்து இன்று (செப்டம்பர் 11) மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பல்வேறு கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் 67-வது நினைவு தினத்தையொட்டி இன்று அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தி.மு.க சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டு இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

Image

இதற்கிடையே தற்போது அமெரிக்காவில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தீண்டாமையை ஒழிக்கவும் – சமூக விடுதலைக்காகவும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு நாள் இன்று. நாட்டுக்காகவும் ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்துக்காகவும் உழைத்த அவரது வாழ்வைப் போற்றுவோம்! சமத்துவமும் – சமூகநல்லிணக்கமும் மிளிர்ந்த சமூகத்தை நோக்கிய நமது பயணத்துக்கு அவரது தொண்டு உரமாகட்டும்!” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ராஜலட்சுமி, அன்வர் ராஜா, மணிகண்டன் உள்பட அ.தி.மு.க நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அ.தி.மு.க தொண்டர்கள் மீட்பு குழு சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தர்மர் எம்.பி உட்பட நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அதே போல் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் தலைவர் செல்வப் பெருந்தகை,  நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் டி.டி.வி தினகரன் மற்றும் தே.மு.தி.க சார்பில் விஜய பிரபாகரன் ஆகியோர் தங்களது கட்சி நிர்வாகிகளுடன் சென்று அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினரும், பல்வேறு சமுதாய தலைவர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தையொட்டி ஏற்கெனவே ராமாநாதபுரம், சிவகங்கையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் மேற்பார்வையில் தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் தலைமையில் 3 டி.ஐ.ஜி. 19 எஸ்.பி. 61 டி.எஸ்.பி. உள்பட சுமார் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடக்கத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

மெஸ்சி வளர்க்கும் நாயின் விலை எவ்வளவு தெரியுமா? ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள்!

”விவாகரத்து குறித்து என்னிடம் கேட்கவில்லை”: ஜெயம் ரவி மனைவி வேதனை!

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

1 thought on “இமானுவேல் சேகரன் நினைவுதினம் : உதயநிதி மரியாதை… ஸ்டாலின் புகழாரம்!

  1. புள்ளயாரு பொறந்த நாளைக்கு வாழ்த்து சொல்லலனு பொங்குனவைங்க, இங்க மலர் வளையம் வச்சானுகளானு மக்கள் கேக்குறாங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *