கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டதால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை இன்று (மே 16) சந்தித்து நலம் விசாரித்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சி அருகே உள்ள எக்கியார்குப்பம் பகுதியில் மே 14 அன்று கள்ளச்சாராயம் குடித்ததால் இதுவரை 14 பேர் உயிரிழந்தனர். மேலும், பாதிக்கப்பட்ட அனைவரும் புதுச்சேரி மற்றும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (மே 16) விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து, முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து நலம் விசாரித்ததோடு, மருத்துவர்களிடமும் அவர்களது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக எம்.பி சி.வி.சண்முகம், எம்.எல்.ஏக்கள் சக்கரபாணி, அர்ஜுனன், அருண்மொழி தேவன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “திமுக அரசு இரண்டு ஆண்டு காலமாக கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானம் விற்பனை செய்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதற்குக் காரணம் திமுகவை சேர்ந்தவர்கள் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபான விற்பனையில் ஈடுபட்டிருப்பதாக தெரிய வருகிறது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் அரசியல் பின்புலம் உள்ள ஒருவர் தொடர்ந்து மதுபான விற்பனையில் ஈடுபடுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனையெல்லாம் கட்டுப்படுத்த தவறிய காரணத்தால் தான் இன்றைய தினம் 18 உயிர்களை நாம் இழந்திருக்கின்றோம்.
அதிமுக ஆட்சியில் இருக்கும் போது இதனை கண்காணிப்பதற்காகத் தனிக் குழு அமைக்கப்பட்டது. கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானம் விற்பவர்களை உடனடியாக கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைத்தோம். ஆனால் இந்த இரண்டு ஆண்டு காலத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபான விற்பனையாளர்கள் அதிகரித்திருக்கிறார்கள்.
இன்றைக்கு இரண்டே நாளில் 2 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதோடு சுமார் 1,600 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அப்படியென்றால் இந்த கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானம் விற்பனை ஏற்கனவே அரசுக்கும் காவல்துறைக்கும் தெரிந்திருக்கிறது. இந்த 1,600 பேர் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்ததால் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான நபர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
எனவே, இதற்கெல்லாம் பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் பதவி விலக வேண்டும்” என்று வலியுறுத்தினார் எடப்பாடி பழனிசாமி.
மேலும் அவர், “ஏழை, எளியோர்கள், இரவு பகல் பாராமல் உழைக்கின்ற உழைப்பாளிகள் இன்றைக்கு விலைமதிப்பில்லாத உயிரை இழந்திருக்கிறார்கள்.
தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராய வியாபாரம் தடையில்லாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதற்கு ஆளுகின்ற கட்சியில் இருக்கின்றவர்கள் துணை போகிறார்கள். இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே சட்டமன்றத்தில் பேசியிருந்தேன்.
இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தால் 18 உயிர்களை இழந்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆட்சி பொறுப்பேற்கின்ற போது தேனாறும் பாலாறும் ஓடும் என்று சொன்னார்கள். இப்போது சாராய ஆறு தான் தமிழகத்தில் ஓடி கொண்டிருக்கிறது.
இதற்கு ஆட்சியில் இருப்பவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். துறை அமைச்சர் செந்தில் பாலாஜியால் போலி மது விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை. பெரும்பாலானவர்கள் ஆளுங்கட்சியில் இருப்பவர்கள் துணையோடு போதை பொருள் விற்பனை செய்யும் செயலில் ஈடுபடுவதால்தான் இதனை கட்டுப்படுத்த முடியவில்லை. அரசாங்கமே மதுபானத்தை அருந்துவதற்கு ஊக்குவிக்கிறது. மது குடிப்பதை குறைப்பதற்குப் பதிலாக அரசு அதிகரிக்கிறது” என்று தெரிவித்தார் எடப்பாடி.
தொடர்ந்து, ”ஜெயலலிதா ஆட்சியின் போது கள்ளச்சாராயம் குடித்து 52 பேர் உயிரிழந்த போது அவர் ராஜினாமா செய்தாரா?” என்ற கேள்விக்கு, “எதிர்க்கட்சியாக திமுக இருக்கும் போது ராஜினாமா செய்ய சொன்னார்கள். அதை தான் நாங்களும் சொல்கிறோம்” என்று பதிலளித்தார்.
மேலும், ”நீங்கள் முதல்வராக இருந்தபோது 20 பேர் கள்ளச்சாராயம் குடித்து இறந்தார்களே?” என்ற கேள்வி கேட்கப்பட்டதும், “அதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது. எதுவாக இருந்தாலும் ஆதாரத்துடன் பேசுங்கள்” என்று செய்தியாளர்களை பேசவிடாமல் எழுந்து சென்றார் எடப்பாடி பழனிசாமி.
மோனிஷா
செந்தில் பாலாஜி வழக்கில் மீண்டும் விசாரணை: உச்சநீதிமன்றம் உத்தரவு!
கெட்டு போன கள்ளச்சாராயத்தால் உயரும் பலி எண்ணிக்கை?