தூத்துக்குடி மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்காக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி இன்று (மார்ச் 5) விருப்ப மனு கொடுத்தார்.
தமிழ்நாட்டின் 36ஆவது மக்களவைத் தொகுதியாக தூத்துக்குடி உள்ளது. தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீ வைகுண்டம், ஒட்டபிடாரம், விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது தூத்துக்குடி மக்களவை தொகுதி.
இங்குக் கடந்த முறை திமுக சார்பில் கனிமொழி போட்டியிட்டு 5.63 லட்சம் வாக்குகளை பெற்று, தன்னை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட தற்போதைய புதுச்சேரி – தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனைக் காட்டிலும், 3.47 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வரும் ஏப்ரல் மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள் கடந்த 19-2-2024 முதல் அண்ணா அறிவாலயத்தில் வழங்கப்பட்டது.
இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, 1-3-2024 முதல் 7-3-2024 மாலை 6 மணிக்குள் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கட்சித் தலைமை அறிவித்தது.
இந்தச்சூழலில் இன்று அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்திய கனிமொழி எம்.பி. தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடத் தனது விருப்ப மனுவை அளித்தார்.
இதன்பின் முதல்வரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் கனிமொழி.
தொடர்ந்து புதிய தலைமுறை ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “5 ஆண்டுக்காலம் தூத்துக்குடியில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. தூத்துக்குடி மக்களைப் புரிந்துகொண்டு அவர்களின் கோரிக்கைகளை என்னால் முடிந்தவரை நிறைவேற்றித் தந்திருக்கிறேன். மீண்டும் அவர்களோடு பணிபுரிய வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி ” என்றார்.
அப்போது கடந்த முறை போல இந்த முறையும் தமிழிசை சவுந்தரராஜன் அல்லது நிர்மலா சீதாராமன் போன்றவர்கள் நின்றால் போட்டி எப்படி இருக்கும் என்று எழுப்பிய கேள்விக்கு,
யார் நமக்கு எதிரான வேட்பாளர்கள் என்பது முக்கியமில்லை. நம்முடைய பணி என்னவாக இருக்கிறது என்பது மட்டும் தான் முக்கியம் எனப் பதிலளித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
எலக்ஷன் ஃபிளாஷ்: மோடி மேடையில் அதிமுகவை விமர்சிக்க தடை!.
புதிய வரலாறு: இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள்… ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி!