இசைக் கச்சேரி நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்றிருந்த இளையராஜா, இன்று (ஜூலை 19) சென்னை திரும்பிய நிலையில் அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் டெல்லியில் நேற்று (ஜூலை 18) தொடங்கியது. ராஜ்யசபாவில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பதவியேற்றனர்.தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக திமுக கூட்டணியான காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து கிரிராஜன், கல்யாணசுந்தரம், ராஜேஷ்குமார் ஆகியோரும், அதிமுக உறுப்பினர்களான சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோரும் உறுதிமொழி ஏற்றனர்.
மாநிலங்களவையின் சபாநாயகரான குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, நியமன எம்பியாக தேர்வுசெய்யப்பட்ட இசையமைப்பாளர் இளையராஜாவை பதவிப் பிரமாணத்திற்காக அழைத்தார். அவர் பெயரைச் சொன்னதும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். ஆனால் அவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை. ஆப்செண்ட் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் நடந்த இசை கச்சேரி நிகழ்ச்சிக்காக சென்றிருந்த இளையராஜா இன்று காலை சென்னை திரும்பினார். மாநிலங்களவை நியமன எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட பின் முதன்முறையாக சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இயக்குநர்கள் பாரதிராஜா, கங்கை அமரன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்பட பாஜக சார்பில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் பங்கேற்று அவரை வரவேற்றனர்.
கடந்த 6ஆம் தேதி இளையராஜாவோடு நியமன எம்பிக்களாக நியமிக்கப்பட்ட விஜயேந்திர பிரசாத், வீரேந்திர ஹெக்டே ஆகியோர் நேற்று பதவி ஏற்றனர். இந்த நிலையில் இளையராஜா மற்றும் பி.டிஉஷா ஆகியோர் விரைவில் எம்பியாக பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா