”மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் அவர்களுக்கு திருமணம் கூட நடக்காது” என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச எதிர்க்கட்சி தலைவரும், சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதவ் நேற்று (மார்ச் 25) தனது சொந்த கிராமமான சைஃபாயில் தனது கட்சியினருடன் ஹோலி பண்டிகையை கொண்டாடினார்.
சிலருக்கு ஒரே ஒரு நிறம் மட்டுமே பிடிக்கும்!
அப்போது அவர் உரையாற்றுகையில், “ஹோலி பண்டிகை ஒருவரையொருவர் கொண்டாடுவதற்கும் அரவணைப்பதற்கும் வாய்ப்பளிக்கிறது. அநீதிக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என்று நீங்களும் நானும் இந்த சமயத்தில் உறுதிமொழி எடுக்க வேண்டும்.
ஹோலி பல வண்ண பண்டிகை. ஆனால் நம் நாட்டில் சிலருக்கு நிறங்கள் பிடிக்காது, ஒரே ஒரு நிறத்தையே பிடிக்கும். ஆனால், இந்தியா பலதரப்பட்ட மக்களின் பல்வேறு சித்தாந்தங்களையும், மாறுபட்ட சிந்தனைகளையும் கொண்டிருக்கும் ஒரு ஜனநாயக நாடு என்பதே உண்மை.
திருமணம் நடைபெறாது!
உத்தரபிரதேசத்தில் வினாத்தாள் கசிய விடாமல் அரசு தேர்வு நடப்பது இல்லை. வேலை கொடுக்க வேண்டும் என்றால், இடஒதுக்கீடும் கொடுக்க வேண்டும். ஆனால் உயர்சாதியினருக்கு மட்டுமே அரசு வேலை கொடுக்க விரும்பும் பாஜக அரசு, வேண்டுமென்றே வினாத்தாள்களை கசியவிடுகிறது.
மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால், இளைஞர்களுக்கு வேலை கிடைக்காது. வேலைக்காக காத்திருந்து வயதாகி விடும் என்பதால் அவர்களுக்கு திருமணம் கூட நடைபெறாது.
கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் இதுவரை ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (என்சிஆர்பி) தரவுகள் தெரிவிக்கின்றன. ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நாடு எப்படி வளர்ந்த நாடாக மாற முடியும்?
பாஜகவின் வழிப்பறி தான் தேர்தல் பத்திரம்!
தேர்தல் பத்திர நிதி எந்த கட்சிக்கு அதிகம் சென்றது என்பது அனைவருக்கும் தெரியும். நன்கொடைகள் என்பது தானாக முன்வந்து அல்லது மக்களுக்கு உதவுவதற்காக வழங்கப்படுகின்றன. ஆனால் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை போன்றவற்றின் மூலம் அழுத்தம் கொடுத்து பணத்தை பெறுவது என்பது வழிப்பறியாகவே கருதப்படும். தேர்தல் பத்திர விவகாரத்தில் பாஜக செய்தது வழிப்பறி தான்.
பாஜகவுக்கு யாராவது பணம் கொடுத்தால் அது நன்கொடை, வேறு யாருக்காவது கொடுத்தால் அது கருப்பு பணம் என்று மோடி, அமித் ஷா கருதுகின்றனர். வரும் தேர்தலில் பாஜக வீழ்த்தப்பட வேண்டும்” என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ராம் சரணுடன் இணைந்த புஷ்பா இயக்குநர்!
”மியூசிக் அகாடமியில் அனைத்து தரப்பினரும் வேண்டும்” : ரஞ்சனி, காயத்ரி கடிதம்!