இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்டால் ஓட்டு போடுவார்களா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
மணிப்பூர் வன்முறை சம்பவத்தை கண்டித்து கடந்த ஜூலை 30 ஆம் தேதி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் பற்றி கூறிய கருத்துகள் மற்றும் அதற்காக சீமான் பயன்படுத்திய வார்த்தைகள் சர்ச்சையானது.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 2) செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்ப்பு எழுகிறது என்ற கேள்விக்கு,
“மன்னிப்பு கேட்டால் எனக்கு ஓட்டுப் போடுவார்களா? அநீதிக்கு எதிராக உருவாக்கப்பட்ட மார்கமே இஸ்லாம், கிறிஸ்துவம் ஆகிய இரண்டு சமயங்களும் தான். ஆனால் நீங்கள் அநீதிக்கு எதிராக எங்கு போராடிக் கொண்டிருக்கிறீர்கள்.
அநீதியைக் கண்டு அச்சம் கொள்ளாமல் துணிந்து எதிர்த்து போராடுகிறவன் எவனோ, அவனே உண்மையான ஜிகாத். இதை நான் சொல்லவில்லை நபிகள் நாயகம் சொன்னது.
அந்த வழியில் நின்று போராடியவர் ஒருத்தர் தமிழ்நாட்டில் இருந்தார் என்றால் எங்கள் அண்ணன் பழனி பாபா தான். மன்னிப்பு கேட்டால் எல்லாம் சரியாகி விடுமா?
எனக்கு உரிமை இருக்கு, உறவு, வலி, ஆதங்கம், ஆத்திரம் இருக்கிறது. அதனால் நான் பேசினேன். யார் வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஆனால் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவ மக்கள் செய்திருக்க கூடாது” என்று பதிலளித்தார்.
தொடர்ந்து ராஜ்கிரண் கருத்து குறித்த கேள்விக்கு, “அண்ணன் பெரியவர். ஆனால் என் வழி அவரிடம் இருக்கிறதா. சிஏஏ, என்.ஐ.ஏ என எல்லாவற்றுக்கும் என்னுடன் நின்று போராடினாரா?
முத்தலாக் தடை சட்டத்திற்கு வீதியில் நின்று போராடினாரா?. அவர் பெரியவர், அவர் மதத்தை நான் தவறாக பேசிவிட்டதாக நினைக்கிறார். அவர் முழுப்பேச்சையும் கேட்டாரா என்பது எனக்கு தெரியாது.
ஒரு மணி நேரம் என்ன பேசியுள்ளேன் என்று முழு பேச்சையும் கேட்க வேண்டும். ஒரு துண்டு காணொளியை பார்த்து விட்டு முடிவெடுக்க கூடாது. அண்ணன் என்னை திட்டுவதற்கோ கோபித்து கொள்வதற்கோ உரிமை இருக்கிறது” என்று தெரிவித்தார் சீமான்.
மோனிஷா
Comments are closed.