“பணம் இருந்தால், இந்திய தேர்வு முறையை வாங்கலாம் என்ற நிலை தான் தற்போது உள்ளது” என நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று (ஜூலை 22) தொடங்கியது. அப்போது நீட் தேர்வு விவகாரத்தை விவாதிக்க கோரி மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர்.
நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும்! – கலாநிதி வீராசாமி
தொடர்ந்து நடந்த விவாதத்தில் திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி பேசுகையில், “தற்போது நீட் தேர்வு முறைகேடு காரணமாக நாட்டில் உள்ள அனைத்து மாநில மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு தமிழ்நாடு ஆரம்பத்தில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இத்தேர்வால் அனிதா முதல் இதுவரை ஏராளமான மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் இத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்று பேசினார்.
அதற்கு பதிலளித்து பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “நீட் தேர்வினை கொண்டு வந்தது காங்கிரஸ் தான். அதனைத்தொடர்ந்து உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் நீட் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
தேர்வுக்கு பதிவு செய்வதில் இருந்து முறைகேடு! – பிரேமச்சந்திரன்
தொடர்ந்து கேரளாவை சேர்ந்த எம்.பி. பிரேமச்சந்திரன் பேசுகையில், “நீட் முறைகேடு, போட்டித் தேர்வுகளின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கி விட்டது. தேர்வுக்கு பதிவு செய்வதில் இருந்து தொடங்கி அனைத்து படிநிலைகளிலும் முறைகேடு நடைபெறுகிறது” என குற்றஞ்சாட்டினார்.
வினாத்தாள் கசிவில் பாஜக அரசு சாதனை! – அகிலேஷ்
சமாஜ்வாதி கட்சி எம்பி அகிலேஷ் யாதவ் பேசுகையில், ”வினாத்தாள் கசிவில் பாஜக அரசு சாதனை படைத்துள்ளது.. சில மையங்களில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கல்வித்துறை அமைச்சராக தர்மேந்திர பிரதான் இருக்கும் வரை மாணவர்களுக்கு நீதி கிடைக்காது” என்று பேசினார்.
இந்திய தேர்வு முறையை வாங்கலாம்! – ராகுல்
தொடர்ந்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பியுமான ராகுல்காந்தி கூறுகையில், ”நீட் தேர்வு முறைகேடு குறித்து நாட்டில் என்ன நடக்கிறது என்பதை மாணவர்கள் மிகுந்த அக்கறையுடன் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
பணக்காரராக இருந்தால், உங்களிடம் பணம் இருந்தால், நீங்கள் இந்திய தேர்வு முறையை வாங்கலாம் என்ற நிலை தான் தற்போது உள்ளது. இப்படி தான் நாட்டில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் நம்புகிறார்கள். அதே உணர்வுதான் எதிர்க்கட்சிகளுக்கும் இருக்கிறது” என்றார்.
இந்திய தேர்வு முறையே மோசடி! – ராகுல்
தொடர்ந்து அவர், “நம் நாட்டில் தற்போது நீட் தேர்வு மட்டுமல்ல, அனைத்து முக்கிய தேர்வு முறைகளும் மிகவும் மோசமாக உள்ளது என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது. இந்திய தேர்வு முறையே மோசடியாக உள்ளது. ஆனால் பிறர் மீதி பழி சுமத்தி வரும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை தவிர மற்ற அனைவருக்கும் இங்கு என்ன நடக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. அவருக்கு தேர்வு முறைகேடு பிரச்சினை பற்றிய அடிப்படை புரிதல் கூட இல்லாதது போல் தெரிகிறது” என்று விமர்சித்தார்.
வினாத்தாள் கசிந்ததாக எந்த ஆதாரமும் இல்லை! – தர்மேந்திர பிரதான்
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் தர்மேந்திர பிரதான், “நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. நீட் தேர்வு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. நீட் முறைகேடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 240க்கும் மேற்பட்ட தேர்வுகள் நடந்துள்ளன என்பதை முழுப் பொறுப்புடன் என்னால் கூற முடியும். தற்போது நடந்த சிறு சிறு பிழைகள் கூட இனி நடக்காது என அரசு உறுதியளிக்கிறது. இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம். நாட்டின் தேர்வு முறையை கொச்சைப்படுத்தியதற்கு கண்டனத்திற்குரியது” என்று தர்மேந்திர பிரதான் பதிலளித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஆர்எஸ்எஸ்-ல் அரசு ஊழியர்கள் சேர தடை நீக்கம்: மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்!
பெளர்ணமியை தொடர்ந்து தங்கம் விலையில் சரிவு!