NLC administration violates the farmers

“விவசாயிகளிடம், என்.எல்.சி நிர்வாகம் அத்துமீறினால்…” : வேல்முருகன் கண்டனம்!

அரசியல்

விவசாயிகளிடம், என்.எல்.சி நிர்வாகம் அத்துமீறி செயல்படுமானால் எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தவாக தலைவர் எச்சரித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் என்.எல்.சி. நிறுவனம் விரிவாக்க பணிகளுக்காக விளை நிலங்களை கையகப்படுத்தியுள்ளது. இதற்காக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிற்களை இன்று (ஜூலை 26) ஜேசிபி வாகனங்கள் கொண்டு அழித்துள்ளது.

இதற்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் கண்டனம் தெரிவித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

“கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் இரு அனல் மின் நிலையங்கள் மற்றும் அவற்றின் விரிவாக்கத் திட்டங்கள் வழியே 3000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

புதிதாக மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக 26 கிராமங்களிலிருந்து 12,126 ஏக்கர் நிலம் கையகப்படுத்த ஒன்றிய அரசும், என்.எல்.சி நிர்வாகமும் முடிவு செய்திருக்கிறது.

இச்சூழலில், சேத்தியாதோப்பு அருகே மேல்வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, கத்தாழை ஆகிய 3 ஊராட்சிகளிலும், நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில்,

அதனை சிறிதும் மதிக்காமல், அப்பகுதிகளில் பலத்த காவல்துறை பாதுகாப்பில், விளை நிலங்கள் கையகப்படுத்த என்.எல்.சி நிர்வாகம் முயன்று இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

ஜெயலலிதாவின் புரட்சிகர உத்தரவுகள்.. வேல்முருகன் பாராட்டு | Tamilaga Valvurimai Katchi chief velmurugan thanks Jayalalitha - Tamil Oneindia

வளையமாதேவி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், பல்லாயிரம் ஏக்கரில், நடவு செய்யப்பட்டு, நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில், அதனை பொருட்படுத்தாமல், விவசாயிகளின் எதிர்ப்புகளை மீறி, நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கை என்பது வன்மையாக கண்டிக்கதக்கது.

நிலம் வழங்கியோர்க்கு உரிய இழப்பீட்டை மறுப்பது, தமிழர்களுக்கு வேலை வழங்க மறுப்பது, ஏற்கெனவே உள்ள பணியாளர்களை நிரந்தரமாக்க மறுப்பது,

பணிப்பயிற்சி மாணவர்களுக்குப் பணி வழங்க மறுப்பது என தொடர்ந்து அடாவடித்தனத்தில் ஈடுபட்டு வரும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம், தற்போது நிலங்களை கையகப்படுத்த முயலுவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்கான பணிகளுக்கு விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தக் கூடாது.

குறிப்பாக, வாழ்வாதார இழப்பு, வேலை மறுப்பு, சூழலியல் அழிப்பு போன்ற காரணங்களுக்காக இத்திட்டத்தை அடியோடு எதிர்க்க வேண்டும்.

ஏற்கனவே, நிலம் வழங்கியோர்க்கு உரிய இழப்பீட்டை வழங்கவும், தற்போது பணியாற்றி வரும் தமிழர்களுக்கு பணி நிரந்தரம், பணி உறுதி ஆகியவற்றை உறுதிப்படுத்த, ஒன்றிய அரசு மற்றும் என்.எல்.சி நிர்வாகத்திடம், தமிழ்நாடு அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

தற்போது, விளைநிலங்களை கையகப்படுத்த முயன்று வரும் என்.எல்.சி நிர்வாகத்தையும், காவல்துறையையும், தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும்.

இனி வரும் காலங்களில், விவசாயிகளிடம், என்.எல்.சி நிர்வாகம் அத்துமீறி செயல்படுமானால் எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

முக்கியமாக, நிலம் வழங்குவோருக்கு நிரந்தர வேலை வழங்க முடியாது என்று கூறி வரும் என்.எல்.சி. நிர்வாகத்திற்கு, மூன்றாவது சுரங்க விரிவாக்கத்திற்கு, நிலம் வழங்க வேண்டிய அவசியமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

பிரியா

மீண்டும் மோடி பிரதமரானால் சந்திர மண்டலம் தான் – சீமான்

வீடியோ கான்பிரன்ஸில் ஆஜரான செந்தில் பாலாஜி : நீதிபதி கேள்வி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *