”தேசிய கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேனி, சிவகங்கை மாவட்ட நிர்வாகிகளுடன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (டிசம்பர் 28) ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “ எங்கள் கட்சியில் இருந்து குறைந்த அளவிலேயே அதிமுகவுக்கு சென்றுள்ளனர். தொண்டர்களை நம்பித்தான் இந்த இயக்கம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி வசம் அதிமுக சின்னம் இருந்தாலும், எதிர்வரும் தேர்தலில் எந்த பலனும் அக்கட்சிக்கு இருக்காது. கட்சி தொடங்கி 5 ஆண்டுகளாகிறது. 2 தேர்தல்கள் எங்களுக்கு பின்னடைவுதான்.
இருந்தாலும் தொண்டர்களும், நிர்வாகிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். கட்சியை மேலும் பலப்படுத்த முடிவு செய்துள்ளோம். 2 மாவட்டச் செயலாளர்கள் அதிமுகவுக்கு சென்றதால் அமமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
அதிமுக இன்று தவறானவர்கள் கையில் உள்ளது. பெரிய கட்சி என்ற அந்தஸ்தை அதிமுக இழந்திருப்பதால்தான் அக்கட்சி தன் தலைமையில் கூட்டணி என்று சொல்லி வருகிறது. அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் என அதிமுகவினர் கூற வேண்டிய நிலை ஏற்பட்டதே அந்த கட்சிக்கு பலவீனம்தான்.
ஜெயலலிதா இருந்தபோதெல்லாம் இயல்பாகவே அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்பது அனைவருக்கும் தெரியும்.
அதிமுக சின்னம் இல்லையேல் அந்த கட்சி நெல்லிக்காய் மூட்டை போல் சிதறிவிடும். ஜெயலலிதா தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் இணைந்து திமுகவை வீழ்த்த கூட்டணி அமைத்து போராடினால் ஜெயலலிதா ஆட்சி மீண்டும் அமையும். அமமுகவில் குடும்ப உறுப்பினர்கள் யாரும் எந்த பொறுப்பிலும் இல்லை. சித்தி (சசிகலா) கட்சி செயல்பாட்டில் தலையிடுவதில்லை. அவர் அதிமுக பொதுச்செயலாளர் என்றுதான் கூறி வருகிறார்.
’அதிமுகவுடன் இணைவீர்களா’ என்று நீங்கள் பலமுறை கேட்டுள்ளீர்கள். அதற்கு வாய்ப்பே இல்லை. அந்த தவறை நாங்கள் என்றைக்கும் செய்யமாட்டோம். ’கூட்டணிக்கு செல்வீர்களா’ என்று கேட்கிறீர்கள்.
எங்களுடைய பலமும் உயரமும் எங்களுக்கு தெரியும். சில பேர் மாதிரி ஆணவத்தில், அகம்பாவத்தில், பணத்திமிரில் எங்களது நடவடிக்கைகள் இருக்காது.
நாங்கள் வளர்ந்து வரும் ஒரு இயக்கம். வரும் காலத்தில் அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் ஏற்படுத்தக் கூடிய உறுதியான தொண்டர்கள் இயக்கம். அதை அடையும் வரை போராடுவோம். ஓயமாட்டோம்.
நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க அமமுக தயாராக உள்ளது. இரு தேசிய கட்சியில் ஏதேனும் ஒரு கட்சியுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. அந்த வாய்ப்பு ஏற்படாவிட்டால் தனித்து போட்டியிடுவோம்” என்றார்.
ஜெ.பிரகாஷ்