தாது மணல் கொள்ளை வழக்கில் சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Illegal sand mining case
தென் மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாது மணல் எடுக்க தடை செய்யப்பட்டிருந்த சமயத்தில் சட்டவிரோதமாக எடுத்த விவகாரத்தில் விவி மினரல்ஸ், டிரான்ஸ்வோர்ல்டு கேமட் இந்தியா பிரைவேட் லிமிடெட், பீச் மினரல்ஸ்,இண்டஸ்ட்ரியல் மினரல் கம்பெனி, மாணிக்கம் மினரல்ஸ், இந்தியன் ஓசன் கார்னெட் மணல் கம்பெனி ஆகிய 6 கம்பெனிகளுக்கு 3500 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
தாது மணல் கொள்ள தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட ககன் தீப் சிங் பேடி ஐஏஎஸ் இந்த நிறுவனங்களிடமிருந்து சுமார் 5,800 கோடி வசூலிக்க வேண்டும் என்று அறிக்கை தாக்கல் செய்தார்.
இதுதொடர்பாக நமது மின்னம்பலத்தில் தாது மணல் கொள்ளை : 3500 கோடி அபராதம்: சிக்கிய 6 நிறுவனங்கள் என்னென்ன? என்ற தலைப்பில் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம்.
உயர் நீதிமன்றம் விசாரணை!

இதற்கிடையே, கடற்கரைகளில் இருந்து சட்ட விரோதமாக தாது மணல் எடுக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி விக்டர் ராஜமாணிக்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை தாமாக முன்வந்து எடுத்து 2015 முதல் உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது.
இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில், “விவி மினரல்ஸ், டிரான்ஸ்வோர்ல்டு கேமட் இந்தியா பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நெல்லையில் 52, தூத்துக்குடியில் 6, கன்னியாகுமரியில் 6 என மொத்தமாக 64 உரிமங்கள் வழங்கப்பட்டன.
ஆனால் சட்டவிரோதமாக மணல் எடுக்கப்படுவதாக புகார் வந்ததால் 2013ஆம் ஆண்டு தாது மணல் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
தடை விதிப்பதற்கு முன்பு, தடை விதித்த பிறகு சட்டவிரோதமாக தாது மணல் எடுத்ததால் 5,832 ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டது. தனியாரிடம் இருந்த ஒரு கோடியே 55 லட்சம் டன் தாது மணலை பறிமுதல் செய்து மத்திய அரசிடம் ஒப்படைக்க முடிவெடுக்கப்பட்டது.
ககன் தீப் சிங் பேடி அறிக்கை! Illegal sand mining case

அரசு நியமித்த ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ் தலைமையிலான சிறப்பு குழு ஆய்வு செய்ததில், 2018 – 2022 வரையிலான ஆண்டுகளில் சுமார் 16 லட்சம் டன் அளவிலான தாது மணல் சட்ட விரோதமாக கடத்தப்பட்டதும், இதில், மோனோசைட் உள்ளிட்ட கனிமங்கள் கடத்தப்பட்டதும் தெரியவந்தது” என்று கூறப்பட்டது.
மத்திய அரசு சார்பில், “மோனோசைட் என்பது அணுசக்திக்கு தேவையான முக்கியமான கனிமம் ஆகும். எனவே இதை பிரித்தெடுக்க மத்திய அரசு யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை. மோனோசைட் தாது பிரித்து எடுப்பதற்காக எந்த ஒரு புதிய கொள்கையும் வகுக்கப்படவில்லை” என்று வாதிடப்பட்டது.
இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவும் வகையில் ஆர்மி க்யூரியாக வழக்கறிஞர் சுரேஷ் நியமிக்கப்பட்டிருந்தார்.
அவர், கார்னெட், இலுமினைட் உள்ளிட்ட தாதுமணல் எடுக்கப்பட்டு தூத்துக்குடி துறைமுகம் வழியாக சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படுகிறது என்றும் இதனால் அரசுக்கு மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் கூறி 5 அறிக்கைகளை தாக்கல் செய்தார்.
ஊழல் புற்றுநோய்! Illegal sand mining case
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று (பிப்ரவரி 17) நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் உத்தரவு பிறப்பித்தனர்.
சமூகத்தில் ஊழல் என்பது புற்றுநோய் போன்றது. அதை ஆரம்பத்திலேயே அழிக்க வேண்டும். இல்லையென்றால் மொத்த சமுதாயமும் பாதிக்கப்படும் என்று தெரிவித்த நீதிபதிகள், “
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கடற்கரைகளில் தாது மணல் எடுக்கப்பட்டிருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசியல் செல்வாக்குடன் நடத்தப்பட்ட இந்த தாது மணல் கொள்ளை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடுகிறோம். தாது மணல் சட்டவிரோதமாக எடுத்தது தொடர்பாக மாநில காவல் துறை பதிவு செய்த வழக்குகளை 4 வாரங்களில் சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்.
இதுதொடர்பாக சிபிஐ அடிமட்டத்திலிருந்து விசாரணை செய்து அறிக்கையளிக்க வேண்டும். அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் இடையேயான தொடர்பைக் கண்டறிய வேண்டும். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது உள்ளிட்ட தனியார் நிறுவனங்களின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக அமலாக்கத்துறை, வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
தடை செய்யப்பட்ட பிறகும் தாது மணல் எடுக்கப்பட்டிருப்பது அரசின் சிறப்பு குழு அளித்த அறிக்கை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக தாது மணல் எடுக்கப்பட்டதற்காக உரிமை தொகையாக தனியார் நிறுவனங்களுக்கு 5,832 கோடி அபராதம் விதிக்கப்பட்ட உத்தரவு செல்லும். அதை வசூலிக்கவும். உத்தரவிடுகிறோம்.
தாது மணல் கொள்ளை தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் ககன் தீப் சிங் பேடி, சத்ய பிரதா சாகு ஆகியோரின் அறிக்கை செல்லும்.
சட்டவிரோதமாக எடுக்கப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ள தாது மணலை உடனடியாக மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.
தடை செய்யப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட தாது மணலுக்கான தொகை மற்றும் ராயல்டி தொகையை தனியார் நிறுவனங்களிடமிருந்து வசூலிக்க வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தனர். Illegal sand mining case