கள்ளச்சாராய விவகாரத்தில் குற்றவாளிக்கு நிவாரணம் வழங்கியதாக சர்ச்சை எழுந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கைதாகியுள்ள அம்மாவாசைக்கு வழங்கப்பட்ட காசோலை ரத்து செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் மற்றும் சிகிச்சையில் உள்ளவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று (மே 16) வழங்கினார்.
இதில் கள்ளச் சாராயத்தை விற்ற கரிக்கந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த அம்மாவாசை என்பவரும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்ததால், அவருடைய பெயரும் ரூ. 50 ஆயிரம் நிவாரணம் பெறும் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருந்தது.

இதனையறிந்த அமைச்சர், அம்மாவாசையை தவிர்த்து மற்ற அனைவருக்கும் நிவாரணத் தொகைக்கான காசோலையை வழங்கி சென்றார்.
எனினும் சாராய வியாபாரி அம்மாவாசையின் பெயர் இருந்த பட்டியல் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் தமிழ்நாடு அரசை விமர்சித்து கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்நிலையில் செங்கல்பட்டு கள்ளச்சாராய விவகாரத்தில் தொடர்புடைய சாராய வியாபாரி அம்மாவாசைக்கு வழங்கப்பட்ட 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா