தான் வகிக்கும் பதவியில் சலிப்பு ஏற்பட்டால் பதவி விலகுவேன் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்,என்,ரவி இன்றும் நாளையும் (ஏப்ரல் 18,19) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்றுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்த அவரை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் சிறிது ஓய்வெடுத்தார். பின்னர், மண்டபம் பகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களிடம் உரையாடினார். ஆளுநர் வருகையை முன்னிட்டு கேந்திரிய வித்யாலயா பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது, “மாணவர்கள் மொபைல் போன்ற பொழுதுபோக்குகளில் அதிகம் நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும். மாறாகப் பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும். விளையாட்டில் சாதித்தால் வாழ்வில் ஒளிரலாம். அதனால் மாணவர்கள் மாநில தேசிய அளவிலான போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும். மனதை ஒருமுகப்படுத்த யோகாசனம் செய்யுங்கள்” என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் அளித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
தொடர்ந்து பேசிய அவர், “நான் வகிக்கும் பதவியில் எனக்கு எப்போது சலிப்பு ஏற்படுகிறதோ அப்போது பதவியில் இருந்து விலகி விடுவேன்” என்று சொன்னார்.
முன்னதாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்த ஆளுநருக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக உள்ளிட்ட கட்சிகள் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 40-க்கும் மேற்பட்டவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து சர்ச்சைகளை உருவாக்கி வரும் ஆளுநர் சில நாட்களுக்கு முன் ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் தன்னிடம் நிலுவையில் இருக்கும் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டவை என்று அர்த்தம் என பேசினார்.
இது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஏப்ரல் 10 ஆம் தேதி ஆளுநர் அரசியல் அமைப்பு சட்டத்தை மீறி நடந்துகொள்கிறார். அவருக்கு பிரதமர் குடியரசுத் தலைவர் அறிவுரை சொல்ல வேண்டும் என்று கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஆன் லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.
இந்த பிரச்சினையில் கடந்தவாரம் தமிழ்நாட்டில் பாஜக, அதிமுக தவிர அனைத்துக் கட்சிகளின் கண்டனத்துக்கும் ஆளானார் ஆளுநர் ரவி. மேலும் கெட் அவுட் ரவி என்ற போஸ்டர்களும் திமுகவினரால் ஒட்டப்பட்டன.
இந்த பின்னணியில்தான், “எனக்கு என் வேலையில் சலிப்பு ஏற்பட்டால் பதவி விலகிவிடுவேன்’ என்று மாணவர்களிடையே கூறியிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
மோனிஷா
இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோர் திறப்பு விழாவில் இசைப்புயல்!
பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுமா? நாசர் சொன்ன பதில்!
எப்ப சலிப்பு ஏற்பட்டு, எப்ப இவரு ராஜினாமா பண்ணி… வாய்ப்பில்லை ராஜா.
பேசாம இப்பவே பதவியை ராஜினாமா பண்ணிட்டு, கர்நாடகா தேர்தலுக்கு பரப்புரை செய்ய போகலாம். அங்கயும் ஆள் இல்லாம திண்டாடுறாய்ங்களாம், லக் இருந்தா, தேர்தல்ல சீட் கூட கிடைக்கலாம்.
இவர் தமிழகத்தின் தலைவலி. உண்ணும் உணவுக்கு நேர்மையானவரில்லை.