கள்ளச்சாராய விவகாரம் தொடர்பான விசாரணையில் ஒரு நபர் ஆணையத்தில் உண்மை வெளிவராது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூன் 22) தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்று (ஜூன் 22) காலை வரை 54 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி மருத்துவமனைகளில் 141 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளச்சாராய விவகாரத்தில் இதுவரை முக்கிய குற்றவாளிகளான கண்ணுக்குட்டி, சின்னதுரை உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று (ஜூன் 22) 3வது நாளாக சட்டப்பேரவை கூடியது. கள்ளக்குறிச்சி விவகாரத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு உடை அணிந்து வருகை தந்தனர்.
அவை கூடியதும் சபாநாயகர் அப்பாவு முதலில் கேள்வி நேரம் எனவும், பின்னர் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் குறித்து பேச அனுமதிக்கப்படும் எனவும் கூறினார்.
ஆனால், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பேச அனுமதி கேட்டு சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “கள்ளக்குறிச்சி சாராய விவகாரம் குறித்து பேச அனுமதி கேட்டோம். ஆனால் அவர்கள் பேச அனுமதி கொடுக்கவில்லை.
இதுவரை எத்தனை பேர் உயிரிழந்திருக்கிறார்கள், இன்னும் எத்தனை பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது போன்ற விவரங்களை கேட்டு பெறுவதற்கு அனுமதி கேட்டோம். ஆனால் இன்றைக்கும் பேரவை தலைவர் அப்பாவு அனுமதி கொடுக்கவில்லை.
எங்களுக்கு கிடைத்த தகவல் படி, 183 பேர் சிகிச்சையில் இருந்ததாகவும், அதில் 55 பேர் உயிரிழந்ததாகவும் செய்திகள் எங்களுக்கு கிடைத்திருக்கின்றன. இந்த அரசு மெத்தனப்போக்குடன் செயல்பட்டு வருகிறது.
துரிதமாக செயல்பட்டு இருந்தால் நிறைய உயிர்களை காப்பாற்றியிருக்கலாம். கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்ட இடத்தில் 300 மீட்டர் தொலைவில் தான் காவல் நிலையம் இருக்கிறது. அதன் அருகே தான் நீதிமன்றம் இருக்கிறது. ஆனால் எப்படி சாராய விற்பனை அந்த பகுதியில் சாதாரணமாக நடைபெற்றது?
நேற்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஜிப்மர் மருத்துவமனையில் ஆய்வு செய்துவிட்டு பேட்டி கொடுக்கிறார். ஓம்பிரசோல் மாத்திரை நிறைய கையிருப்பு உள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமி வேண்டும் என்றே ஒரு பதற்றத்தை ஏற்படுத்துகிறார் என்றும் கூறினார்.
நான் விஷ சாராய முறிவுக்கான மருந்துக்கு தட்டுப்பாடு உள்ளது என்று தான் தெரிவித்தேன். ஆனால் மா.சுப்பிரமணியன் அல்சர் மருந்திற்கான ஓம்பிரசோல் மருந்து கையிருப்பு உள்ளதாக தெரிவிக்கிறார்.
அமைச்சர் பொய் கூறுகிறார். விஷ சாராய முறிவுக்கு பயன்படும் மருந்து தமிழக அரசிடம் கையிருப்பில் இல்லை என்பதுதான் உண்மை.
கள்ளச்சாராய விவகாரம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு ஒரு நபர் ஆணையம் அமைத்துள்ளது. இந்த விசாரணையில் உண்மை வெளியே வராது. ஏனெனில், மாவட்ட ஆட்சியரே ஒரு பொய்யான தகவலை கூறும்போது, இந்த அரசாங்கத்தால் எப்படி உண்மை வெளிவரும் என்று நம்பமுடியும்.
கள்ளச்சாராய விவகாரம் குறித்த உண்மை நிலவரம் தெரிய வேண்டும் என்றால் சிபிஐ விசாரணை வேண்டும். நாங்கள் அதற்காக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். நிச்சயமாக நீதியரசர்கள் நீதியை நிலைநாட்டி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், ஒரு மாநிலத்தின் டிஜிபிக்கு அந்த மாநிலத்தில் நடக்கும் சம்பவம் தெரியவில்லை. இதை சொல்வதற்கு அவர்களுக்கு வெட்கமாக இல்லையா?
இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் சம்மந்தப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் 2 மாநிலங்கள் சம்மந்தப்பட்டுள்ளன. மெத்தனால் கலந்த சாராயம் குடித்ததால்தான் உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த மெத்தனால் ஆந்திராவில் இருந்து வரவழைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி இருக்கும் போது, எப்படி சிபிசிஐடி இதனை விசாரிக்கும். இதற்கு சிபிஐ விசாரணை தான் சரியாக இருக்கும்.
ஏற்கனவே சொன்னதுபோல, திமுகவை சேர்ந்த 2 கவுன்சிலர்களுக்கு இந்த கள்ளச்சாராய விற்பனையில் தொடர்பு உள்ளது. இதை நான் சொல்லவில்லை. அங்குள்ள மக்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.
காங்கிரஸ் மாநிலத் தலைவர் நேற்று இதற்கு மேல் ஒரு அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார். ஏனெனில், அவர்கள் திமுகவுடன் 25 வருடங்களுக்கு கூட்டணி ஒப்பந்தம் போட்டுள்ளனர். எனவே, அவர்கள் திமுகவிற்கு சாதகமாகத்தான் பேசுவார்கள்.
கடந்தாண்டும் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தனர். அப்போது திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தது. தற்போதும் இதைத்தான் சொல்கிறார்கள். இனி வரும் காலங்களிலும் இதுபோன்ற சம்பவம் நடந்தாலும் அவர்கள் அதைதான் சொல்வார்கள். இது தமிழக அரசின் கையாளாகாத தனத்தை காட்டுகிறது. எனவே, இதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள தேவையானவற்றை இந்த அரசாங்கம் செய்ய வேண்டும்.
ஏனெனில், இது மக்கள் பிரச்சனை. ஏராளமான மக்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்” என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…