சனாதன தர்மத்தை யாராவது அழிக்க நினைத்தால், நீங்கள் அழிந்து போவீர்கள் என தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அப்போது, “சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரியம் ஆகும்” என உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார்.
அவரது இந்த பேச்சு தேசிய அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அவரது பேச்சுக்கு இந்து அமைப்புகளும், பாஜகவினரும் மட்டுமல்ல இந்தியா கூட்டணிக் கட்சி தலைவர்களே கடும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக தெலுங்கானா மாநில காங்கிரஸ் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ”சனாதனம் குறித்து தவறாக கருத்து தெரிவித்த உதயநிதி ஸ்டாலின் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
மேலும் உதயநிதி மீது நாடு முழுவதும் பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குகள் பதியப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் ஓராண்டுக்கு பிறகு தற்போது லட்டுவில் மாட்டுக் கொழுப்பு கலந்த விவகாரத்தில் தொடர்ந்து அதிரடி கருத்துகளை வெளியிட்டு வரும் ஜனசேனா கட்சித் தலைவரும், ஆந்திர மாநில துணை முதலமைச்சருமான பவன் கல்யாண், தற்போது தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
சனாதன தர்மத்தை உங்களால் எதுவுமே பண்ண முடியாது!
திருப்பதியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பவன் கல்யாண் பேசுகையில், “இங்கு நிறைய பேர் தமிழ் பேசுபவர்கள் இருக்கிறீர்கள். எனவே தமிழிலேயே சொல்கிறேன். தமிழ்நாட்டில் சிலர், சனாதன தர்மம் ஒரு வைரஸ் மாதிரி அதனை நாசம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். இதை யார் சொல்லியிருந்தாரோ அவருக்கு சொல்லிக் கொள்கிறேன்.
இந்த மாதிரி நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள். நீங்கள் முதல் ஆளும் இல்லை. கடைசி ஆளும் இல்லை. உங்களை மாதிரி ஆட்கள் வருவார்கள், போவார்கள். ஆனால் சனாதன தர்மம் எப்போதும் அப்படியே தான் நிலைத்திருக்கிறது. பெருமாளின் ஆசீர்வாதத்தோடு இதை சொல்கிறேன். உங்களால் எதுவுமே பண்ண முடியாது.
சனாதன தர்மத்தை யாராவது அழிக்க நினைத்தால், கடவுள் பாலாஜியின் பாதத்தில் இருந்து சொல்கிறேன். நீங்கள் அழிந்து போவீர்கள். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
சனாதன தர்மத்தை தாக்கி பேசுபவர்களை கண்டும் காணாமல் இருப்பது மதச்சார்பின்மை ஆகாது. அதன் மீதான தாக்குதலை யாரும் ஒருபோதும் கண்டிப்பதில்லை. யாரும் கண்டிக்காவிட்டாலும் தவறு எப்போதும் தவறுதான்.
நீங்கள் அரசியல்ரீதியாக சரியாக இருக்க விரும்புகிறீர்கள். ஆனால் நான் உண்மையை பேச விரும்புகிறேன். மதச்சார்பின்மை என்பது ஒருவழிப் பாதை அல்ல. அது இருவழிப் பாதை. மரியாதை கொடுத்தால்தான் மரியாதை கிடைக்கும்” என்று பவன் கல்யாண் ஆவேசமாக பேசியுள்ளார்.
பவன் கல்யாண் உதயநிதியின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும், அவருக்கு தான் இப்படி சாபம் விட்டுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எனினும் பவன் கல்யாண் பேச்சிற்கு திமுக தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
நெருங்கும் தீபாவளி… பட்டாசு கடை அமைக்க என்ன செய்ய வேண்டும்?
பிரபல ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு… மீண்டும் சம்பவம் செய்த போலீஸ்!