கடந்த தேர்தலில் பாஜகவால்தான் ஜெயக்குமார் குறைந்த அளவிலான ஓட்டுகளையாவது பெற்றார், இல்லையென்றால் சுத்தமாக அவுட் ஆகியிருப்பார் என இன்று (ஏப்ரல் 14) வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தப்போது, “பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தோற்றது. இல்லையென்றால் அதிமுக வெற்றி பெற்றிருக்கும்.
அதிலும் குறிப்பாக, 2021ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நான் நிச்சயமாக ராயபுரம் தொகுதியில் வெற்றி பெற்றிருப்பேன். ராயபுரத்தில் தோற்பவனா நான்? 25 வருடம் ராயபுரம் தொகுதியில் முடிசூடா மன்னனாக இருந்தேன். தோல்வி என்பதை அறியாதவன் நான். இதுவரை நான் இதை வெளியில் சொல்லியது இல்லை.
தேர்தலில் நான் தோற்க முக்கிய காரணம் பாஜகதான். பாஜக அதிமுக கூட்டணியில் இல்லாமல் இருந்திருந்தால் நான் இப்போது நிச்சயமாக சட்டமன்றத்திற்கு சென்று இருப்பேன்.” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வட சென்னை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பால் கனகராஜ் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் ஜெயக்குமார் பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த பால் கனகராஜ், “அனைத்து மன்னர் ஆட்சியும் ஒருநாள் முடிவுக்கு வரும். மக்களிடம் நீங்கள் சுமூகமான முறையில் இருந்திருந்தால், மக்களுக்கு தேவையானவற்றை நீங்கள் செய்திருந்தால், மக்களுக்கு தேவையான நலதிட்ட உதவிகளை நீங்கள் செய்திருந்தால் அல்லது உங்களது சேவையை அவர்கள் பயன்படுத்தி இருந்தால் மக்கள் உங்களை மறந்திருக்க மாட்டார்கள்.
இவரால் தோற்றுவிட்டேன், அவரால் தோற்றுவிட்டேன் என்று சொல்வது எல்லாம் ஒரு சப்பை கட்டு. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், ஜெயக்குமார் கடந்த தேர்தலில் வாங்கிய கொஞ்ச ஓட்டுகளையும் பாஜகவால் தான் வாங்கியுள்ளார். இல்லையென்றால் சுத்தமாக ஜெயக்குமார் அவுட் ஆகியிருப்பார்.
மக்கள் தொடர்பு என்பது ஜெயக்குமாருக்கு இல்லை. எப்போதும் மேலோட்டமாக நடப்பவற்றை பார்த்து அதற்கு கருத்து சொல்லிவிட்டு செல்பவர்தான் அவர்.
மக்களுக்காக அவர் களத்தில் இறங்கி வேலை செய்தாரா என்பதே ஒரு கேள்வி தான். அதற்கு அவர் தான் பதில் சொல்ல வேண்டும். 2021 தேர்தல் தோல்விக்கு ஜெயக்குமார் தான் முக்கிய காரணம். மீனவ மக்கள் அதிகமாக வாழும் பகுதியில் அவர் தோல்வி அடைகிறார் என்றால் அதற்கு காரணம் அவர்தான்.
மீனவ மக்களுக்காக பாஜக அரசு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 2 துறைமுகங்கள் கட்டப்பட்டுள்ளன. மீன்பிடி வலை துறைமுகம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதனால், பாஜகவின் ஓட்டுதான் ஜெயக்குமாருக்கு வந்துள்ளது.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஜெயக்குமார் தற்போது இப்படி பேசுகிறார். அதிமுக மற்றும் பாஜக தனித்தனியாக போட்டியிடுவதால் அவர் இதுபோன்று பேசுகிறார்” என பால் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்..
இஸ்ரேல் மீது தாக்குதல் : ஈரானுக்கு எதிராக களமிறங்கும் உலக நாடுகள்!
2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டி: விஷால் அறிவிப்பு!
மின்னம்பலம் மெகா சர்வே: திருவண்ணாமலை வெற்றி தீபம் ஏற்றுவது யார்?