”மக்கள் மறந்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் தினமும் மீடியா முன்பு நின்று கொண்டு திமுக அரசு மீது எதிர்க்கட்சியினர் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு கொண்டிருக்கிறார்கள்” என ஸ்டாலின் பேசியுள்ளார்.
கோவை, விருதுநகரை தொடர்ந்து அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவம்பர் 15) கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
ஜெயங்கொண்டம் அருகே உள்ள மகிமைபுரத்தில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டைக்கு ஸ்டாலின் இன்று காலை அடிக்கல் நாட்டினார்.
மேலும் சுமார் 130 ஏக்கரில் ரூ.1,000 கோடி முதலீட்டில் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமைய உள்ள தைவான் நாட்டை சேர்ந்த டீன் ஷூஸ் குழுமத்தின் புதிய காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கும் அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் நடைபெறும் அரசு விழாவில், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ரூ.120 கோடி மதிப்பிலான 53 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.88 கோடியில் 507 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார். ரூ.174 கோடியில் 21,862 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசுகையில், “மனித இனங்கள் தோன்றுவதற்கான தடயங்கள் கொண்ட ஊர் இந்த அரியலூர். அதன் அடையாளமாக தான் கள்ளங்குறிச்சியில் டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டது. ஒருகாலத்தில் மிக அடர்ந்த வனப்பகுதியாக இருந்து பெரும்புலியூர் என்று அழைக்கப்பட்ட பகுதி இந்த பெரம்பலூர். இப்படிப்பட்ட வரலாறு கொண்ட அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொள்வதில் நான் பெருமை படுகிறேன். இன்று அரியலூர் மாவட்டத்தில் முடிவுற்ற 51 பணிகளை நான் திறந்து வைத்திருக்கிறேன். பெரம்பலூரில் 456 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்திருக்கிறேன். மொத்தமாக ரூ.174 கோடியில் நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டுள்ளது.
திட்டங்களை அறிவித்தோம், நிதி ஒதுக்கினோம் என்று ஓய்வு எடுக்க போகிறவன் நான் இல்லை. ஆனால் ஒரு சிலர் இருந்தார்கள். நாட்டில் என்ன நடக்கிறது தெரியாமல் ‘அப்படியா டிவியில் பார்த்து தான் தெரிந்துகொண்டேன்’ என்று சொன்னார்கள்.
ஆனால் நான் பிரச்சனையை எதிர்க்கொள்கிறேன். அதற்கு தீர்வு கண்டு வருகிறேன். மக்களுக்கு பார்த்து பார்த்து திட்டங்களை அறிவிக்கிறேன். அதை தொடர்ந்து கள ஆய்வு செய்கிறேன். அறிவித்த படி குறிப்பிட்ட நாளுக்குள் திட்டத்தை திறந்து வைக்கிறேன்.
தமிழ்நாட்டு மக்கள் என்மீதும், திமுக மீதும் வைத்துள்ள நம்பிக்கை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனக்கு மக்கள் வரவேற்பு தருகிறார்கள் என்பது எதிரணிகள் பார்த்து கொண்டிருக்கின்றனர். எங்கு தங்களை மக்கள் மறந்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் தினமும் மீடியா முன்பு நின்று கொண்டு பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு கொண்டிருக்கிறார்கள்.
கடந்த 2011 முதல் 2021ஆம் ஆண்டு வரை 10 ஆண்டு காலம் ஏதோ சிறந்த ஆட்சி தந்ததாகவும், ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது அதிக திட்டங்களை கொண்டு வந்து, அவர் மறைவுக்கு பிறகு 4 ஆண்டுகள் தான் சிறப்பாக ஆட்சி செய்ததாகவும் சிரிக்காமல் பேட்டி கொடுத்திருக்கிறார். பொய்க்கு மேக்கப் போட்டால் அது உண்மையாகிவிடாது. இன்னும் பளீச்சென்று அம்பலப்பட்டு போகும்.
தனது ஆட்சிக் காலத்தில் தொழில் முதலீட்டு மாநாட்டை நடத்திய எடப்பாடி, மூன்று லட்ச ரூபாய் முதலீட்டை தமிழ்நாட்டிற்கு ஈர்த்திருக்கிறேன் என்று பெருமையாக பேசினார். நான் கேட்கிறேன். எடப்பாடி பழனிசாமி நீங்கள் நடத்திய முதலீட்டார்கள் மாநாட்டில் எவ்வளவு முதலீடு வந்தது? இதனால் வேலை வாய்ப்பை பெற்றவர்கள் எத்தனை பேர்? அதையெல்லாம் உங்களால் புள்ளி விவரத்துடன் சொல்ல முடியுமா?
வந்தவர்களையும் கரப்சன், கமிஷன் என விரட்டி விட்டார்கள். அதிமுக ஆட்சிக்கு பயந்து தமிழ்நாட்டை விட்டு ஓடி போனவர்கள் பல பேர். திராவிட மாடல் ஆட்சியில் தான் அவர்களை மீண்டும் அழைத்து வந்து தொழில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கிறோம். கடந்த மூன்றாண்டுகளில், 31 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ. 10 லட்சம் முதலீட்டை ஈர்த்துள்ளோம்.
எப்போது முடியும் இவர்கள் ஆட்சி என்று தன்மானமுள்ள ஒவ்வொரு தமிழரும் காத்திருந்த ஆட்சி தான் எடப்பாடி ஆட்சி. ஆனால் இது எங்கள் ஆட்சி, எந்நாளும் தொடர வேண்டும் என்று மக்கள் விரும்பும் ஆட்சியாக செயல்பட்டு கொண்டிருக்கிறது திராவிட மாடல் ஆட்சி.
இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழ்நாட்டை கொண்டு வருவது தான் திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம். மிக மிக பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் நான் என்று சொன்னார் கலைஞர். என்னை பொறுத்தவரை நலிந்த மக்களின் ஆட்சியாக ஸ்டாலின் ஆட்சி இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
எதிர்காலத்தில் தொடரப் போகும் மக்கள் நலத் திட்டங்களால் வரலாற்றில் திராவிட மாடல் அரசும், அதை வழிநடத்துகின்ற ஸ்டாலின் பெயரும் அழிக்க முடியாதபடி என்றும் நிலைத்திருக்கும்” என்று ஸ்டாலின் பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
’மோடி 100 மணி நேரம் உழைக்கும் போது, நாம் ஏன் உழைக்கக்கூடாது?’ : இன்ஃபோஸிஸ் நாராயண மூர்த்தி