Edappadi ask udhayanidhi stalin
“நான் பல்லை காட்டினால், நீங்கள் எதை காட்டுகிறீர்கள்” என்று பிரதமர் மோடியும், அமைச்சர் உதயநிதியும் இருக்கும் புகைப்படத்தை காட்டி எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
தூத்துக்குடியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிவசாமி வேலுமணியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 26) பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், “ஸ்டாலினுக்கு ஆட்சி அதிகாரம் தான் முக்கியம். மக்களைப்பற்றி கவலையில்லை. ஆனால் அதிமுக மக்களுக்காக செயல்படுகிறது.
தூத்துக்குடி வெள்ள பாதிப்பை பற்றி கேள்விப்பட்டதும் ஓடோடி வந்தேன். நான் தூத்துக்குடிக்கு வருகிறபோதே, என்னால் முடிந்த நிவாரணப் பொருட்களை கொண்டு வந்தேன். ஆனால் அந்த நிவாரணப் பொருட்களை இறக்கக்கூட முடியவில்லை. இடுப்பளவு தண்ணீர் சூழ்ந்திருந்தது. அப்படி இருந்தும் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிவிட்டுச் சென்றேன்.
மக்களுக்கு ஓடோடி வந்து உதவி செய்யும் அரசுதான் ஒரு நல்ல அரசு. ஆனால் ஸ்டாலின் அரசு அதை செய்யவில்லை” என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஸ்டாலின் எப்போது பேசினாலும் அதிமுக கள்ளக் கூட்டணி வைத்திருப்பதாக விமர்சனம் செய்து வருகிறார். எங்கிருக்கிறது கள்ளக் கூட்டணி. அவருக்கு இது பழக்க தோசம் போல.
இதுவரைக்கும் எந்த கட்சித் தலைவரும் இப்படி கூறியது கிடையாது. கள்ளக் கூட்டணி வைத்தது யார் என்பதை இந்த நேரத்தில் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இவர்தான் கள்ளக்கூட்டணி வைத்திருக்கிறார். அதற்கு இதுதான் சான்று” என்று பிரதமர் மோடியும் முதல்வர் ஸ்டாலின் சிரித்துக்கொண்டிருக்கிற புகைப்படத்தை காட்டி பேசினார்.
தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், பிரதமர் மோடியும் சிரித்துகொண்டிருக்கிற புகைப்படத்தை காட்டி பேசிய எடப்பாடி பழனிசாமி,
“சிரித்தால் என்ன தெரியும்? பல்லு தானே தெரியும். 2019-ல் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக மதுரையில் அடிக்கல் நாட்டினார் பிரதமர். அப்போது பிரதமருடன் அமர்ந்திருந்த நான் சிரித்துக் கொண்டிருந்தேன்.
அதை உதயநிதி ஸ்டாலின் கொச்சைப்படுத்தி, நான் பல்லைக் காட்டிக்கொண்டு இருப்பதாக கூறினார். நீங்கள் என்ன காட்டிக்கொண்டிருக்கிறீர்கள்.
நீங்கள் காட்டினால் சரி, நான் காட்டினால் தவறா?. அதிமுக யாருக்கும் மறைமுக ஆதரவு தெரிவிக்காது. நாங்கள் நினைத்திருந்தால் பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்போம். ஆனால் எங்களுக்கு அவசியமில்லை. திமுக போல பதவி வெறி பிடித்த கட்சி அதிமுக அல்ல” என கூறினார்.
அதுபோன்று, போதைபொருள் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதியுடன் இருக்கும் புகைப்படத்தை காட்டி பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிசாமி, ”போதைப்பொருள் கடத்தும் நபருக்கும் முதல்வருக்கும் என்ன தொடர்பு? இதுவரை அது பற்றி முதல்வர் வாய் திறக்காதது ஏன்?” என கேள்வி எழுப்பினார்.
“தொடர்ந்து தேர்தல் பத்திரம் மூலம் திமுகவுக்கு 656 கோடி கிடைத்திருக்கிறது. மற்ற கட்சிகள் எல்லாம் கொள்ளை அடித்திருக்கிறது என ஸ்டாலின் கூறுகிறார். அப்படியானால் திமுக என்ன செய்திருக்கிறது” எனவும் கேள்வி எழுப்பினார்.
முன்னதாக எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு விழாவின் போது எடப்பாடி பழனிசாமியும் பிரதமர் மோடியும் பேசி சிரித்துக்கொண்டிருக்கும் படியான புகைப்படத்தை காட்டி உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அந்த வகையில் அவரது பாணியிலேயே இன்று பிரச்சாரம் செய்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ஹரி – விஷால் படத்தின் புது அப்டேட் இதோ..!
இரட்டை இலை… பக்கெட்… : தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் புதிய மனு!