’ராஜ்குமார் சொல்வது பொய் என்றால்…’ சீமானுக்கு சவால் விடும் கொளத்தூர் மணி

Published On:

| By christopher

போர் நடந்துகொண்டிருக்கும் சமயத்தில் பின்னாடி ஸ்கிரீன் எல்லாம் வச்சி புகைப்படம் எடுக்க வாய்ப்பில்லை என கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபாகரன் உடன் இருக்கும் புகைப்படத்தை ‘எடிட்’ செய்து கொடுத்ததே நான் தான் என இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் நேற்று (ஜனவரி 19) தெரிவித்திருந்தார்.

வெங்காயம், பயாஸ்கோப் ஆகிய திரைப்படங்களின் இயக்குநரான அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், ”இவர், அவரை சந்திக்கவே இல்லை! எதன் அடிப்படையில் சொல்கிறேன் என்றால்.. அந்த புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தவன் என்கிற அடிப்படையில்” என சீமான், பிரபாகரன் புகைப்படம் குறித்து பதிவிட்டிருந்தார்.

இதுதொடர்பாக திராவிட இயக்கச் செயற்பாட்டாளரான கொளத்தூர் மணி நமது மின்னம்பலம் யூடியூப் தள பக்கத்தில் இன்று பேட்டி அளித்துள்ளார்.

உறுதிப்படுத்திக் கொள்ளலாமே?

அதில் அவர், “அந்த புகைப்படம் வந்தபோது, அது எடிட் செய்யப்பட்டது என திரையுலகில் வதந்தி உலவுவதாக விடுதலை ராஜேந்திரன் என்னிடம் தெரிவித்தார். அப்போது யாரும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இந்தநிலையில் பெரியார் குறித்து சீமான் அவதூறு கருத்துகளை தெரிவித்த நிலையில் தான் அதை எடிட் செய்ததே நான் என தெரிவித்ததாக சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

அவரும் என்னை போன்றே சேலம் மாவட்டத்துக்காரர். பெரியாரிஸ்ட். இவ்வளவு நாள் சொல்லாமல் மறைத்துவிட்டேன் என்பதற்காகவே ராஜ்குமார் என்னுடன் பேசினார். அவர் சொன்னது பொய் என்று சீமான் தரப்பினர் சொன்னால், எடிட்டிங், கிராபிக்ஸில் அனுபவம் வாய்ந்தவர்களையும், ராஜ்குமாரையும் அழைத்து பரிசோதித்து உறுதிப்படுத்திக் கொள்ளலாமே?

இதுபற்றி டெக்னிக்கலாக நம்மால் சொல்ல முடியாது. ஆனால் ராஜ்குமார் சொல்கிறபடி, நாம் பார்க்கும்போது சீமானுக்கு பின்னால் நிழல் தெரியும், பிரபாகரனுக்கு பின்னால் தெரியவில்லை.

அதனால் தான் சீமான் மீது எனக்கு சந்தேகம்!

ஈழப்போர் உச்சக்கட்டமாக நடந்து கொண்டிருந்த நிலையில் சீமான் பிரபாகரனுடன் புகைப்படம் எடுப்பதற்கான வாய்ப்பு குறைவு. அவர் புகைப்படத்துடன் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. அதைத் தாண்டியும், கடற்கரையில் நாங்கள் உலாவினோம் என்கிறார். அவர் சொல்லும் வன்னி, கிளிநொச்சி போன்ற இடங்களில் கடற்கரையே இல்லை. புகைப்படத்தை தாண்டி சீமான் பேசியுள்ளதால் தான் ராஜ்குமார் சொல்வதை தற்போது நம்ப முடிகிறது.

போர் நடந்துகொண்டிருக்கும் சமயத்தில் பின்னாடி ஸ்கிரீன் எல்லாம் வச்சி தனி இடத்தில் புகைப்படம் எடுப்பதற்கான வசதியை பிரபாகரன் வைத்திருக்க வாய்ப்பில்லை. அதனால் தான் சீமான் மீது எனக்கு சந்தேகம் இருக்கிறது.

எதுவும் நடக்க வாய்ப்பில்லை!

நாங்கள் அவரை சந்திக்க சென்றபோது 10 நாள் கூட இருந்தோம். அந்த நாட்களில் நாங்கள் படம் எடுக்க சிந்திக்கவும் இல்லை. அருகில் கேமிராமேனும் இல்லை. 10வது நாளில் தான் ‘நாம ரெண்டுபேரும் புகைப்படம் எடுத்திருக்கோமா?’ என்று என்னிடம் பிரபாகரன் கேட்டு, அதன்பிறகு தான் புகைப்படம் எடுத்தோம்.

பிரபாகரன் அரசியல் தலைவரா என்ன? எந்நேரமும் அவரை சுற்றி புகைப்படக்காரர்கள் இருக்க?

நான் கேள்விப்பட்டவரைக்கும் சீமான் பிரபாகரனை சந்தித்தது உண்மை தான். ஆனால் மிக குறைவாக 10 நிமிடம் மட்டுமே சந்தித்து பேசியுள்ளார். பிரபாகரனுடன் 2 மாதம் தங்கியிருந்தால் மட்டுமே சீமான் பேசும் அளவுக்கு நடந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் வெறும் 10 நிமிடத்தில் அவர் சொல்வது போல் எதுவும் நடக்க வாய்ப்பில்லை. இன்னும் சில பேர் சீமான் சந்தித்திருக்க வாய்ப்பில்லை” என கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.

சீமானுக்கு ஒரே ஒரு வாய்ப்பு... சவால் விடும் கொளத்தூர் மணி | Kolathur Mani Interview | Seeman | NTK

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel