கள்ளச்சாராயம் விற்பனை விவகாரத்தில் போலீசார் தொடர்ந்து பலரை கைது செய்து வருகின்றனர்.
விழுப்புரம் எக்கியார்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பதினான்காக அதிகரித்திருக்கிறது.
விஷ சாராயம் குடித்ததில் உடல்நிலை பாதிக்கப்பட்டு பலர் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், புதுச்சேரி பிம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் உயிர் பலி அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
இதனிடையே கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். விஷ சாராயம் விற்பனை செய்தவர்கள், சப்ளை செய்தவர்கள் யார் யார் என்று விசாரணையில் இறங்கி கைது செய்து வருகிறது காவல்துறை.
முதலில் சாராயம் விற்பனை செய்த அமரன் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் மரக்காணம் முத்துவை கை காட்டினார், முத்துவை பிடித்து விசாரித்ததில், மரூர் ராஜாவைக் கை காட்டினார்.
திண்டிவனத்தைச் சேர்ந்த மரூர் ராஜா அமைச்சர் மஸ்தானுக்கு நெருக்கமானவர் ஆவார். இதுகுறித்து மின்னம்பலத்தில் நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம்.
மரூர் ராஜா சாராய விற்பனை வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு திண்டிவனம் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் நேற்று (மே 15)போலீசார் விசாரித்திருக்கின்றனர்.
இந்த விசாரணை தொடர்பாக நாம் போலீசாரிடம் விசாரித்த போது,
“மரூர் ராஜாவிடம் நடத்திய விசாரணையில் புதுச்சேரியில் வசிக்கும் ஆண்டியார்பாளையம் ராஜாவின் பேரை சொல்லி, அவர்தான் பெரிய சப்ளையர் என்றார்.
இதையடுத்து முக்கிய பிரமுகர்கள் வசிக்கக்கூடிய புதுச்சேரி முத்தியால்பேட்டை விஷ்வநாதன் நகர் சென்ற போலீசார் அங்கு குடியிருந்து வரும் ராஜாவின் வீட்டுக் கதவை தட்டினர்.
ஆனால் ராஜா அங்கு இல்லை. போலீசார் தேடுதல் வேட்டையில் அவர் சிக்கவில்லை. அதனால் போலீசார் மாற்று வழியை கையாண்டதால் தானே முன்வந்து சரணடைந்தார்.
அதோடு, ராஜா புதுச்சேரி மாவட்டத்தில் நெட்டப்பாக்கம், சேதுராப்பட்டு, மடுக்கரை, திருக்கனுர் போன்ற பகுதிகளில் பினாமி பெயரில் சாராயக் கடை நடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இப்படி சாராயம் தொழில் செய்பவர் குறுக்கு வழியில் கூடுதலாக சம்பாதிக்க, மெத்தனால் ஏன் கலக்க வேண்டும் என்று சந்தேகித்து, “மெத்தனால் எங்கே வாங்கின?. உண்மையை சொல்லவில்லை என்றால் அவ்வளவுதான்” என்று காட்டமாக விசாரித்தனர்.
உரிய முறையில் விசாரித்ததும், “சென்னை பூந்தமல்லி ஹைரோட்டில் உள்ள ஒரு கம்பெனியில் வாங்கினேன். வாங்க அந்த கம்பெனியை காட்டுகிறேன்” என விசாரணை அதிகாரிகளை சென்னைக்கு அழைத்துபோய் மெத்தனால் வாங்கிய கம்பெனியை காட்டினார் ராஜா.
தொடர்ந்து, மெத்தனால் கொடுத்த கம்பெனிக்கு தொடர்புடையவர்களை தனிப்படை போலீசார் அழைத்து வந்து விசாரிக்கவுள்ளனர்” என்றனர் விசாரணை அதிகாரிகள் வட்டாரத்தில்.
மெத்தனால் வழங்கிய கம்பெனியின் உள்நோக்கம் என்ன?. இதன் பின்னணியில் சதி வேலைகள் ஏதாவது இருக்கிறதா? என தனிப்படை விசாரித்து வருகிறது.
இதனிடையே இறந்தவர்களின் உடலை பரிசோதனை செய்ததில் அவர்கள் குடித்தது எத்தனால் இல்லை மெத்தனால் கலந்ததைக் குடித்துள்ளனர் என்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை அறிக்கை கொடுத்துள்ளது.
வணங்காமுடி
ரவி தேஜாவின் “டைகர் நாகேஸ்வரராவ்” அப்டேட்!