“வாரணாசி (காசி) மக்களவைத் தொகுதியில் எனது சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிட்டிருந்தால், பிரதமர் நரேந்திர மோடி 2-3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருப்பார்” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இன்று (ஜூன் 11) உபி மாநிலத்தில் தான் வென்ற ரேபரேலி தொகுதியில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.
அப்போது அவர், “அயோத்தி தொகுதியில் பாஜக தோல்வியடைந்தது. அயோத்தியில் மட்டுமல்ல, வாரணாசியில் எனது சகோதரி (பிரியங்கா காந்தி) போட்டியிட்டிருந்தால், இந்தியப் பிரதமர் தேர்தலில் அவரது தொகுதியிலேயே தோல்வியடைந்திருப்பார். நான் ஆணவத்துடன் கூறவில்லை, நாட்டு மக்கள் அவர்களின் அரசியலுக்கு எதிரானவர்கள் என்ற செய்தியை பிரதமருக்கு கொடுத்துள்ளனர்.
எங்களை வெற்றிபெறச் செய்த அனைத்து தலைவர்களுக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும், அமேதி மற்றும் ரேபரேலி மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இம்முறை அமேதி, ரேபரேலி, உத்தரபிரதேசம் மற்றும் மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சி ஒற்றுமையாகப் போராடியது. இந்த முறை சமாஜ் வாதி தலைவர்களும் நிர்வாகிகளும் காங்கிரஸ் தலைவர்களுடன் ஒற்றுமையாக போராடினார்கள் என்பதை நான் சமாஜ்வாதி கட்சிக்கு சொல்ல விரும்புகிறேன்.
மணிப்பூர், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தரபிரதேசம் என எதுவாக இருந்தாலும் நாம் ஒற்றுமையாகப் போராடினோம். ஏன் இப்படி நடந்தது என்று யோசித்துப் பார்த்தால், நரேந்திர மோடியும், அமித் ஷாவும் அரசியல் சாசனத்துடன் விளையாட முயற்சிப்பதை நாட்டின் ஆன்மா உணர்ந்துகொண்டது” என்று அவர் மேலும் கூறினார்.
பிரியங்கா காந்தி இந்த பொதுக்கூட்டத்தில் பேசியபோது, “இது ஒரு வரலாற்று வெற்றி. நாட்டில் தூய்மையான அரசியல் வேண்டும் என்று நீங்கள் அனைவரும் தேசம் முழுவதும் செய்தியை அனுப்பியுள்ளீர்கள் என்று சொல்வதில் நான் பெருமைப்படுகிறேன். இந்த முடிவுக்காக நாங்கள் இரவும் பகலும் உழைத்தோம். எனது அண்ணன் ராகுல் காந்தியை வெற்றி பெறச் செய்த ரேபரேலி மக்களுக்கு நன்றி, நீங்கள் எங்களுக்காக காட்டிய உற்சாகத்துடன் நாங்கள் உங்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம்” என்று பிரியங்கா கூறினார்.
தேர்தலுக்கு முன்பே… உத்திரப்பிரதேசத்தில் வாரணாசி தொகுதியில் பிரியங்கா போட்டியிடலாமா என்று ஆலோசனை நடந்தது குறிப்பிடத் தக்கது.
–வேந்தன்