|

சரத் பவார் – கெஜ்ரிவால் சந்திப்பில் பேசியது என்ன?

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரை மும்பையில் சந்தித்து குடிமைப்பணி அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அவசர சட்ட மசோதாவிற்கு எதிராக மக்களவையில் வாக்களிக்க கேட்டுக்கொண்டார்.

டெல்லியில் உள்ள குடிமைப்பணி அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது என்று உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இந்தநிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு மாறாக யூனியன் பிரேதசங்களில் குடிமைப்பணி அதிகாரிகளின் பணி நியமனம், பணி மாறுதல் விவகாரங்களில் மத்திய அரசுக்கு முழு அதிகாரம் வழங்கி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அவசர சட்டம் பிறப்பித்தார்.

இந்த அவசர சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், நாடாளுமன்றத்தில் மசோதாவிற்கு எதிராக வாக்களிக்க கோரியும் பாஜக அல்லாத தலைவர்களை அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார். முன்னதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து இந்த சட்டத்திற்கு எதிராக ஆதரவு கோரினார்.

இந்தநிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரை இன்று மும்பையில் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான், ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சந்தா ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “டெல்லி அரசுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்திற்கு எதிராக மாநிலங்களவையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி வாக்களிக்கும் என்று சரத்பவார் உறுதியளித்துள்ளார். பாஜக அல்லாத கட்சிகள் மாநிலங்களவையில் இந்த சட்டத்திற்கு எதிராக வாக்களித்தால் மசோதா நிறைவேறாது. இது கூட்டாட்சி கொள்கைக்கான போராட்டம். மக்களவையில் இந்த சட்ட மசோதாவை பாஜக அரசால் நிறைவேற்ற முடியவில்லை என்றால் 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்க முடியாது. இந்த சட்டத்திற்கு எதிராக பாஜக அல்லாத அனைத்து கட்சிகளின் உதவியையும் நாட உள்ளோம். இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசுவதற்காக நாளை நேரம் கேட்டுள்ளேன்” என்று தெரிவித்தார்.

சரத்பவார் செய்தியாளர்களிடம் பேசியபோது, “பாஜக அரசால் நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்து வந்துள்ளது. இதனை நாம் டெல்லியுடன் மட்டும் சுருக்கி பார்த்து விட முடியாது. தேசியவாத காங்கிரஸ் மற்றும் மகாராஷ்டிரா மக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவளிப்பார்கள். ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளிக்க மற்ற கட்சிகளுடனும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். பாஜக அல்லாத அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்க முயற்சி செய்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts