மோடி புத்தக வெளியீடு: இளையராஜா ஆப்சென்ட் ஏன்?

அரசியல்

இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதிய ‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் அவரே கலந்துகொள்ளாதது மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது.

‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற புத்தகத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா சில மாதங்களுக்கு முன்பு முன்னுரை எழுதியிருந்தார்.

அம்பேத்கரையும், பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு இளையராஜா எழுதிய இந்த முன்னுரை தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இளையராஜா எழுதிய முன்னுரையை வைத்து அவரது ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இளையராஜாவுக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்தார்கள். ஆனால், இது எதற்கும் இளையராஜா பதிலளிக்கவில்லை.

ஆனால், அதற்குப் பதில் அவரது சகோதரரும் இயக்குநருமான கங்கை அமரன் பதிலளித்திருந்தார். இந்த நிலையில்தான் மாநிலங்களவை நியமன எம்.பிக்களாக இளையராஜா, பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, விஜயேந்திர பிரசாத் ஆகியோர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டனர்.

‘அம்பேத்கரோடு மோடியை ஒப்பிட்டுப் பாராட்டியதற்குப் பரிசுதான் இளையராஜாவுக்கு பிஜேபி அரசு நியமன எம்பியை வழங்கியிருக்கிறது’ என மீண்டும் சர்ச்சை வெடித்தது.

இதை எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஊடகவியலாளர்களும் பெரிதாக விமர்சிக்கத் தொடங்கினர்.

எனினும், அந்த சர்ச்சை அடங்குவதற்குள், ஜூலை 18ம் தேதி தொடங்கிய முதல் நாள் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் இளையராஜா பதவியேற்கவில்லை என அடுத்து ஒரு சர்ச்சை பேச்சு கிளம்பியது.

என்றாலும் அடுத்த சில நாட்களிலேயே அமெரிக்காவிலிருந்து திரும்பிய இளையராஜா நியமன எம்.பியாக பதவியேற்றார்.

இந்த நிலையில், இளையராஜா முன்னுரை எழுதிய ‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற புத்தகம் இன்று (செப்டம்பர் 16) டெல்லியில் வெளியிடப்படுவதாக அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டன.

அழைப்பிதழில் இந்நிகழ்வின் தலைமை விருந்தினராக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், கௌரவ விருந்தினர்களாக முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், இளையராஜா எம்.பி. ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

இதையடுத்து இந்த விழாவில் இளையராஜா என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இளையராஜாவின் ஆதரவு எதிர்ப்பு வட்டாரங்களில் எழுந்தது.

ஆனால் இன்று நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் இளையராஜா பங்கேற்கவில்லை. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புத்தகத்தை வெளியிட, விழாவில் மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தன் உரையில் இளையராஜாவை குறிப்பிட்டுப் பேசினார்.

இப்புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய இளையராஜாவே இவ்விழாவில் பங்கேற்காதது மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது.

பாஜகவால் நியமன எம்பி பதவி கொடுக்கப்பட்ட பின்னரும் கூட இளையராஜா, தான் சம்பந்தப்பட்ட புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளாதது பாஜக டெல்லி புள்ளிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது.

இளையராஜா தனது இசை தொடர்பான பணிகளால் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

ஜெ.பிரகாஷ்

யுவன் பிறந்த சந்தோஷத்தில் உருவான பாடல்: மனம் திறந்த இளையராஜா

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *