இளையராஜா எந்தளவுக்கு பிரபலமானவரோ அந்த அளவுக்கு இவர் பேசும் வார்த்தைகள் அடிக்கடி பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி தலைப்பு செய்தியாக மாறிவிடும். இளையராஜா பேச்சு பற்றி பலருக்கும் பலவிதமாக கருத்துகள் இருந்தாலும், அவருடைய இசை மனதின் வலிகளை குறைக்கும் தன்மை கொண்டது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
அத்தகைய இசைஞானி இளையராஜா வரும் 8ஆம் தேதி லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றவுள்ளார். லண்டனில் ஈவன்டிம் அப்பல்லோ அரங்கத்தில் அவரின் சிம்பொனி இசைக்கப்படுகிறது. 35 நாட்களில் இந்த சிம்பொனியை இளையராஜா உருவாக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, பல தமிழக பிரபலங்கள் இளையராஜாவை சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலினும் இளையராஜாவின் வீட்டுக்கு நேரடியாக சென்று வாழ்த்து தெரிவித்தார். முதல்வரை வாசலில் நின்று வரவேற்று வீட்டுக்குள் இளையராஜா அழைத்து சென்றார். பின்னர், இருவரும் பல விஷயங்களை விவாதித்தனர். ilayaraja interaction with stalin
தொடர்ந்து, இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், “இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது… ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று லண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதிற்கினிய ராஜா. தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக நேரில் சென்றேன்.
அப்போது, தானே கைப்பட எழுதிய Valiant symphony இசைக் குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார். உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசைமூச்சான இளையராஜாவின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துகிறேன்” என்று கூறி மகிழ்ந்திருந்தார்.

இது தொடர்பான வீடியோ ஒன்றையும் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோ பதிவில், இளையராஜாவும் முதல்வர் ஸ்டாலினும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது, “ஐயாதான் ‘இசைஞானி’ பட்டம் கொடுத்தார். அதை மாற்றவே முடியவில்லை.” என்று கலைஞர் குறித்து ஸ்டாலினிடம் மகிழ்ச்சியுடன் இளையராஜா கூறினார். அதற்கு, ஆம் அதுவே நிலைத்துவிட்டது’ என ஸ்டாலின். பதில் கூறினார்.ilayaraja interaction with stalin
பின்னர், ஸ்டாலின் என்னிடத்தில் எஸ்.பி பாலசுப்பிரமணியம் பாடிய சி.டி ஒன்று இருக்கு. அதுல பெரும்பாலும் உங்களுடைய இசைதான். அதைதான் காரில் போகும்போது எப்போதுமே கேட்கிறேன் என்று இளையராஜாவிடம் ஸ்டாலின் சொன்னார். தொடர்ந்து “உங்களுடைய பிறந்தநாள் ஜூன் 3 தான். ஆனால் ஜூன் 2 என்று மாற்றி வைத்துக் கொண்டீர்களே” என ஸ்டாலின் கேட்க, “இல்லை, அப்பாவுக்காக” என்று இளையராஜா பதில் அளித்தார். அதாவது, கலைஞரின் பிறந்த நாள் ஜூன் 3 ஆம் தேதி என்பதால் தனது பிறந்த நாளை ஜூன் 2 என மாற்றிக் கொண்டதாக இளையராஜா ஸ்டாலினிடம் விளக்கினார்.

இப்படியாக முதல்வருடன் இசைஞானியின் சந்திப்பு அற்புதமான முறையில் அமைந்திருந்தது. சமீப காலமாக திமுகவினரும் இளையராஜாவை விமர்சிப்பதில்லை. திமுகவின் ஐ.டி விங்கும் இளையராஜா பற்றி மீம்கள் எதுவும் வெளியிடுவதில்லை. திமுகவின் ஐ.டி. விங் இளையராஜா விஷயத்தில் அடக்கி வாசிப்பதற்கும் ஸ்டாலின்தான் காரணம் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.
அதாவது, இளையராஜா ராஜ்யசபா எம்.பி யான போது, அவரை திமுகவின் ஐ.டி விங் கடுமையாக விமர்சிக்க தொடங்கியது. இளையராஜா சங்கி… சங்கி என்று பல மீம்கள் பறந்து கொண்டிருந்தன. திமுகவினரும் சங்கி சங்கி என்று பேசி வந்தனர். தனது இசைப்பணிக்கிடையேயும் இளையராஜா இதையெல்லாம் கவனித்திருக்கிறார்.ilayaraja interaction with stalin
கடந்த ஆண்டு இளையராஜா பிறந்த நாளின் போது, முதல்வர் ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார். அப்போது, முதல்வரிடத்தில் இளையராஜா, என்னை சங்கி சங்கி என்று திமுகக்காரங்க திட்டுறாங்கப்பா. எனக்கு அரசியல், சாதி, மதம் இதெல்லாம் தெரியாதுப்பா.எனக்கு தெரிஞ்சது எல்லாம் இசை மட்டும்தான். டெண்டுல்கருக்கு லதா மங்கேஷ்கருக்கு எல்லாம் எம்.பி பதவி கொடுத்துருக்கோம். அதே மாதிரிதான் உங்களுக்கும் தாரோம் என்று சொன்னாங்க.
நானும் சரினு சொன்னேன். மற்றபடி எனக்கு அரசியல்லாம் எதுக்குப்பா. எனக்கு ஆன்மீகத்துல நம்பிக்கை உண்டு. நான் அந்த பாதைல போயிட்டுருக்கேன். அதுக்காக, உங்க ஆட்கள் சங்கினு சொல்றதை என்னலா ஏத்துக்க முடியலப்பா என்று கூறியபடி கலங்கியுள்ளார்.ilayaraja interaction with stalin
ராஜா, இப்படி கூறியதும் முதல்வர் ஸ்டாலினும் உருகி போனார். . சே… எவ்வளவு பெரிய மனிதர். இப்படி பேசுற அளவுக்கு ஆக்கிட்டாங்களே என்று கருதினார். தொடர்ந்து, திமுக ஐ.டி விங்குக்கு இளையராஜா பற்றி மீம்கள் போடுவது , விமர்சிப்பதோ கூடாது என்று தடை போட்டு விட்டார். கட்சிக்காரங்களுக்கும் இனி இளையராஜாவை விமர்சிக்க கூடாது என்று உத்தரவு பறந்தது. இதனால், திமுகவினர் இளையராஜாவை மறந்தே போனார்கள்.

அந்த சந்திப்புக்கு பிறகு கடந்த மார்ச் 2 ஆம் தேதிதான் மீண்டும் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். அப்போது, இருவருமே அலாதியான உற்சாகத்துடன் காணப்பட்டனர்.
இளையராஜாவை ஸ்டாலின் சந்தித்த பிறகு கூட்டணி கட்சியினரும் அவரை சந்தித்து வாழ்த்த தொடங்கினர். காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை குடும்பத்துடன் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் வீட்டுக்கு சென்று இளையராஜாவை சந்தித்து அளவளாவி மகிழ்ந்தார்.
அதே போல, பாரதிய ஜனதா கட்சி தமிழகத் தலைவர் அண்ணாமலை, எல் .முருகன், கமல்ஹாசன், நடிகர் சிவகார்த்திகேயன் போன்றவர்களும் இளையராஜாவை சந்தித்து வாழ்த்தினர். தலைவர்கள் மற்றும் தமிழக மக்கள் வாழ்த்துக்களுடன் இசைஞானி இளையராஜா சென்னையில் இருந்து இன்று (மார்ச் 6) லண்டன் புறப்பட்டு சென்றார். ilayaraja interaction with stalin
முன்னதாக செய்தியாளர்களிடத்தில் பேசிய அவர், “இது ரசிகர்களுக்கு நிச்சயம் மிகப்பெரிய இசை விருந்தாக இருக்குமென்பதில் எனக்கு கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை. இது என்னுடைய பெருமை அல்ல, இது நாட்டினுடைய பெருமை.இந்தியாவினுடைய பெருமை.இன்க்ரீடிப்பில் இந்தியா போல, இன்க்ரீடிப்பில் இளையராஜா” என்று மகிழ்ச்சி பொங்க பேசினார்.
மார்ச் 8 ஆம் தேதி இரவு இளையராஜாவின் இசையால் லண்டன் நகரம் தாலட்டப்படும் என்பதில் சந்தேகமில்லை என்றே சொல்ல தோன்றுகிறது.