வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட திமுக தலைமையிடம் ஒரு சீட் கேட்கப்படும், கொடுக்கவில்லை என்றால் அடுத்தக்கட்ட முடிவு பொதுக்குழு கூட்டி எடுக்கப்படும் என்று தவாக தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். velmurugan interview to minnambalam
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், பண்ருட்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன் மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது கூட்டணி விவகாரம், எம்.பி தேர்தலில் போட்டியிட சீட் கேட்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விளக்கமளித்தார்.
“சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை எடுத்து வைத்து நான் பேசுகிறேன். அதுபோல நாடாளுமன்றத்திலும் எங்கள் கட்சியின் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு சீட் வேண்டும் என்ற தகவலை முதல்வரின் உயர்நிலைக் குழுவில் இடம்பெற்றுள்ள மூத்த நிர்வாகிகள் கவனத்துக்கு கொண்டு செல்ல இருக்கிறேன். கொடுக்க வேண்டிய இடத்தில் அவர்கள் இருக்கிறார்கள். கொடுக்கிறார்களா இல்லையா என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். எந்த மாதிரியான முடிவுகள் வந்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.
பதவிக்காக மட்டும் இந்த கூட்டணியில் நான் இடம்பெறவில்லை. இந்த அரசிடம் எனக்கு வேறு சிக்கல்கள் இருக்கிறது. அது தீர்க்கப்பட வேண்டும். குறிப்பாக என்னுடைய தொகுதியில் கலை அறிவியல் கல்லூரி வேண்டும். வேளாண்மை கல்லூரி உள்ளிட்ட திட்டங்கள் வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். பரந்தூர், என்.எல்.சிக்காக விவசாய நிலங்கள் கையப்படுத்தும் விவகாரத்தில் எனக்கும் இந்த அரசுக்கும் பேச்சுவார்த்தைகள் நீண்டு கொண்டிருக்கிறது. இதன் அடிப்படையில் தான் என் அரசியல் இருக்குமே தவிர, வெறும் இடம் கேட்டேன், கிடைக்கவில்லை என்பதற்காக எனது முடிவு மாறாது” என்றார்.
இன்று திமுக, நாளை அதிமுக என முடிவெடுத்தால் அது பதவிக்காக எடுத்த முடிவாக மாறிவிடும் என்று தெரிவித்த வேல்முருகன், “‘ஒரு தொகுதிக்காக ஏன் அங்கு போய் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். இங்கு வாருங்கள்’ என அதிமுக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. எம்.பி., எம்.எல்.ஏ சீட் வேண்டும் என்பது என்னுடைய நோக்கமல்ல. குரலற்றவரிகளின் குரலாக இருக்க வேண்டும் என்பதுதான் என் நோக்கம்” என கூறினார்.
அவரிடம் உங்கள் கட்சி செயற்குழு கூட்டம் முடிந்த பிறகு நீங்கள் செய்தியாளர்களைச் சந்தித்த போது, “திமுகவிடம் ஒரு தொகுதி கேட்போம். கொடுக்கவில்லை என்றால் எங்கள் முடிவை தெரிவிப்போம் என்று சொல்லியிருந்தீர்கள். ஆனால் தற்போது உங்கள் பேச்சில் ஒரு மென்மை தெரிகிறதே” என்று கேள்வி எழுப்பினோம்.
இதற்கு பதிலளித்த அவர், “அன்று ஏற்காட்டில் நடந்த மாநில செயற்குழுவில் இதுகுறித்து விவாதித்தோம். வேறொரு கட்சி இன்னொரு சீட் தருகிறது என்பதற்காக மட்டும் அவர்களுடன் சென்றால் அது ஏற்புடையதாக இருக்காது. சீட் கேட்பது என்பது நமது உரிமை.
நாடாளுமன்ற தேர்தலுக்கு சீட் கொடுக்கவில்லை என்று சொன்னால், அதை ஈடுகட்டும் வகையில் எங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் என்று சொல்வோம். கூட்டணி குறித்து வேறுமாதிரியான முடிவெடுக்கப்படும் என நான் சொல்லவில்லை. பொதுக்குழு கூட்டி முடிவெடுக்கப்படும் என்றுதான் சொன்னேன்.
எங்களுக்குள் ஆயிரம் மனகசப்புகள் இருக்கலாம். ஆனால் அதையெல்லாம் மறந்து பாஜக மீண்டும் வந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில் நான் திமுக தலைமையிலான கூட்டணியை ஆதரிக்கிறேன் என்று சொல்லியிருந்தேன்.
அதே நேரத்தில் மக்கள் சார்ந்த கோரிக்கைகளை இந்த அரசு தொடர்ந்து புறம்தள்ளி, ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை என்று சொன்னால் பொதுக்குழுவை கூட்டி முடிவை அறிவிப்போம் என்று சொன்னேன். கண்டிப்பாக எங்களுக்குள் மனக்கசப்புகள் இருக்கிறது ” என பதிலளித்தார்.
அதிமுக – பாஜக கூட்டணி உடைந்திருக்கும் நிலையில், இது திமுக கூட்டணிக்கு பின்னடைவாக இருக்குமா என்ற கேள்விக்கு, “பாமக, அதிமுக, பாஜக இன்னும் சில கட்சிகள் சேர்ந்த ஒரு வலுவான கூட்டணி உடைந்திருக்கும் போது, திமுக தலைமையிலான கூட்டணி தானே வலுவாக தனித்திருக்கும். எந்த கூட்டணி கட்சிகளும் உடையாமல் கூட்டணி கட்சிகளை முதல்வர் தனது அணியின் கீழ் வைத்திருக்கிறார். இந்த கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறும்” என கூறினார் வேல்முருகன்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
வீடியோவில் காண : https://www.youtube.com/watch?v=tbc3y4arKJI&t=100s
பேட்டி : பெலிக்ஸ் இன்பஒளி
தொகுப்பு: பிரியா
பிக்பாஸ் மிட் வீக் எவிக்ஷன்: வெளியேறப் போவது யார்?
‘மிஸ்டர் சந்திரமெளலி’ ரா.சங்கரன் மறைவு: பாரதிராஜா இரங்கல்!
velmurugan interview to minnambalam