இளையபெருமாள் நூற்றாண்டு நினைவரங்கம்: முதல்வர் அறிவிப்பு!

Published On:

| By Monisha

சிதம்பரத்தில் இளையபெருமாள் நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (ஏப்ரல் 18) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார்.

”சிதம்பரம் மண்ணில் பிறந்து நாடு முழுவதும் பட்டியலின மக்களுக்கு அடைபட்டிருந்த உரிமை வாசலை திறந்தவர் இளையபெருமாள்.

பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது இரட்டைப்பானை முறையைப் பார்த்து, பள்ளிக்குள் மறைந்திருந்து இரவு நேரத்தில் பானைகளை உடைத்தார்.

இளையபெருமாள் தொடர்ச்சியாக உடைத்ததால் தான் அந்த காலத்தில் இரட்டை பானை முறை நீக்கப்பட்டது.

ராணுவத்தில் சேர்ந்த போதும் பாகுபாடு காட்டப்பட்டது. அங்கு துணிச்சலாக மேலதிகாரியிடம் புகார் அளித்து பாகுபாட்டை கலைத்தார். ஓராண்டு காலத்திலேயே ராணுவத்தில் இருந்து விலகி மக்கள் பணியாற்ற வந்து விட்டார்.

ஒன்றுபட்ட தென்னாற்காடு மாவட்டம் தஞ்சை மாவட்டத்தில் 1940 – 1970 வரையில் நடைபெற்ற மிகப்பெரிய சமூக போராட்டங்களை நடத்தியவர் பெரியவர் இளையபெருமாள். பட்டியலின மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட இவருடைய போராட்டம் தான் காரணம்.

காங்கிரஸ் கட்சியில் இணைந்த இளையபெருமாளுக்கு அவருடைய 27 வயதில் கடலூர் தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்ததோடு அதில் வெற்றியும் பெற்றார்.

ilayaperumal centenary memorial

பின்னர் டெல்லி சென்ற இளையபெருமாள் அண்ணல் அம்பேத்கரை சந்தித்தார். அப்போது அம்பேத்கர், ”இவ்வளவு இளம் வயதில் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று வந்திருக்கிறீர்களே, அந்த மக்களுக்காக என்ன செய்தீர்கள்?” என்று கேட்டார்.

அதற்கு தென்னாற்காடு மற்றும் தஞ்சை மாவட்டத்தில் நடத்திய மக்கள் போராட்டங்கள் மற்றும் தீண்டாமை எதிர்ப்பு போராட்டங்களை இளையபெருமாள் பட்டியல் போட்டு சொன்னதைக் கேட்டு அம்பேத்கரே வியந்து பாராட்டியிருக்கிறார்.

3 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும், அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டி தலைவராகவும் இருந்தவர் இளைய பெருமாள்” என்று முதல்வர் புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து, “சமூக போராளி இளையபெருமாளை போற்றுவதை திராவிட மாடல் அரசு தனது கடமையாக கருதுகிறது. சமூக இழிவு களையப்படவேண்டும். சாதிய வன்முறை ஒடுக்கப்படவேண்டும்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சட்டரீதியான அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும்., சமத்துவ சுயமரியாதை சமூகம் உருவாக்கப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு உழைத்த பெரியவர் இளையபெருமாள் தொண்டை சிறப்பிக்கும் வகையில்,

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று அறிவித்தார்.

முதல்வரின் அறிவிப்புக்கு காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல கட்சி தலைவர்களும் உறுப்பினர்களும் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

மோனிஷா

சப் இன்ஸ்பெக்டரை பாராட்டிய முதல்வர்

பொதுச்செயலாளர் விவகாரம்: தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share